ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை சமாதானம் ஆகாது – பிடிவாதத்தைத்தான் காட்டுகிறது. ‘பெருமாள்’ போய் ‘பெத்தபெருமாள்’ ஆன கதைதான் இது! என்று திராவிட கழகத்தின் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
சமீபத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி “தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வது தான் சிறந்தது” என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் டிவிட்டரில் தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் இந்தியாவில் டிரண்டானது.
தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழில் ‘தமிழக ஆளுநர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பொங்கல் வாழ்த்து குறித்து வெளியான செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு ஆளுநர்” என்று குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் “காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பைக் குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்” என்று தமிழ்நாடு பெயர் சர்ச்சை தொடர்பாக ஆளுநர் இன்று விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆளுநரின் விளக்கத்தைப் பலரும் ஏற்க மறுப்பு தெரிவித்த நிலையில், திராவிட கழக தலைவர் கி. வீரமணி, தமிழகம் என்று கூறிய ஆளுநர் தற்போது புது விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியமென்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஆளுநர் மாளிகையிலிருந்து விளக்க அறிக்கை ஒன்று இன்று (ஜனவரி 18) வந்துள்ளது.
தமிழகம் என்று நான் ஏன் கூறினேன் என்று விளக்கவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது ஏன் என்பது முக்கிய கேள்வி.
காசி மற்றும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பைக் குறிக்க ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன் என்று விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சிக்கும், இந்த வெளிப்பாட்டுக்கும் உள்ள சம்பந்தம் என்ன? தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது ‘தமிழ்நாடு’ என்ற பெயர்.
தமிழ்நாடு அரசின் இலச்சினையிலும் தமிழ்நாடு என்றுதானே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆளுநர் அதற்கு மாறாகக் கூறுவது அரசமைப்புச் சட்ட விரோதமான செயல் அல்லவா?
இந்த விளக்க அறிக்கையிலும்கூட அந்தக் காலத்தில் ‘தமிழ்நாடு’ என்று இருக்கவில்லை என்று மீண்டும் ஒரு புது சர்ச்சையை எழுப்புகிறார்.
இதிலிருந்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை சமாதானம் ஆகாது – பிடிவாதத்தைத்தான் காட்டுகிறது. ‘பெருமாள்’ போய் ‘பெத்தபெருமாள்’ ஆன கதைதான் இது!
பரிபாடல், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெற்று இருப்பதைத் தமிழ் அறிஞர்கள் பலரும் எடுத்துக் காட்டிய பிறகும், ஆளுநர் வேறு மாறாகக் கூறுவது ஏன்? ஆளுநர் என்ன தமிழ் இலக்கியங்களைக் கற்ற புலவரா? ஆய்வாளரா?
தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சியில் மட்டுமல்ல – பெரும் எதிர்ப்பு வெடித்த நிலைக்குப் பிறகும்கூட, ஆளுநரின் பொங்கல் வாழ்த்தில், ‘தமிழகம்’ என்று குறிப்பிட்டதோடு, தமிழ்நாடு அரசின் இலச்சினையில் தமிழ்நாடு என்ற பெயர் வருகிறதே என்பதற்காக, அந்த இலச்சினையையே எடுத்தது ஏன்?
காசி சங்கம நிகழ்ச்சியில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் உண்மையில் பேசியது என்ன?
”தமிழ்நாட்டில் வித்தியாசமாக ஓர் அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றிற்கும் தாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள்…. தமிழ் நாடு என்பதைவிட, தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களின் பொய்ப் பரப்புரையை நாம் முறியடிக்கவேண்டும்” என்று ஆளுநர் பேசவில்லையா? இது அப்பட்டமான அரசியல் பேச்சு அல்லவா? அரசியல் பேசுவது ஆளுநருக்கான பணியா?,
‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை’ எனும் வாதங்கள் விவாதப் பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என்று விளக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கை விளக்க அறிக்கை இல்லை – குளிக்கப் போய் சேற்றில் விழுந்த கதையாகவே இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்; இனி புரிந்துகொள்ள வேண்டியது ஆளுநர்தான்!
இனிமேலாவது ஆளுநர் ‘தமிழ்நாடு’ என்று சொன்னால் சரி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்!
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல்!