மாலத்தீவிற்கு தப்பிச் சென்றார் கோத்தபய ராஜபக்சே

Published On:

| By Guru Krishna Hari

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌சே இன்று(ஜூலை13) அதிகாலை அண்டை நாடான மாலத்தீவுக்கு சென்றடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆளும்கட்சிக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஏற்கெனவே பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்‌சே மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த பலரும் அரசு பதவிகளில் இருந்து விலகினர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் கோத்தபய ராஜபக்‌ஷேவின் அதிபர் மாளிகை முற்றுகையிடப்பட்டது. மேலும் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இருவரும் தப்பியோடியதாக கூறப்பட்டது.

மக்களின் போராட்டத்தை உணர்ந்து பிரதமர் ரணில் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் பதவியை ராஜினாமா செய்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இலங்கையை விட்டு வெளியேறும் வரை அதிபர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்று கோத்தபய ராஜபக்‌சே அறிவித்திருந்தார். மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சித்து வந்தார்.

கடந்த திங்கள்கிழமை இரவு, ராஜபக்சேவும் அவரது மனைவியும் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் விமான நிலைய அதிகாரிகள் அதற்கு மறுத்துவிட்டனர். பல மணி நேரம் போராடியும், அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில் அருகிலுள்ள இராணுவத் தளத்தில் தஞ்சம் அடைந்தார் கோத்தபய.

நேற்று அவரது சகோதரரான முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌சேவும் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து தப்பி செல்ல முயற்சித்தார். அங்கிருந்த மக்கள் அவரை கண்டுகொண்டு தப்பி செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து பசில் ராஜபக்‌சே வெளிநாடு செல்ல விமான நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதற்கிடையே, ‘கோத்தபய இலங்கையின் அண்டை நாடொன்றில் இருக்கிறார்’ என்று சபாநாயகர் நேற்று முன் தினமே தெரிவித்திருந்தார். தனது ராஜினாமா கடிதத்தை இன்று (ஜூலை 13) அவர் அளிப்பார் என்றும் சபாநாயகர் கூறியிருந்தார்.

இந்த பின்னணியில்… கோத்தபய தனது குடும்பத்துடன் கொழும்பில் இருந்து ராணுவ விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பி சென்றுள்ளார். அங்கு தரையிறங்க மாலத்தீவின் சபாநாயகர் முகமது நஷீத் உதவியுள்ளார். 2016ம் ஆண்டு அரசியல் நெருக்கடி காரணமாக மாலத்தீவில் இருந்து தப்பிய அவருக்கு இலங்கை அடைக்கலம் கொடுத்தது. அதற்கு கைமாறாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌சேவிற்கு அவர் உதவியுள்ளார். மேலும் இலங்கையில் நடந்து வரும் மக்களின் போராட்டத்தை கடுமையாக விமர்சித்து வந்தார் முகமது நஷீத்.

முன்னதாக கோத்தபய ராஜபக்‌சே இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு தப்பி செல்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அதற்கு இருநாடுகளும் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share