நாடு திரும்பினார் ராஜபக்சே: ராணுவத்தைக் குவித்த இலங்கை அரசு!

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மீண்டும் நாடு திரும்பியுள்ளதை அடுத்து, இலங்கையின் முக்கிய இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்த இலங்கையில், அத்தியாவசிய பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்தன.

இதனால், இலங்கை அரசு பல நாடுகளிடம் கடன் உதவி பெற்றது. இலங்கையின் நிலைமையை ஓரளவுக்கு சமாளிக்கும் வகையில், இந்தியாவும் உதவி செய்தது. தமிழகத்திலிருந்தும் பொருட்கள் அனுப்பப்பட்டன.

அதேநேரத்தில் இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால், அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

ராஜபக்சே பதவி விலகக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போராட்டம் கடந்த ஜூலை 9ம் தேதி உச்சகட்டத்தை எட்டியது.

gotabaya rajapaksa returned

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றினர். அந்த மாளிகைக்குள் உள்ளே நுழைந்த மக்கள் அதிபரின் ரகசிய அறைகளையும் பார்வையிட்டு மகிழ்ந்ததுடன் பொருட்களையும் சூறையாடினர்.

மக்களின் போராட்டத்தால், கடந்த ஜூலை 13ம் தேதி அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கை விமானப் படை விமானம் மூலமாக மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார்.

மாலத்தீவில் கோத்தபயாவுக்கு இலங்கையர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் மாலத்தீவில் தஞ்சமடைய முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது.

பின் அங்கிருந்து தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் சென்று அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

சிங்கப்பூர் அரசு முதலில் 14 நாட்கள், ராஜபக்சேவை தங்கியிருக்க அனுமதித்தது. பின்னர் ஆகஸ்ட் 11ம் தேதி வரை தங்கி இருக்கலாம் என அனுமதி நீட்டிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அனுமதியை நீட்டிக்க சிங்கப்பூர் அரசு மறுத்துவிட்டது.

gotabaya rajapaksa returned

சிங்கப்பூரில் தங்கியிருந்த ராஜபக்சேவை, கைது செய்ய பல்வேறு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தின.

இங்கிலாந்து எம்.பிக்களும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி இருந்தனர். இந்தச் சூழ்நிலையில், சிங்கப்பூரில் இருந்து தப்பிச் சென்று தாய்லாந்தில் தஞ்சமடைந்தார். அங்கு 90 நாட்கள் அவர் வசிக்க தாய்லாந்து அரசு அனுமதி அளித்தது.

இந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே நாடு திரும்பவும், இங்கு அவர் பாதுகாப்புடன் வசிக்கவும் ஏற்பாடுகள் செய்யுமாறு, ராஜபக்சே தலைமையிலான இலங்கை பொதுஜன பெருமுன கட்சியினர் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதை ஏற்று, ராஜபக்சே நாடு திரும்ப ரணில் அரசு ஏற்பாடுகளைச் செய்தது. இதற்கிடையே அவர், அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கும் முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், சுமார் 2 மாதங்கள் கழித்து கோத்தபய ராஜபக்சே நள்ளிரவு இலங்கை திரும்பியுள்ளார்.

தாய்லாந்தில் இருந்து இலங்கையின் பண்டாரநாயக்கே சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த ராஜபக்சேவை, ஆளுங்கட்சி எம்.பிக்கள், மந்திரிகள் வரவேற்றனர்.

பின்னர் விமான நிலையத்திலிருந்து அவர் பலத்து பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்பதை இலங்கை அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

அதேநேரத்தில், கொழும்புவின் விஜிர்மா மாவதா பங்களா பகுதியில் பாதுகாப்பு படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ராஜபக்சே அங்கு தங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. ராஜபக்சே மீண்டும் நாடு திரும்பியுள்ளதை அடுத்து, இலங்கையின் முக்கிய இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

ஜெ.பிரகாஷ்

பிரதமர் பதவி விலகும் முன் ராஜபக்சே பற்றவைத்த வன்முறை!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts