கோபாலபுரம்….
கடந்த அரை நூற்றாண்டு தமிழக அரசியலில் கலைஞர் என்ற வார்த்தையை எப்படி தவிர்க்க முடியாதோ அதேபோல கோபாலபுரம் என்ற வார்த்தையையும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.
இந்தியாவின் அனேக மாநில முதல்வர்கள் ஆடம்பர பங்களாக்களிலேயே தங்கியிருந்த நிலையில்… தெருவீடு அதாவது ஸ்ட்ரீட் ஹவுஸ் ஒன்றில் தங்கியிருந்து அந்த வீட்டையே தன் அடையாளமாக மாற்றிக் கொண்டவர் கலைஞர் கருணாநிதி.
அவரது மறைவுக்குப் பின் இப்போது கூட திமுகவை விமர்சிப்பவர்கள் கோபாலபுரம் கோபாலபுரம் என்று பிரஸ்மீட்டுகளில் உரக்க பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கொடி பிடித்து வரும் சாதாரண திமுக தொண்டர் முதல் இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் பதவி வகித்த தலைவர்கள் வரையில் பலரையும் வரவேற்று மகிழ்ந்திருக்கிறது கோபாலபுரம் இல்லம்.
தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு பல மாநிலங்கள் இன்றும் பின்பற்றி வரும் எத்தனையோ மக்கள் நலத் திட்டங்களை இந்த கோபாலபுரம் வீட்டின் மாடியில் அமர்ந்துதான் கலைஞர் சிந்தித்துப் பட்டைத் தீட்டியிருக்கிறார்.
இந்தியாவின் ஆட்சிகளை நிர்ணயிக்கும் தேர்தல் கூட்டணிகள் கோபாலபுரத்தில் மையம் கொண்டிருந்த காலம் உண்டு.
இந்த இடத்தில் ஒரு மணி நேரம் காத்திருந்தால் கலைஞரின் கண்ணில் சிக்கி, ‘யாருய்யா… என்னன்னு கூப்பிட்டு கேளு’ என்ற வார்த்தைகளுக்கு இலக்காகி அவரை சந்திக்க முடியும் அளவுக்கு பலருக்கு சிபாரிசுக் களமாக திகழ்ந்தது கோபாலபுரம் வீட்டின் வாசல்.
இத்தனை சிறப்பு பெற்ற கோபாலபுரம் வீட்டின் இன்னொரு பரிமாணம் இன்று வெளிப்பட்டிருக்கிறது.
கலைஞர் இந்த கோபாலபுரம் வீட்டை 1955 ஆம் ஆண்டு சரபேஸ்வரர் என்பவரிடம் இருந்து வாங்கியிருக்கிறார்.
அந்த சரபேஸ்வரரின் பேத்தி சரோஜா சீதாராமன் தனது பால்யம் முதல் கல்யாணம் வரை துள்ளி விளையாடிய இந்த கோபாலபுரம் வீட்டை பார்க்க அமெரிக்காவில் இருந்து 67 ஆண்டுகள் கழித்து இன்று (ஆகஸ்டு 28) வந்திருக்கிறார்.
அவருக்கு காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. அதை அவரே சொல்கிறார்….
“எல்லாருக்கும் நமஸ்காரம். நாங்க கோபாலபுரத்துல இந்த வீட்ல ஆறு வயசுலேர்ந்து இருந்துருண்டிருந்தோம். எனக்கு இங்கதான் கல்யாணம் ஆச்சு. கல்யாணத்தும்போது கருணாநிதி வந்திருந்தார்.
1955 இல எனக்கு கல்யாணம் ஆச்சு. அப்ப நாங்க வீட்டை கருணாநிதிக்கு வித்திருந்தோம். என் கல்யாணத்தை இந்த வீட்லயே நடக்கணும்கறதுக்காக கருணாநிதிகிட்ட ரெண்டு மாசம் டைம் கேட்டிருந்தோம்.
அவர் சரின்னுட்டார். என் கல்யாணத்துக்கு கருணாநிதியும் வந்திருந்தார். அதுக்கப்புறம் இந்த வீட்டை எனக்கு பார்க்கணும்னு ரொம்ப நாளா ஆசை. 67 வருஷம் கழிச்சு திருப்ப இப்ப வந்திருக்கேன் இங்க.
முதலமைச்சரே நம்மளோட வந்தார். வீடெல்லாம் சுத்திக் காட்டினார். அதுமட்டுமில்ல பஜ்ஜி காபி வடை எல்லாம் கொடுத்து உபசாரம் பண்ணார். உக்காந்துண்டு நன்னா பேசிண்டு இருந்தார். நாங்கள்லாம் அமெரிக்காவுல இருக்கோம். வாங்கோனு சொல்லியிருக்கோம்.
ஆத்து வாசல்லேர்ந்து மாடிய ஒரு பார்வை பாத்துட்டு போலாம்னு பாத்தபோது, முதலமைச்சரே நம்மளை மாடிக்கு அழைச்சிண்டு போயி அரைமணி நேரம் செலவு பண்ணி ஒவ்வொரு ரூமா சுத்திக் காட்டினார்.
வீடெல்லாம் ரொம்ப மாத்தலை. எனக்கு ரொம்ப சந்தோஷம். இதை மறக்கவே முடியாது. எனக்கு இப்ப எண்பத்தாறு வயசு ஆரது. அவாள்லாம் சௌக்கியமா இருக்கணும். முதலமைச்சரின் தங்கை எனக்கு நமஸ்காரம் பண்ணினா.
என் ஆசீர்வாதம் முதலமைச்சருக்கு எப்பவும் உண்டு. அவர் சௌக்யமா இருக்கணும். சந்தோஷமா இருக்கணும். அதான் என் ஆசை” என்று நெகிழ்ந்து தனது கோபாலபுரம் ’ஆத்து’ வாசலில் பேட்டி கொடுத்தார் சரபேஸ்வரரின் பேத்தி சரோஜா சீதாராமன்.
அமெரிக்காவில் இருந்து ‘ஹவுஸ் ஓனர்’ பேத்தி வந்திருக்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டதுமே மகிழ்ந்து போய் வரச் சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவர்களோடு இந்த வீட்டில் தான் குழந்தைப் பருவத்தில் துள்ளி விளையாடிய மலரும் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
இந்த அற்புதமான தருணம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்,
“வீடு என்பது பலரது கனவு! கனவு இல்லத்தைச் சம்பாதிக்கும்போது நாம் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது! நம்மோடும் நம் குடும்பத்தோடும் உறவாகி, நம் அடையாளமாகவே வீடுகள் மாறிவிடுகின்றன.
எங்கள் குடும்பத்தின் அடையாளம் கோபாலபுரம் வீடு! தலைவர் கலைஞர் திரைத்துறையில் வெளிப்படுத்திய எழுத்தாற்றலின் வெகுமதியே கோபாலபுரம் வீடு.
இந்த வீடு, எங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இன்னொரு குடும்பத்துக்கும் உறவாகி இருந்தது. தலைவர் கலைஞர் கோபாலபுரம் வீட்டை திரு. சரபேஸ்வரர் அவர்களிடம் 1955-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாங்கினார்.
அதே ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது பேத்தியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வீட்டை விலைக்கு வாங்கியிருந்தாலும், சரபேஸ்வரர் தனது பேத்தியின் திருமணத்தைக் கோபாலபுரம் வீட்டிலேயே நடத்திட ஒப்புக்கொண்டார் தலைவர் கலைஞர்.
அன்று தனக்குத் திருமணமான கோபாலபுரம் வீட்டைக் காண, அமெரிக்காவிலிருந்து திரும்பிய திருமிகு. சரோஜா சீதாராமன் அவர்கள் விரும்பியதை ஊடகங்கள் வழியே அறிந்தேன்.
அவரது குடும்பத்தினரைக் கோபாலபுரம் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். இரு குடும்பங்களுக்கும் உறவான வீடு நட்புப் பாலமாய் உயர்ந்து நின்று எங்களை அன்போடு பார்த்தது” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
நாம் ஒரு வீட்டை வாங்கிவிட்ட போதிலும், அந்த வீட்டின் உரிமையாளராக இருந்தவரை ஹவுஸ் ஓனர் என்றே உரிமையாக அழைப்போம்.
அதுபோல கலைஞர் இந்த வீட்டை வாங்கும் முன் அதன் உரிமையாளராக இருந்தவரின் பேத்தியாக இருந்தபோதும் ஹவுஸ் ஓனர் குடும்பமா என்று பார்த்து பார்த்து அவர்களை உபசரித்திருக்கிறார் கலைஞரின் மகள் செல்வி.
ஆச்சாரமான அய்யர் குடும்பத்தின் ’ஆத்து’ என அழைக்கப்பட்ட கோபாலபுரம் இல்லம்… கலைஞர் வாங்கிய பிறகு இந்திய அரசியலுக்கே வழிகாட்டியாகும் அடையாளமாக மாறியிருக்கிறது. வரலாறு எவ்வளவு விசித்திரங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறது பாருங்கள்!
–ஆரா
‘உங்கள் சொற்படியே நடக்கிறேன்’ : கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின்