ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 15 நபர்கள் மீது குண்டாஸ் வழக்குப் போடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கை விசாரித்த காவல்துறை, ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, அவரது மனைவி பொற்கொடி, பல்வேறு கட்சிகளை சார்ந்த முன்னாள் நிர்வாகிகள் உள்பட 27 நபர்களைக் இதுவரை கைது செய்துள்ளது.
காவல்துறை அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவந்த நிலையில், சில தினங்களுக்கு முன் இவ்வழக்கில் கைதான 10 நபர்கள் மீது குண்டாஸ் வழக்குப் போடப்பட்டது.
இந்த நிலையில், கைதானவர்களில் மேலும் 15 நபர்களின் மீது குண்டாஸ் வழக்கு போடப்பட்டுள்ளது. இதில் பொன்னை பாலு, சந்தோஷ், ராமு, திருமலை போன்றவர்கள் அடக்கம். இந்த குண்டாஸ் வழக்குகள் சென்னை காவல்துறை ஆணையர் அருணின் உத்தரவின் பெயரில் போடப்பட்டுள்ளது.
அதன்படி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
முன்னதாக சென்னை காவல் ஆணையர் அருண் “இந்த வழக்கின் 90 சதவீத விசாரணை முடிவடைந்துவிட்டது. தேடப்பட்டு வருகிற முக்கிய ரவுடியான சம்பவம் செந்தில் உட்பட 3 நபர்களை இன்னும் கைது செய்ய வேண்டியுள்ளது. வழக்கில் கைதானவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அடுத்த வாரத்திற்குள் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்று கடந்த 5ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மாற்றுத்திறனாளி மாணவர்களின் உதவித்தொகை இருமடங்காக உயர்வு: ஸ்டாலின் உத்தரவு!
அமெரிக்கா சென்று என்ன பயிற்சி எடுத்தார் அஸ்வின்? – சதம் விளாசிய பின்னணி இதுதான்!