தூர்வாரும் பணியை தொடர்ச்சியாகச் செய்து மண்ணையும் மக்களையும் காப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜூன் 9) ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “2022-23 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் காவிரி பாசனப்பகுதிகளில் கால்வாய்களை தூர்வாருவதற்காக 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடைமடை வரை தண்ணீர் செல்ல வசதியாக தூர்வாரும் பணிகளும் துரிதமாக நடந்தது. மேட்டூர் அணை மிக சீக்கிரமாக மே மாதம் 24-ஆம் நாள் அன்று முன்கூட்டியே திறக்கப்பட்டது.
இருந்தாலும் தண்ணீர் வந்து சேருவதற்கு முன்பே 4ஆயிரத்து 964 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்களில் அனைத்து தூர்வாரும் பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டன. விவசாயிகளுக்கான இடுபொருட்களும், கூட்டுறவு வங்கி கடன்களும் முழுமையாக கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதன் விளைவாக 2021-22ஆம் ஆண்டு சாதனையை முறியடிக்கும் வகையில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையாக 2022-2023-ஆம் ஆண்டில் 5.36 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியும் -13.53 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் 41.45 இலட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. வேளாண் புரட்சியின் தொடர்ச்சியாக இது அமைந்தது.
இந்த ஆண்டும் இதே போன்ற திட்டமிடுதலை தமிழ்நாடு அரசு செய்தது. நீர்வளத்துறை மூலமாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதற்காக 90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 4 ஆயிரத்து 773 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் 96% பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
எஞ்சிய பணிகளும் சில நாட்களில் முழுமையாக முடிக்கப்படும். இத்தோடு வேளாண் பொறியியல் துறை மூலமாக 5 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 146 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதில் 651 கிலோ மீட்டர் தூர்வாரும் பணிகள் முடிந்துள்ளது. எஞ்சியுள்ள 45 சதவிகித தூர்வாரும் பணிகள் தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக சிறிய கால்வாய்களை தூர்வாரும் பணிகள் 27.17 கோடி செலவில் ஆயிரத்து 433 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டது.
8.13 கோடி ரூபாய் செலவில் 25 எண்ணிக்கையிலான குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டும் மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கான குறிப்பிட்ட தேதியான ஜூன் 12 நாள் அன்று நான் மேட்டூர் சென்று அணையை டெல்டா பாசனத்திற்காக திறந்து வைக்க இருக்கின்றேன்.
சென்ற ஆண்டுகளில் நாம் சாதித்து காட்டியது போலவே, மேட்டூர் அணையின் நீர் காவிரி டெல்டா பகுதிக்கு வருவதற்கு முன்னதாகவே நான் ஏற்கெனவே உங்களிடம் கூறியபடி அனைத்து தூர்வாரும் பணிகளும் சிறப்பாக முடிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் டெல்டா விவசாயிகள் நீரைச் சிக்கனமாக பயன்படுத்தி நெல் உற்பத்தியில் புதியதோர் சாதனை படைப்பார்கள் என உறுதியாக நம்புகின்றேன்” என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மேலும், கழக ஆட்சியில் உற்பத்தி அதிகம் ஆகி இருக்கிறது. பாசனப் பரப்பு அதிகம் ஆகி இருக்கிறது. இவை அனைத்தும் வேளாண் துறையில் மாபெரும் புரட்சியைக் காட்டுகிறது. தூர்வாரும் பணியை தொடர்ச்சியாகச் செய்து மண்ணையும் மக்களையும் காப்போம் என தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஒடிசா ரயில் விபத்து: சடலங்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிப்பு!