கடந்த ஜூன் 27 ஆம் தேதி சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் புறப்பாடு முனையத்திற்குள் இருக்கும் சபீர் அலி என்பவரின் கிப்ட் சென்டர் கடையை சோதனை செய்தனர். அதையடுத்து சபீர் அலி, இரு விமானப் பயணிகள் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.
சில நாட்களாகவே சபீர் அலியின் கடையை கண்காணித்து வந்த சுங்க புலனாய்வுத் துறையினர் அவரது கடை ஊழியரிடம் ஒரு கிலோ தங்கத்தை பவுடர் வடிவத்தில் கைப்பற்றினர். அதாவது விமானத்தில் சென்னைக்கு வந்திறங்கிய பயணியிடம் இருந்து கழிவறையில் தங்கத்தைப் பெற்று அந்த ஊழியர் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த ஊழியர், அப்பயணி என இருவரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
இது ஏதோ தனிப்பட்ட சம்பவம்தான் என்று நினைத்த சுங்கத் துறையினர் இது தொடர்பாக விசாரணையைத் தொடர்ந்தபோதுதான்… தங்கக் கடத்தலை ப்ரஃபஷனலாக செய்து வரும் ஒரு கும்பலின் திட்டமிட்ட பெரும் நெட்வொர்க் இதில் இருப்பது தெரியவந்திருக்கிறது.
யார் இந்த சபீர் அலி? இவர் எப்படி கடையை பெற்றார் என்று சுங்கப் புலனாய்வுத் துறையினர் விசாரித்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் யூடியுபர் சபீர் அலி என்பவர் பொம்மை பொருட்கள் விற்பனை செய்யும் ‘AirHub’ என்ற கடையை இந்திய விமான நிலைய ஆணையத்தின் அனுமதி பெற்று நடத்தி வருகிறார்.
அந்த கடையில் ஏழு பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் விமான நிலையம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதற்கான பி.சி.ஏ.எஸ் எனப்படும் பாஸ் வாங்கியுள்ளனர்.
சபீர் அலி இரண்டு மாதங்களுக்கு முன்பு விமான நிலைய ஆணையத்தின் (AAI) மூன்றாம் தரப்பு நிறுவனமான வித்வேதா PRG-க்கு பெரும் தொகையை செலுத்தி கடையை வாடகைக்கு எடுத்திருக்கிறார். அந்தக் கடைக்கு ஏழு இளைஞர்களை பணியமர்த்தியிருக்கிறார்.
சென்னை, இலங்கை மற்றும் வெளிநாடுகளில் தங்கியுள்ள தங்கக் கடத்தல் கும்பல் ஒன்றுசேர்ந்துதான் விமான நிலையத்திற்குள் ஒரு கடையை வாடகைக்கு எடுக்க சபீர் அலிக்கு நிதியுதவி செய்திருக்கிறது என்றும் அறிந்தனர் சுங்கப் புலனாய்வுத் துறையினர்.
இந்த கடை எடுப்பதற்காக விமான நிலைய அதிகாரி செல்வநாயகத்திடம் சிபாரிசு செய்தது வித்வேதா பி.ஆர்.ஜி. நிறுவனத்தின் முக்கிய அலுவலரான பிரித்வி. இந்த பிரித்வி சாதாரண ஆள் இல்லை. பாஜகவின் தேசிய அளவிலான தொடர்புகளைப் பெற்றவர் என்பதுதான் இந்த தகவலை அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக்கியிருக்கிறது.
வெளிநாடுகளில் இருந்து தங்கக்கட்டிகளை கடத்தி வரும் பயணிகள் விமான நிலைய பாதுகாப்பு பகுதியில் உள்ள கழிவறையில் தங்கத்தை மறைத்துவைத்துவிட்டு, சபீர் அலிக்கு தகவல் தெரிவித்துவிடுவார்கள் என்றும்… சபீர் அலி, தனது ஊழியர்களை கழிவறைக்கு அனுப்பி, சுங்க அதிகாரிகள் சோதனையில் சிக்காமல் தங்ககட்டிகளை மறைத்து எடுத்துவந்து கடத்தல் கும்பலிடம் கொடுத்து பிஸினஸ் செய்து வந்துள்ளார். இந்த கடத்தல் கடந்த இரண்டு மாதங்களாக நடந்துள்ளது.
இந்த விவகாரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியவர, கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த ஒருவர், விமான நிலையத்தில் பொம்மை கடை நடத்தி வரும் சலீம் உள்ளிட்ட 9 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.167 கோடி மதிப்புள்ள 267 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
கடத்தல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்!
சபீர் அலி விமான நிலையத்தில் கடை வைக்க வித்வேதா பிஆர்ஜி நிறுவனத்தின் பணியாளர் பிரித்வி, விமான நிலைய இணை பொது மேலாளர் செல்வ விநாயகத்திடம் சிபாரிசு செய்துள்ளார். பிரித்வியின் பரிந்துரையின் அடிப்படையிலே சபீர் அலிக்கு விமான நிலையத்தில் கடை ஒதுக்கப்பட்டுள்ளது.
வித்வேதா பிஆர்ஜி நிறுவனம் தான் சென்னை விமான நிலையத்தில் சில்லறை கடைகளுக்கு இடம் ஒதுக்குகிறது. இதனை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் உள்ள செல்வவிநாயகம் வீடு மற்றும் சென்னையில் உள்ள பிரித்வியின் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சனையின் காரணமாக பிருத்வி தனது ராஜினாமா கடிதத்தை பிஆர்ஜி நிறுவனத்திடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சுங்கத்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
யார் இந்த பிரித்வி?
தங்க கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய பிரித்வி தமிழக பாஜகவில் மாணவரணியில் மாநில பதவியில் இருந்து வந்துள்ளார். இவரது எக்ஸ் வலைதள கணக்கை பிரதமர் மோடி பின்தொடர்கிறார். முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலிடம் பிரித்வி உதவியாளராக பணியாற்றியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பிரித்வி மிக நெருக்கமானவர் என தெரிகிறது. தனது மேல்படிப்புக்காக லண்டன் செல்லும் அண்ணாமலையின் பயண விவரங்களை பிரித்வி ஒருங்கிணைப்பதாக சொல்கிறார்கள். மேலும், கடத்தல் வழக்கில் தொடர்புடைய பிரித்விக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேலிட புள்ளிகள் சிலரை தொடர்புகொண்டு பேசியதாகவும் பாஜக வட்டாரங்களிலேயே பேசப்படுகிறது.
பாஜகவில் புயலை கிளப்பிய கடத்தல் விவகாரம்!
பாஜகவின் வார் ரூமில் பணியாற்றும் நபர்கள் அமலாக்கத்துறை வழக்குகள், தங்கம் கடத்தும் நபர்களை மிரட்டி பணம் வசூலிக்கிறார்கள் என்று பாஜக சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் கடந்த ஜூன் 7-ஆம் தேதி தனது எக்ஸ் வலைதள பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அவர் ஜூன் 19-ஆம் தேதி பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும், இந்த கடத்தல் தொடர்பாக வலதுசாரி ஆதரவாளர் மாரிதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “தங்க கடத்தல் தொட்டு எல்லா கடத்தல்கள் செய்பவனை கட்சி உள்ளே சேர்த்த விதத்தில் ஒரு விசயத்தில் தமிழக பாஜக நீண்டகால பற்றாளர்கள் சித்தாந்தவாதிகளிடம் இருக்கும் கேள்வி “எல்லாரும் அரசியல் கட்சியில் சேர்ந்த பின் கொள்ளை அடிக்க திட்டம் போடுவான். இங்கே கொள்ளை அடிச்சவன், அடிக்க திட்டம் போட்டவனா பார்த்து தான் அரசியல் உள்ளேயே வந்துள்ளார்கள்.
அதுவும் கடந்த 4 வருடம் தமிழக பாஜக ஆருத்ரா தொட்டு இன்று 200 கோடி தங்க கடத்தல் வரை”. இது தேசியவாதிகளிடையே பாஜக மீது நம்பிக்கை கொண்ட நல்ல மனிதர்கள் பலருக்கு பெரும் தலைகுனிவை தந்துள்ளது. இதற்கு மேல் முட்டு கொடுக்காதீர்” என்று தெரிவித்துள்ளார்.
அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமான தமிழக பாஜக மாநில நிர்வாகி ஒருவரே கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
HBD Archana சின்னத்திரை to வெள்ளித்திரை: விஜே அர்ச்சனாவின் வெற்றிப் பாதை!
எனது பேச்சை மீண்டும் சேருங்கள் : ஓம்.பிர்லாவுக்கு ராகுல் கடிதம்!