“நான் கடவுளால் அனுப்பப்பட்டிருக்கிறேன். நான் பயாலஜிக்கலாக பிறந்திருப்பதாக கருதவில்லை” என்று பிரதமர் மோடி பேட்டி அளித்ததற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி பதில் அளித்துள்ளார்.
இன்று மே 23 சென்னையில் அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர். எஸ். பாரதி,
“ஒரு நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய மோடி நான் பயாலஜிக்கலாக பிறக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அறிவியல் வளர்ந்த இந்த காலகட்டத்தில் 21ம் நூற்றாண்டில் ஒரு பிரதமர் இப்படி எல்லாம் பேசினால் அவரை எப்படி விமர்சிப்பது என்று தெரியவில்லை.
தேர்தலில் ஜெயிப்பதற்காக எதையும் சொல்லலாம் என்பது அயோக்கியத்தனம், பித்தலாட்டம் என்பதை அரசியல் அறிந்தவர்கள் அறிவார்கள்.
தேர்தலில் அவர் தோற்கப் போகிறார் என்பதை தெரிந்து கொண்டு ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் . இந்திய ஒருமைப்பாட்டில் அக்கறை இருக்க வேண்டிய ஒரு பிரதமர் ஒடிசாவில் போய் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.
அங்கே பாண்டியன் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரி சிறப்பாக பணியாற்றி தமிழ்நாட்டுக்கு பெயர் தேடி கொடுத்திருக்கிறார். அவரைப் பார்த்து அமித்ஷா, ‘ஒடிசாவில் ஒரு ஆண் கூட இல்லையா?’ என்று கேட்பது தமிழர்களை இழிவு படுத்துவதாக இருக்கிறது.
அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் எத்தனையோ தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வட இந்தியாவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இங்கே தமிழ்நாட்டில் யாராவது அப்படி பேசி இருக்கிறோமா?
ஒடிசாவில் இருக்கிற பூரி ஜெகநாதர் கோவில் பொக்கிஷ அறையின் சாவியை தமிழ்நாட்டில் கொண்டு போய் வைத்து விட்டார்கள் என்று மோடி சொல்கிறார். உங்களுக்குத் தெரியாமல் உங்கள் சொத்து என்னிடம் இருந்தால் அதற்கு திருட்டு என்று அர்த்தம். அப்படியென்றால் தமிழர்களை மோடி என்ன சொல்கிறார்?
மோடிக்கு நான் சொல்கிறேன்… வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு செல்லும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு ராஜாஜி அவர்களிடத்திலே தான் இந்தியாவின் கஜானா சாவியை கொடுத்துவிட்டு போனான்.
தமிழ்நாட்டுக்காரனை நம்பித்தான் வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு போனான். இப்படிப்பட்ட தமிழர்களை மோடி இழிவுபடுத்தி பேசுகிறார்” என்ற ஆர்.எஸ்.பாரதி,
தொடர்ந்து “தன்னை கடவுளின் அவதாரம் என்று சொல்கிறார் மோடி. தன்னை கடவுள் இதற்காகவே அனுப்பியதாக சொல்கிறார். அப்படி இருந்தால் அவர் கடவுளிடமே போய் செட்டிலாகி கடவுள் பணிகளை பார்க்கலாம். இந்திய மக்கள் அவருக்கு விடை கொடுக்கப் போகிறார்கள். அனுப்பிய கடவுளுடன் ஐக்கியமாகி கடவுள் பணியை தீவிரமாக செய்யட்டும்” என்று கூறியிருக்கிறார் ஆர்,எஸ்.பாரதி.
–வேந்தன்
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: சென்னை போலீஸ் விசாரணை!
“நான் கடவுளின் தூதர் என்ற மோடி “: பதிலடி கொடுத்த கலைஞர் – எப்படி தெரியுமா?