பாதிரியார் காட்பிரே நோபல் தாக்கப்பட்ட வழக்கில் திருநெல்வேலி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் உள்ளிட்ட 9 பேரின் முன் ஜாமீன் மனுக்களை நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜூலை 3) தள்ளுபடி செய்துள்ளது.
திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தின் பேராயர் பர்னபாஸ் தரப்புக்கும் திமுக எம்.பி ஞான திரவியத்தின் ஆதரவாளர் ஜெயசிங் தரப்புக்கும் கடந்த சில வாரங்களாக மோதல் போக்கு நீடித்து வந்தது.
இந்தநிலையில் தனது எம்.பி பதவியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி சிஎஸ்ஐ திருமண்டலத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஜான் பள்ளியின் தாளாளர் பதவி மற்றும் கல்விக்குழு தொடர்பான பொறுப்புகளிலிருந்து ஞான திரவியத்தை நீக்கி பேராயர் பர்னபாஸ் உத்தரவிட்டார்.
இதனால் ஆத்திரமைடைந்த ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் சிஎஸ்ஐ திருமண்டல அலுவலகத்திற்கு சென்று பேராயர் பர்னபாஸ் ஆதரவாளர்களை தாக்கினர். இதில் காயமடைந்த பாதிரியார் காட்பிரே நோபல் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் திமுக எம்.பி ஞானதிரவியம் உள்ளிட்ட 10 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஜான் என்பவர் கைது செய்யப்பட்டார். மற்ற அனைவரும் நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சீனிவாசன் திமுக எம்.பி ஞானதிரவியம் உள்ளிட்ட 9 பேரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
செல்வம்
தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
கடற்கரையில் வாலிபால் ஆடிய இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள்!