பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (மார்ச் 20) தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
அதிமுக- பாஜக கூட்டணி முறிந்த நிலையில், அக்கூட்டணியில் அங்கம் வகித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இந்த கூட்டணியை மீண்டும் இணைப்பதற்காக முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், அவரது முயற்சி கைகூடவில்லை.
இந்தநிலையில், கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவை வாசன் கூட்டினார். யாரோடு கூட்டணி வைக்கலாம் என்று தனது கட்சியின் செயற்குழு உறுப்பினர்களிடம் வாக்குச்சீட்டு அளித்து வாக்களிக்க சொன்னார்.
அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே பெரும்பான்மையான உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஆனால், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மோடியுடனான தனது நெருக்கத்தை பயன்படுத்தி மத்திய அமைச்சர் பதவி வாங்கலாம் என்ற கணக்குடன் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் வாசன்.
இந்த பின்னணியில் இன்று (மார்ச் 20) பாஜகவுடன் தொகுதிப் பங்கீட்டுக்காக இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்த பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வாசன் வந்தார்.
அப்போது, வாசன் கேட்ட மயிலாடுதுறை தொகுதி பாமகவுக்கும், தஞ்சாவூர் தொகுதி அமமுகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதால், ஈரோடு தொகுதியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளதாக பாஜக தலைவர்கள் வாசனிடம் தெரிவித்துள்ளனர். தான் விரும்பிய தொகுதிகள் கிடைக்காததால் வாசன் மிகுந்த மனவருத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். இதனால் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசனிடம், நீங்கள் கேட்ட தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், தொகுதி உடன்பாடு ஏற்படவில்லையா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த வாசன், “கூட்டணி கட்சியின் வெற்றி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் வெற்றியாக கருதும் தலைவர் நான். அதில் எனக்கு மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.
பாஜகவின் தலைமையை பொறுத்தவரையில் அனைத்து கூட்டணி கட்சிகளும் நிற்கின்ற இடங்களில் வெல்ல வேண்டும் என்ற தேர்தல் வியூகத்தின் அடிப்படையில் மிக நுட்பமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” என்று தெரிவித்தார்.
தமாகா நிர்வாகிகளோ, ‘பாஜகவுடன் அணி சேர்ந்ததால் ஏற்கனவே பல நிர்வாகிகள் கட்சியை விட்டுப் போய்விட்டனர். இவ்வளவு தூரம் பாஜக அணிக்காக கட்சியையே தியாகம் செய்திருக்கிறார் வாசன். அவரை மூத்த தலைவர் என்று மைக்கில் நொடிக்குநொடி பேசுகிறார் அண்ணாமலை. ஆனால் வாசன் கேட்ட தொகுதிகளை பாஜகவினர் தர முன்வராததால் கடுமையான வருத்தத்தில் இருக்கிறார் வாசன்” என்கிறார்கள்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பட்டியலில் பெயர் மிஸ்ஸிங்… மாசெக்கள் கூட்டத்தைப் புறக்கணித்த எஸ்.ஆர். சிவலிங்கம்
பாஜக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு விவரம்!
வாசன் அண்ணே அப்பவே அண்ண யுவராஜ் சொன்னாரு கேட்டீங்களா? போங்க அண்ணே உங்க அப்பாரு அளவுக்கு விவரம் பத்தல உங்களுக்கு