பழனிசாமியை சந்திக்க அனுமதி மறுப்பு: திடீர் போராட்டத்தில் ஜி.கே.வாசன்

Published On:

| By christopher

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அமைந்துள்ள சாலையில் அமர்ந்து, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்காததைக் கண்டித்து, அதிமுக எம்எல்ஏக்கள், இன்று ஒருநாள் வள்ளுவர் கோட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அனுமதி வழங்காத நிலையில் தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து எழும்பூர் ஆர்.ஆர். ஸ்டேடியத்தில் காவலில் வைத்தனர்.

ஜி.கே.வாசனுக்கு அனுமதி மறுப்பு!

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ராஜரத்தினம் மைதானத்திற்கு வந்தார்.

ஆனால், இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதால் அவர்களை சந்திக்க ஜி.கே.வாசனுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதனால் ஜிகே வாசன் – காவல் துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மைதானத்திற்கு வெளியே ருக்மணி லட்சுமிபதி சாலையில் திடீரென தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஜிகே வாசன் ஈடுபட்டார்.

அடக்குமுறையில் தமிழக அரசு!

அப்போது செய்தியாளர்களை சந்தித்து ஜிகே வாசன் பேசுகையில், ”தமிழக அரசு அடக்குமுறையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் சட்டமன்றத்திலும், வெளியிலும் நடப்பதை மக்கள் பார்த்து வருகிறார்கள்.

இது அரசின் வருங்கால பணிகளுக்கு ஏற்புடையதாக இல்லை. இது போன்ற மக்கள் விரும்பாத செயல்களில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.

அதிமுகவினர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த ஜிகே வாசன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

கல்வி நிலைய மரணங்கள்: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

இது எனக்கு ஸ்பெஷல் தீபாவளி : சிவகார்த்திகேயன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share