ஸ்டாலின், உதயநிதியை பாராட்டிய பாமக

அரசியல்

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதியையும் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி பாராட்டி பேசியுள்ளார்.

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அப்போது பா.ம.க. கவுரவ தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி மகளிர் சுய உதவி குழுக்கள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.

“மகளிர் சுய உதவிக் குழுக்கள் நேரடி வங்கிக் கடன் பெற குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை, ஆறு மாதத்துக்கு தவறாது குழு கூட்டங்களை நடத்தி சேமிப்பு செய்து உள்கடன் வழங்கி குறித்த காலத்தில் அக்கடனை திரும்ப செலுத்தி கணக்கு புத்தகங்களை முறைப்படி பராமரித்து செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு செயல்பாட்டில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விண்ணப்பத்தின் அடிப்படையில் சுய உதவிக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

சுய உதவிக்குழு கடன் விண்ணப்பங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கி 21 நாட்களில் கடன் தொகை வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.

21 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்து விரைந்து கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2022-23ஆம் நிதியாண்டில் 25,000 கோடி ரூபாய் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கை விட 25 ஆயிரத்து 22 கோடியே 19 லட்சம் ரூபாய் அதிகமாக வழங்கியுள்ளோம். இதன்மூலம் 4.30 லட்சத்துக்கும் அதிகமான சுய உதவிக்குழுக்கள் பயனடைந்துள்ளனர்.

இந்த ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 30,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை விடவும் கூடுதலாக கடன் இணைப்பை வழங்குவோம்” என கூறினார் உதயநிதி ஸ்டாலின்.

அவரைத்தொடர்ந்து பேசிய ஜி.கே.மணி, “இதற்கு முன்னாள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய 2,756 கோடி ரூபாய் கடனை ஆட்சி பொறுப்பேற்ற உடன் முதல்வர் தள்ளுபடி செய்தார். இது தமிழ்நாடு பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அதேசமயம் நேற்று நான் பெண்களுக்கான உரிமைத் தொகையை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள் என்ற கோரிக்கையை முன்வைத்த நேரத்தில், முதல்வர் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உதவித் தொகை வழங்கப்படும் என்ற மகத்தான அறிவிப்பை செய்தார். இதை நேற்று இரவு முதல் மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

பெண்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகத் தான் பின்தங்கிய மாவட்டமாக இருக்கிற தருமபுரி மாவட்டத்தில் 1989ஆம் ஆண்டு முதன்முதலாக மகளிர் சுய உதவி குழுவை முதன்முதலாக தொடங்கி வைத்தார் கலைஞர்.

அப்படி கலைஞர் தொடங்கிய சுய உதவிக்குழு என்பது இன்று தமிழ்நாடு முழுவதும் பரவி இருக்கிறது, 4 லட்சத்து 68 ஆயிரம் சுய உதவிக்குழுக்களில் 50 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் இருக்கின்றனர்.

இந்தசூழலில் 15 நாட்களில் கடன் வழங்கப்படும் என்ற நல்ல அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டதற்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என பாராட்டி பேசினார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாமக திமுகவுடன் இணக்கம் காட்டுவதாக தகவல்கள் உலா வரும் அரசியல் சூழலில் பாமக கவுரவ தலைவரான ஜி.கே.மணி முதல்வர் ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதியையும் புகழ்ந்து பேசியிருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் எடப்பாடி பழனிசாமிக்கு, “வலுவான ஆளுமைக்கு சான்று” என்று கூறி வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ்: ராகுல் அளித்த பதில்!

பொதுச்செயலாளரான எடப்பாடி: வெளியிட்ட முதல் அறிவிப்பு!

gk mani praises mk stalin udhayanidhi stalin
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *