வன்னியர் 15% இட ஒதுக்கீடு… திமுக நிறைவேற்றுமா? – சிவசங்கருக்கு ஜி.கே.மணி கேள்வி!

Published On:

| By Selvam

மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த கூட்டணியில் இருக்கும் மோடி அரசை கேட்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு தைரியம் இருக்கிறதா என்று போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் இன்று (டிசம்பர் 25) கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை திமுக அரசு நிறைவேற்றினால் பாஜக கூட்டணியிலிருந்து விலக தயார் என்று பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றாதது ஏன்?

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 நாட்களுக்கு மேலாகிறது.

அதை செயல்படுத்த போலி சமூகநீதி திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து பாமக சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் தமிழகத்தைத் தொடர்ந்து கொள்ளையடிக்கலாம் என்ற திமுகவின் கனவை கலைத்திருக்கிறது.

அதனால் தான் அமைச்சர் சிவசங்கரை ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு எதிராக ஓசையெழுப்ப வைத்திருக்கிறார்கள்.

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் எழுப்பிய வினாக்கள் மிகவும் தெளிவானவை. உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1,000 நாட்களுக்கு மேலாகியும் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றாதது ஏன்?

திமுகவில் துரைமுருகன் போன்ற வன்னிய சமூதாயத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சருக்கும் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படாதது ஏன்? என்பது தான் அவை.

இந்த வினாக்களை புரிந்து கொள்ளாமலேயே சிவசங்கர் சீறி எழுந்திருக்கிறார். தேர்தல் வந்தால் தான் பாமக-வுக்கு வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த நினைவு வரும் என்று ஏற்கனவே பலமுறை சொன்னதை தான் அவர் மீண்டும் சொல்லியிருக்கிறார்.

மாநில அரசே கணக்கெடுப்பு நடத்தலாம்!

சமூகநீதி குறித்து எவ்வளவு தான் பாடம் நடத்தினாலும் திமுகவுக்கும், அதன் தலைமைக்கும் புரியவே மறுக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை.

அதை உச்சநீதிமன்றமே அதன் தீர்ப்பில் தெளிவாக கூறியிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எந்த இடத்திலும் உச்சநீதிமன்றம் கூறவில்லை.

வன்னியர்களின் பின்தங்கிய நிலைக்கான தரவுகளைத் திரட்டி அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பது தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. அந்தத் தரவுகளைத் திரட்டி ஒரு மாதத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்க முடியும். ஆனால், வன்னியர்கள் மீதான வன்மம் மற்றும் இனவெறியால் தான் அதை செய்வதற்கு திமுக அரசு மறுத்து வருகிறது.

ஒருவேளை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, வன்னியர்களின் மக்கள்தொகைக்கு இணையாக அதிக இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு நினைத்தால், அதை மாநில அரசே செய்யலாம்.

அதற்கு மாநில அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. அதனால் தான் 2010ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி 69% இட ஒதுக்கீட்டு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான அமர்வு, தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி 69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும்படி தீர்ப்பளித்தது.

மோடிக்கு மூன்று முறை கடிதம்!

மத்திய அரசால் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சிவசங்கர் போன்றவர்கள் முகவரி இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே பாமக வலியுறுத்தி வருகிறது.

ஆனால், வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பே தேவையில்லை. ஒருவேளை தேவைப்பட்டாலும் அதை மாநில அரசே செய்யலாம். தமிழக அரசுக்கு உண்மையான விருப்பம் இருந்தால் இது குறித்து உச்சநீதிமன்றத்திடமிருந்தே விளக்கம் பெறலாம்.

அதைவிடுத்து எல்லாவற்றுக்கும் பாஜக என்ற பூச்சாண்டியைக் காட்டி மக்களை ஏமாற்ற முயலக்கூடாது. திமுகவின் இந்த பூச்சாண்டி வேலையும், நாடகங்களும் இனியும் மக்களிடம் எடுபடாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளில் பிரதமர் மோடிக்கு ராமதாஸ் 3 முறை கடிதம் எழுதி உள்ளார்.

பாமகவில் அன்புமணிக்கு மட்டும் தான் அமைச்சர் பதவியா?

அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவையில் 6 முறை வினா எழுப்பியுள்ளார். அண்மையில் கூட மாநிலங்களவையில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் தேவை குறித்து புள்ளிவிவரங்களுடன் வலியுறுத்தினார். அப்போதெல்லாம் அமைச்சர் சிவசங்கர் எங்கு, எந்த நிலையில் இருந்தார் என்பது தான் தெரியவில்லை

இப்போதும் கூட எங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. நாளையே பாஜக கூட்டணியிலிருந்து வெளிவருகிறோம். அன்புமணி இராமதாஸ் கூறியதைப் போல திமுகவுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவு வழங்குகிறோம்.

அப்படி செய்தால் வரும் 6ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை திமுக அரசு நிறைவேற்றுமா? இப்போது உள்ளத் தடைகள் அனைத்தும் பாஜக அணியிலிருந்து பாமக வெளியேறினால் உடனடியாக விலகி விடுமா?

பாமகவில் மத்திய அமைச்சர் பதவியும், கட்சித் தலைவர் பதவியும் அன்புமணி ராமதாசுக்கு மட்டும் தான் வழங்கப்படுமா? என்று வினவியுள்ளார் சிவசங்கர்.

பாமகவில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம்!

திமுகவில் தான் அண்ணாவுக்குக் கூட வழங்கப்படாத தலைவர் பதவி ஸ்டாலினின் குடும்பச் சொத்தாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

எங்கள் கட்சியில் தலைவர் பதவியை பேராசிரியர் தீரன் பாட்டாளி மக்கள் கட்சியில் அவர் இருக்கும் வரை வகித்தார். அதன்பின் அப்பதவிக்கு வந்த நான் 25 ஆண்டுகள் அப்பதவியை வகித்தேன்.

அதன்பிறகு தான் அன்புமணி ராமதாசுக்கு அந்தப் பதவி வழங்கப் பட்டிருக்கிறது. இப்போதும் கூட எனக்காகவே கவுரவத் தலைவர் பதவி உருவாக்கி வழங்கப் பட்டுள்ளது.

பாமக என்பது திமுகவைப் போன்றது அல்ல. அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுகவை கைப்பற்றிக் கொண்டு தாத்தா, மகன், பேரன், கொள்ளுப் பெயரன் என வாழையடி வாழையாக பதவிகளை அனுபவிப்பது திமுகவின் எழுதப்படாத விதி. பாமகவில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம்.

பாமகவுக்கு எத்தனை மத்திய அமைச்சர் பதவிகள் கிடைத்தன? அன்புமணி ராமதாசுக்கு எப்போது மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது? என்பதெல்லாம் வரலாறு அறிந்தவர்களுக்கு தெரியும்.

1998ஆம் ஆண்டு பாமகவுக்கு கிடைத்த முதல் அமைச்சர் பதவி தலித் எழில்மலை என்ற பட்டியலின உறுப்பினருக்குத் தான் வழங்கப்பட்டது. 1999ஆம் ஆண்டில் கிடைத்த இரண்டாவது மத்திய அமைச்சர் பதவியும் பொன்னுசாமி என்ற இன்னொரு பட்டியலினத்தவருக்கு தான் வழங்கப்பட்டது.

மூன்றாவது அமைச்சர் பதவி என்.டி.சண்முகத்துக்கும், நான்காவது அமைச்சர் பதவி ஏ.கே.மூர்த்திக்கும் வழங்கப்பட்ட பின்னர் ஐந்தாவதாகத் தான் அன்புமணி அமைச்சராக்கப்பட்டார். இந்த உண்மைகள் அனைத்தும் வரலாறு தெரிந்தவர்களுக்குத் தெரியும்.

தேர்தலில் திமுகவை வீழ்த்த போவது உறுதி!

தமிழ்நாட்டில் அருந்ததியர் இட ஒதுக்கீட்டிற்கான பரிந்துரை 2008ஆம் ஆண்டில் 243 நாட்களில் நீதிபதி ஜனார்த்தனன் ஆணையத்திடமிருந்து பெறப்பட்டது.

இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டிற்கான பரிந்துரை 6 மாதங்களில் பெறப்பட்டது. ஆனால், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த பரிந்துரையை மட்டும் இரு ஆண்டுகளாகியும் வழங்காமல் மிக்சர் தின்று கொண்டிருக்கிறது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.

அதை தட்டிக் கேட்காமல் முதலில் 3 மாதங்கள் மட்டுமே காலக்கெடு வழங்கிய தமிழக அரசு, பின்னர் 6 மாதங்கள், ஓராண்டு என காலநீட்டிப்பு வழங்கி மிக்சர் சப்ளை செய்து கொண்டிருக்கிறது.

இதற்கான காரணமும் வன்னியர்கள் மீதான வன்மமும், இனவெறியும் தான். இவையெல்லாம் மானமுள்ள வன்னியர்களுக்குப் புரியும்.

உண்மையில் சிவசங்கரைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் திமுகவை விமர்சித்தால், திமுகவில் உள்ள ஒரு வன்னியரை வைத்தே அவர்களை இழிவுபடுத்துவதும், திமுகவை பட்டியலினத்து தலைவர்கள் எவரேனும் விமர்சித்தால் அவர்களை பட்டியலினத்தவரை வைத்தே இழிவுபடுத்துவதும் கலைஞர் காலத்திலிருந்தே திமுகவின் வாடிக்கை.

அதை இப்போது ஸ்டாலினும் பின் தொடர்கிறார். வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அனைவருக்கும், அனைத்து உதவிகளையும் திமுக தான் வழங்கியது. வரும் சட்டமன்ற தேர்தலில் சமூகஅநீதி கட்சியான திமுகவை மக்கள் வீழ்த்தப்போவது உறுதி” என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

செல்வம்

இன்னுயிர் காப்போம் திட்டம்: காப்பீடு தொகை 2 லட்சமாக உயர்வு!

மதச்சார்பின்மையைப் பேணிக்காத்தவர் வாஜ்பாய்… ஸ்டாலின் புகழாரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share