கலைஞரின் அரசாணைக்கு உயிர் கொடுங்கள்: முதல்வருக்கு மருத்துவர்கள் வேண்டுகோள்!

அரசியல்

கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில் கருணாநிதியின் அரசாணை 354-க்கு உயிர் கொடுக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை வருகிற ஜூன் 3ஆம் தேதி முதல் ஓராண்டு காலம் சிறப்பாக நடத்த உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.

இந்த மருத்துவமனையை திறந்து வைக்கவும், நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வருமாறும், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு தமிழக முதல்வர் டெல்லிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்ததை ஏற்றுக்கொண்டு வருகை தர உள்ளார்.

திமுக ஆட்சி அமைந்தது முதல் கலைஞர் காட்டிய வழியில் ஆட்சி நடக்கிறது என்பதை முதல்வர் தொடர்ந்து பெருமையாக தெரிவித்து வருகிறார்.

இருப்பினும் 2009ஆம் ஆண்டு கலைஞரின் ஆட்சியில் அரசு மருத்துவர்கள் நலன் மற்றும் சுகாதாரத் துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட அரசாணை 354-ஐ மட்டும் நடைமுறைப்படுத்தாமல் மறுத்து வருவதுதான் வேதனையாக உள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக அரசு மருத்துவர்களுக்கு DACP எனப்படும் காலம் சார்ந்த ஊதியம் மற்றும் பதவி உயர்வு கிடைத்திடும் வகையில், அரசாணை 354-ஐ கலைஞர் வெளியிட்டார்.

இருப்பினும் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், என்ன காரணத்திற்காக கலைஞர் வெளியிட்டாரோ, அதற்கான பலன்கள் மருத்துவர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை.

டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை

அரசு மருத்துவர்களின் ஊதியத்தை மட்டும் மனதில் வைத்து, ஊதிய உயர்வுக்கான அரசாணையை அன்று கலைஞர் வெளியிடவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி வரையிலான சுகாதாரத் துறையை வலுப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில்தான் வெளியிடப்பட்டது.

பெரும்பாலான மக்கள் பெரிதும் நம்பியிருப்பது அரசு மருத்துவமனைகள்தான் என்ற நிலையில், இந்த சமூகத்தை உயிரோட்டமாக வைத்திருக்க, தங்கள் பங்களிப்பை தரும் அரசு மருத்துவர்களுக்கு, உரிய ஊதியத்தை தருவதன் மூலம், இன்னும் உற்சாகமாக பணியாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் தான் அன்று அரசாணையை வெளியிட்டார்.

ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற அரசு மருத்துவர்கள் நீண்ட காலமாகப் போராடி வருகிறோம். குறிப்பாக 2019ஆம் ஆண்டு போராட்டத்தின்போது 118 அரசு மருத்துவர்கள் (40 பெண் மருத்துவர்கள்) 500 கி.மீட்டருக்கு அப்பால் இடமாற்றம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.

மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஊதியக் கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரையே கொடுத்தார். மேலும் அன்று மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் மன உளைச்சலால் உயிரிழந்தபோது, உடனடியாக இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்த அன்றைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக அரசை மருத்துவ சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது என தெரிவித்ததை நினைவுப்படுத்த விரும்புகிறோம்.

மேலும் 2019ஆம் ஆண்டு போராட்டத்தின்போது நேரில் வந்து ஆதரவு தெரிவித்த நம் முதல்வர், அடுத்து அமையும் திமுக ஆட்சியில் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக, அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்த்தோம்.

ஆனால் இன்று வரை நிறைவேற்றவில்லை. இரண்டு வருடங்களாகவே கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி, முதல்வரின் பிறந்த நாளான மார்ச் 1ஆம் தேதி, டாக்டர்கள் தினமான ஜூலை 1, தீபாவளி பரிசு, புத்தாண்டு பரிசு, பொங்கல் பரிசு என்ற வகையில் கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம்.

இரண்டு வருடங்களாக தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை, பட்ஜெட் அறிவிப்பு மற்றும் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை என முக்கிய தருணங்களில் மருத்துவர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்றும் அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்தோம்.

அதுவும் கடந்த ஆண்டு துறை மானியக் கோரிக்கையின்போது, டாக்டர் எழிலன் மற்றும் சின்னத்துரையும், இந்த ஆண்டு சிந்தனை செல்வன் மற்றும் எம்.ஆர்.காந்தியும் அரசாணை 354-ஐ அமல்படுத்த சட்டசபையில் கோரிக்கை வைத்தனர்.

அதாவது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பியும் இன்னமும் அரசு மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இன்று நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே அரசு மருத்துவர்கள் தங்கள் சம்பளத்திற்காக தொடர்ந்து போராட வேண்டிய நிலையில் உள்ளோம் என்பதுதான் வருத்தமான உண்மை.

கடந்த டிசம்பர் 28ஆம் தேதி மு.கருணாநிதி வரலாறு என்ற நூலை முதல்வர் வெளியிட்டார். அப்போது பேசிய முதல்வர், தான் இல்லாத பிறகும், தான் என்றும் நினைக்கப்பட வேண்டும் என்பது தான் கலைஞர் விரும்பிய வாழ்க்கையாக இருக்கக் கூடியது என தெரிவித்தார்.

அந்த வகையில் தற்போது கலைஞரின் ஆணையை அமல்படுத்தினால் 19,000 அரசு மருத்துவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் என்றும் நன்றியோடு நினைத்து பார்ப்பார்கள்.

அதுவும் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதல்வராக இருப்பது பெருமைக்குரிய விஷயம். இந்த நேரத்தில் நம் முதல்வர் வாக்குறுதியை நிறைவேற்றுவதன் மூலம் அரசு மருத்துவர்கள் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்துவதோடு, கலைஞரின் நூற்றாண்டு விழா என்றுமே மறக்க முடியாததாகவும், அவரை பெருமைப்படுத்துவதாகவும் அமையும்.

மேலும் போராடியதற்காக தரப்பட்ட தண்டனைகள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டுகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்,

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு என்ன ஆச்சு?

இனி இலவச பார்க்கிங் இல்லை: மெட்ரோ நிர்வாகம்!

Give life to the kalaingar decree Doctors appeal
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0