கோயம்புத்தூர் பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரியின் பவள விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை (ஆகஸ்ட் 26 ) கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் போதைப் பொருளுக்கு மாணவிகளும் அடிமையாகி வருவது கவலை அளிக்கிறது என்று வேதனை தெரிவித்தார்.
தலைசிறந்த கல்லூரிகள்
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு என்பது, இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில், 18 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது. தலைசிறந்த 100 பல்கலைக் கழகங்களில் 21 தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.
தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது. தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில் 10 தமிழ்நாட்டில் உள்ளது.
தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. தலைசிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் 11 தமிழ்நாட்டில் உள்ளது. 100 மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 8 தமிழ்நாட்டில் இருக்கிறது.
40 பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 9 தமிழ்நாட்டில் உள்ளது. 30 சட்டக் கல்லூரிகளில் 2 தமிழ்நாட்டில் உள்ளது. 30 கட்டடக் கலைக் கல்லூரிகளில் 6 தமிழ்நாட்டில் உள்ளது. இப்படி நான் சொல்லிக் கொண்டே போக முடியும்” என்று பட்டியலிட்டார்.
கல்வியில் சிறந்த மாநிலம்
“கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் இன்றைக்கு உயர்ந்து நிற்கிறோம். 100 ஆண்டுகளுக்கு முன்னால், நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கல்விக்காக போட்ட விதைதான் இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
பி.எஸ்.ஜி போன்ற பல்வேறு அறக்கட்டளைகள், தங்களது கல்வித் தொண்டை 75 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கியதுதான் இதற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.
போதைக்கு அடிமையாகும் மாணவிகள்
அனைத்து ஆற்றலும் கொண்டவர்களாக தமிழக இளைஞர்கள் இருக்கிறார்கள். எனினும் போதை பழக்கத்திற்கு அடிமையாக உள்ள இளைஞர்களை மீட்க வேண்டும். போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மாணவிகள் சிலரும் போதை பழக்கத்திற்கு அடிமையாக உள்ளது கவலை அளிக்கிறது.
நல்ல கல்வியுடன், நல்லொழுக்கத்தையும் கற்றுத் தரும் கடமை அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உண்டு. ஒரு பெருமைமிகு கல்லூரியின், பவளவிழாவில் கலந்து கொண்ட மனநிறைவுடன் நான் சென்னைக்கு திரும்புகிறேன்” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
‘இலவசம்’ வாக்குறுதியை மற்றவர் மீது சுமத்த கூடாது : நிர்மலா சீதாராமன்