தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், அதன் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி தொடர்பான தகவல்கள் பரபரப்பான செய்திகளாக வந்துகொண்டிருக்கிற நிலையில்… விஜய் கட்சியில் வெவ்வேறு கட்சிகள், இயக்கங்களில் இருந்து பிரமுகர்கள் சேரப் போகிறார்கள் என்ற தகவலும் கிளம்பியுள்ளது.
தமிழகம் முழுவதிலும் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளை சேர்ந்த பதவி இல்லாத அல்லது ஓரங்கட்டப்பட்ட பிரமுகர்கள் விஜய் கட்சியில் இணைவதற்கு ஏற்கனவே முயற்சிகளை தொடங்கி விட்டார்கள்.
அதே நேரம் விஜய் தரப்பிலிருந்து சில மூத்த அரசியல் பிரமுகர்களிடம் பேசி வருவதாகவும் ஒரு தகவல் கசிகிறது.
அதன்படி ஒரு காலத்தில் திமுகவின் தரைப்படை தளபதி என கலைஞரால் அழைக்கப்பட்ட, முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் உலவிக் கொண்டிருக்கிறது.
இது குறித்து வட மாவட்ட அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம்.
“தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் செஞ்சி ராமச்சந்திரன். திமுகவில் ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்ட செயலாளராக பல ஆண்டுகள் பதவி வகித்தவர் செஞ்சி ராமச்சந்திரன், அவரது மாவட்டத்தில் 22 தொகுதிகள் இருந்தன. ஒரு முறை தன் வீட்டில் இருந்து கட்சியினரைப் பார்க்க அவர் கிளம்பினால் வீடு திரும்ப 15 நாட்கள் ஆகும். நிர்வாகிகளோடும், தொண்டர்களோடும் அவ்வளவு பிணைப்பு மிக்கவர்.
மாவட்டச் செயலாளர் தேர்தலில் செஞ்சியை தோற்கடிக்க கட்சித் தலைவரான கலைஞரே விரும்பியபோதும்… தொண்டர்கள், நிர்வாகிகள் ஆதரவோடு மாவட்டச் செயலாளர் ஆனவர் செஞ்சி.
90களில் வைகோ மதிமுக தொடங்கியபோது அவருடன் சென்றார். மத்திய அமைச்சர் பதவியெல்லாம் வகித்த செஞ்சி, பின் திமுகவுக்குத் திரும்பினார். திமுகவில் பெரிய அளவு மரியாதை இல்லாததால், அவர் அதிமுகவுக்குச் சென்றார். அதிமுகவில் மாநில அமைப்புச் செயலாளர் என்ற சாதாரண பதவியில்தான் செஞ்சி ராமச்சந்திரன் இப்போது இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை ஆரம்பித்தபோது எப்படி மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியின் அவைத் தலைவராக்கி, ஆலோசனை பெற்றாரோ அதேபோல நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்துக்கு செஞ்சி ராமச்சந்திரன் ஆலோசனையை பெற இருக்கிறார் என்றும் ஒரு பேச்சு எழுந்துள்ளது. விஜய் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செஞ்சி ராமச்சந்திரனை சந்தித்ததாகவும் ஒரு தகவல் வருகிறது” என்கிறார்கள்.
நாம் இதுகுறித்து செஞ்சி ராமச்சந்திரனையே தொடர்புகொண்டு, ‘விஜய் கட்சியில் நீங்கள் இணையப் போவதாக செய்திகள் வருகிறதே?’ என்று கேட்டோம்.
”இதுவரைக்கும் என்னிடம் யாரும் பேசவில்லை. பேசினால் உங்களிடம் சொல்கிறேன்” என்று தெளிவாக நம்மிடம் கூறினார் செஞ்சி ராமச்சந்திரன்.
இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செஞ்சி ராமச்சந்திரன் விஜய் கட்சிக்கு போகப்போவதாக வரும் தகவல்கள் வதந்தி தான் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
”மக்களை தேடிச் சென்று அரசே திட்டங்கள் வழங்கும் காலம் இது”: உதயநிதி ஸ்டாலின்
குத்தகை ஒப்பந்தம் ரத்து : உயர்நீதிமன்றத்தில் கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் முறையீடு!