காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும், முதலில் ஜம்மு காஷ்மீர் அளவில் கட்சி துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று (ஆகஸ்ட் 26) அறிவித்தார்.
இதுதொடர்பாக, ஐந்து பக்க கடிதத்தை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார். ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சிக்குள் வந்தபிறகு கலந்தாலோசிக்கும் முடிவை சீரழித்துவிட்டதாகவும், கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டதாகவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
ராகுலின் குழந்தைத்தனமே காங்கிரஸின் தோல்விக்கு காரணம் என்றும் கூறியிருந்தார். அவரது கடிதத்தின் அடிப்படையில் குலாம் நபி ஆசாத் புதிய கட்சியை தொடங்கலாம் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதை உறுதி செய்துள்ளார். “தேசிய அளவில் புதிய கட்சியைத் தொடங்குவதில் எனக்கு எந்த அவசரமும் இல்லை.
ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடக்க உள்ளதால், அங்கு புதிய கட்சியைத் தொடங்க திட்டமிட்டுள்ளேன். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியது நான் நீண்டகாலமாக நினைத்து எடுத்த முடிவு தான்.
நான் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

1975ல் குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீரின் இளைஞரணி காங்கிரஸ் தலைவரானார். அதன் பிறகு 1980ல் இந்திய இளைஞர் காங்கிரஸின் தலைவரானார். 1980-2020 வரை காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்தார்.
1982-2014 வரை இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பி.வி. நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோரது ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராக இருந்தார்.
2005-2008 வரை காங்கிரஸ் சார்பில் காஷ்மீர் முதல்வராக இருந்தார். 2014-21 வரை மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவராக இருந்தார்.
இந்நிலையில் இவ்வளவு பதவிகளை கொடுத்து அழகு பார்த்த காங்கிரஸ் கட்சிக்கு குலாம் நபி ஆசாத் துரோகம் செய்து விட்டதாக காங்கிரஸ் முக்கிய புள்ளிகள் கூறி வருகின்றனர்.
குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகளிடம் நேற்று (ஆகஸ்ட் 26) ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஜம்மு காஷ்மீரில் இந்த வருட இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்பதால் அதுகுறித்த வியூகங்கள் இந்த கூட்டத்தில் வகுக்கப்பட்டன.
காஷ்மீரின் அரசியல் நிலவரம் குறித்தும், குலாம் நபி ஆசாத் விலகல் குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அமித்ஷா ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்காவிடமும் நேற்று (ஆகஸ்ட் 27) ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது, ஜம்மு காஷ்மீர் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்தும், இந்த வருட இறுதிக்குள் ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தசூழலில், குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து விலகிய நிலையில், தேர்தலை முன்னிட்டு புதிய கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்போது அமித்ஷாவும் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தனது வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டார். இதனால் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது.
குலாம் நபி ஆசாத் விலகல் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், குலாம் நபி ஆசாத் மரபணுக்கள் மோடி சார்ந்ததாகிவிட்டது என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்