அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 6) தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும் துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதன்பிறகு 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொண்டுவரப்பட்டது.
பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் வாதங்கள் ஆர்.சுப்பிரமணியம், செந்தில்குமார் அமர்வில் மூன்று நாட்கள் நடைபெற்றது.
சசிகலா தரப்பில், “தான் அனைத்து தொண்டர்களின் ஆதரவோடு தான் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னுடைய அனுமதியில்லாமல் 2017-ஆம் ஆண்டு கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது. சட்டவிதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழுவை கூட்டாமல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கியுள்ளார்கள். இன்று வரை நான் அதிமுகவில் உறுப்பினராக உள்ளதால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று சசிகலா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதிமுக தரப்பில், “2017-ஆம் ஆண்டு சட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கொண்டு வரப்பட்டது. சட்ட விதிகளில் 2021-ஆம் ஆண்டு மீண்டும் மாற்றம் கொண்டு வரப்பட்டு ஒரே பொதுச்செயலாளர் என்ற பதவி கொண்டு வரப்பட்டது. அதனை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. எனவே பழைய சட்டவிதிகளை கொண்டு இந்த வழக்கை தொடர முடியாது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” என்று தெரிவிக்கப்பட்டது
ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், “2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவி நீக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் கொண்டு வரப்பட்டது. இதுவரை அந்த நிலை தான் நீடிக்கிறது. எனவே சசிகலா இடைக்கால பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது செல்லும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜக தலையீடு… ஸ்டாலின் உரை புறக்கணிப்பு?: இலங்கை அரசு விளக்கம்!
கேரளா குண்டு வெடிப்பு: மார்ட்டினுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!