ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரை முடிவு செய்ய பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதிய யோசனை தெரிவித்துள்ளது. இதனால் அதிமுகவில் குழப்பம் அதிகரித்துள்ளது
அதிமுகவின் 2022 ஜூலை 11 பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,
இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தொடுத்த வழக்கு இன்று (பிப்ரவரி 3) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணைக்கிடையில் நேற்றே தேர்தல் ஆணையம், ‘உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் நாங்கள் பொதுக்குழு தீர்மானத்தை இன்னும் ஏற்கவில்லை” என்று தனது பதில் மனுவில் தெரிவித்திருந்தது.
இன்று நீதிமன்றத்தில், இரட்டை இலை சின்னத்தை நாங்கள் முடக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது பன்னீர் தரப்பில், “ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் இரட்டை இலை வெற்றிபெற வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம்.
வேட்பாளர் படிவத்தில் நான் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்து போட தயார்.
ஆனால் அதில் எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளர் என்ற ரீதியில் கையெழுத்திட வேண்டும். அப்படி கையெழுத்திட்டால் நாங்கள் நிறுத்திய வேட்பாளரை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம்” என்று தெரிவித்தார். இதற்கு எடப்பாடி தரப்பினர் உடனடியாக மறுப்பு தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்களை பார்த்து எச்சரித்த நீதிபதிகள், ‘நீங்கள் நிறுத்திய வேட்பாளர் பொதுக்குழுவால் முடிவு செய்யப்பட்டவரா?’ என்று கேட்கிறார்.
ஆமாம் என்று எடப்பாடி தரப்பினர் சொல்ல, இல்லை என்று பன்னீர் தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள்,
“அப்படியென்றால் வேட்பாளரை பொதுக் குழுவை கூட்டி முடிவு செய்யுங்கள்.
பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரையும் அனுமதிக்க வேண்டும்.
அவைத் தலைவர் பொதுக் குழுவை கூட்ட வேண்டும். பொதுக்குழு முடிவு செய்யும் வேட்பாளரை அவைத் தலைவர் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
அவைத் தலைவரின் பரிந்துரை மீது தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே நடந்த பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து முடிந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்காக மீண்டும் பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
-வேந்தன்
இதான் கடைசி சான்ஸ் – கேஎல் ராகுலை எச்சரித்த முகமது கைப்
சமரசத்துக்கு வந்த ஓபிஎஸ், மறுத்த ஈபிஎஸ்: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?