இன்று நடந்த பொதுக்குழுவும் செல்லாது, ஓபிஎஸ்-ஐ நீக்கியதும் செல்லாது என்று ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தெரிவித்துள்ளார்.
பெரும் பரபரப்புக்கு இடையே இன்று (ஜூலை 11) சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தன்னை நீக்கும் அதிகாரம் பழனிசாமிக்கோ, கே.பி.முனுசாமிக்கோ இல்லை. அவர்களை நான் நீக்குகிறேன் என ஓபிஎஸ் அறிவித்தார். ஓபிஎஸ் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் சீல் வைத்த வருவாய்த் துறை அதிகாரிகள் இறுதியாகக் கேட்டையும் பூட்டி சீல் வைத்தனர்.
இந்த நிகழ்வெல்லாம் சென்னையில் நடந்துகொண்டிருக்கப் புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சசிகலா, இன்று நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
“தங்களின் சுயநலத்திற்காகப் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி உள்ளனர். தலைவர், அம்மா வழியில் வந்தவர்கள் இதனைச் செய்யமாட்டார்கள். உயர் நீதிமன்றத்தில் பொதுக்குழுக் கூட்டம் குறித்து நான் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளதால் ஈபிஎஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுக் கூட்டம் செல்லாது. இது தவறானது. ஈபிஎஸ் பொதுச்செயலாளர் ஆனதே செல்லாது என்றே நிலையில், அவர் ஓபிஎஸ்-ஐ நீக்கியது எப்படிச் செல்லும்?
நிரந்தர பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ஜெயலலிதாவை நீக்கியதற்குக் கழக தொண்டர்கள் தகுந்த பதிலடியை நிச்சயம் கொடுப்பார்கள். அடிமட்ட தொண்டர்களால் கழகப் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தான் எம்ஜிஆர் இந்த பொதுக்குழுக் கூட்டத்தை உருவாக்கினார். ஆனால் இவர்கள் இப்போது அதனைச் செய்யத் தவறி விட்டனர்.
கழக உடன்பிறப்புகள் யாரை நினைக்கிறார்களோ அவர்கள் தான் பொதுச்செயலாளராக முடியும். இதுதான் தலைவர் விட்டுப்போன வழிமுறை. அதன்படிதான் இந்த கழகம் இயங்கும். தொண்டர்களும் சரி, பொதுமக்களும் சரி என்னைத் தான் ஆதரிக்கிறார்கள். நான் சென்று வரும் சுற்றுப் பயணங்களில் அதனை உணர முடிகிறது. அதிமுகவின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது, தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. சுயநலவாதிகளைப் புறந்தள்ளும் நேரமும் வந்துவிட்டது.
தொண்டர்களின் எண்ணத்திற்கு மாறாகப் பணபலம், படைபலத்தைக் கொண்டு அடித்துப் பிடிக்கலாம் என்றால் அந்தப் பதவி நிலைக்காது. இருபெரும் தலைவர்களின் ஆசியால் இந்த இயக்கம் மீண்டும் அதே பொலிவோடு மீண்டெழும். நிழலுக்காகச் சண்டையிட்டு நிஜத்தைத் தொலைத்தவர்களின் பின்னால் குதிரைகள்கூட செல்லாது. காட்சிகள் மாறினாலும் கொள்கைகளை மட்டும் மனதில் வைத்துச் செயல்படுங்கள். இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் நன்றாக வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை” என்றார்.
– கிறிஸ்டோபர் ஜெமா