காங்கிரஸ் தலைவர் தேர்தலில், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், இன்று (செப்டம்பர் 25) மாலை அசோக் கெலாட் இல்லத்தில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று (செப்டம்பர் 24) தொடங்கியது. 30ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்.
அக்டோபர் மாதம் 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
அக்டோபர் 19ஆம் தேதி தலைவர் பதவிக்கான முடிவுகள் அறிவிக்கப்படும்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் போட்டியிடப் போவதில்லை என்பதில் திட்டவட்டமாக உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ராகுல் காந்தியை தேர்ந்தெடுக்க வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் அவருக்கு ஆதரவாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வலியுறுத்தியும் ராகுல் காந்தி சம்மதிக்கவில்லை.
அசோக் கெலாட் ராகுல் நடைபயணம் மேற்கொள்ளும் கேரளாவிற்கு வந்து அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் அவரது பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது.
இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 24) திருவனந்தபுரம் எம்.பி சசிதரூர் சார்பில் அவரது ஆதரவாளர் ஆலிம் ஜாவேரி காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் வேட்பு மனு படிவங்களைப் பெற்றுச் சென்றார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், அடுத்த வாரம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி. இவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக தெரிவித்ததும், சோனியா காந்தி உடனடியாக சம்மதித்துள்ளார்.
அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் ஆவதை சோனியா விரும்புகிறார் என்றே காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த முதல்வராக சச்சின் பைலட் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மறுசீரமைப்பு மாநாட்டில், கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
சச்சின் பைலட்டை முதல்வராக்க அசோக் கெலாட் விரும்பவில்லை. சச்சின் பைலட்டுக்கு பதிலாக அசோக் கெலாட் ஆதரவாளரான, ராஜஸ்தான் மாநில சபாநாயகர் சிபி ஜோஷியை முதல்வராக்க கெலாட் விரும்புகிறார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை 7 மணியளவில் ஜெய்ப்பூரில் உள்ள அசோக் கெலாட் இல்லத்தில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் அடுத்த முதல்வர் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக நேற்று இரவு முதல் அசோக் கெலாட் வீடு உள்ள பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அதில், சத்யமேவ ஜெயதே ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம்’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த முதல்வர் பற்றிய விவாதங்கள் ராஜஸ்தானில் சூடு பிடித்துள்ளன.
காங்கிரஸ் கட்சி மேலிடப் பொறுப்பாளர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் மாநில பொறுப்பாளர் அஜய் மேனன் ஆகியோர் மேற்பார்வையில் இன்று கூட்டம் நடைபெற உள்ளது.
கடந்த 23ஆம் தேதி சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியின் சபாநாயகர் ஜோஷியை சந்தித்தார்.
மேலும், ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர்களையும் தொடர்ச்சியாக சச்சின் பைலட் சந்தித்து வருகிறார்.
ராஜஸ்தான் மாநில அடுத்த முதல்வராக சச்சின் பைலட் தான் வருவார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
செல்வம்
மின் கட்டண உயர்வு : சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படும் வடமாநில தொழிலாளர்கள்!
‘பகாசூரன்’ : பக்திப் படமா? அரசியல் படமா?