எஸ்.வி.ராஜதுரை
காஸா போரும் சுற்றுச் சூழல் கேடுகளும்
போர் எப்போதுமே கண்மூடித்தனமானது. அதில் எவ்வகையிலும் பங்கேற்காமல் உள்ள சாமானிய மக்களும்கூட தாங்கள் வாழும் இடங்களிலேயே கொல்லப்படுகின்றனர். அவர்கள் வாழ்வதற்கான உணவு, நீர், காற்று ஆகியனவும் அழிக்கப்படுகின்றன. தற்போது பாலஸ்தீனர்கள் இனக்கொலை செய்யப்பட்டு வரும் காஸாவில் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பெருங்கேடுகள் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இனக்கொலை, சுற்றுச்சூழல் கேடு, போர், ஏகாதிபத்திய நலன்கள் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைக்கப்பட்டவை என்பது மேலும் தெளிவாகத் தெரிய வருகிறது. போர், நச்சுத்தன்மை வாய்ந்த உயிர்க்கோளத்தை (bio-sphere) உருவாக்குகிறது (உயிர்க்கோளம் என்பது நம் புவிக்கோளத்தின் மேலேயும் அதற்குக் கீழேயும் தாவரங்கள் , பாசிகள், உயிரினங்கள் ஆகிய அனைத்தும் இருப்பதற்கும் உயிர் வாழ்வதற்குமான மண், நீர் காற்று ஆகியனவற்றை உள்ளடக்கிய குறுகலான பகுதி. இது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் அதை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும் இன்றியமையாதது).
2009இல் மனித உரிமைக்கான அராபிய ஆணையமும் ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வுகளின் போது காஸாவிலுள்ள மண்ணின் சில மாதிரிகளை எடுத்துப் பரிசோதனை செய்து பார்த்தபோது அவற்றில் கதிர்வீச்சுத்தன்மை கொண்ட பொருள்களும் புற்று நோய் உண்டாக்கும் பொருள்களும் இருப்பதைக் கண்டறிந்தன. அவற்றில் ஃபாஸ்பேட்டுகளும் கதிரியக்கம் சற்றுக் குறைக்கப்பட்ட யுரேனியமும் இருப்பது தெரிய வந்தது. நீண்டகாலமாக இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலால் சேதமடைந்தும் தகர்க்கப்பட்டும் போன கட்டடங்களுக்குப் பதிலாக புதிய கட்டடங்களையும் குடியிருப்புகளையும் கட்டுவதற்கு இடிபாடுகளிலிருந்து காஸா மக்கள் எடுத்துப் பயன்படுத்திய மரப் பொருள்கள், கான்கிரீட், செங்கற்கள், உலோகக் கம்பிகள் முதலிய அனைத்திலும் கதிரியக்கத் தன்மை இருந்தது.
2021இல் காஸாவிலிருந்ததும் அண்மைய இஸ்ரேலியத் தாக்குதலில் தகர்க்கப்பட்டதுமான) அல் ஸய்ஃபா (al-Saifa) மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுத் தலைவர் 2008-2009இல் இஸ்ரேலிய இராணுவம் காஸா மீது நடத்திய தாக்குதலின்போது பயன்படுத்திய யுரேனியத்தின் காரணமாக இரண்டாண்டுகளில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காகி விடும் என்று கூறினார். அந்தத் தாக்குதலை சூற்றுச் சூழல் பேரழிவு என வர்ணித்தார்.
ஐரோப்பிய மருத்துவ மனித உரிமைக் கண்காணி (Euro-Med Human Rights Monitor என்ற அமைப்பு கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இரு அணுகுண்டுகளின் சக்திக்கு நிகரான குண்டுகளை இஸ்ரேலிய இராணுவம் காஸா மீது பொழிந்தது என்று குறிப்பிட்டது. அது ஹிரோஷிமா நகரின் பரப்பளவில் பாதி அளவே உள்ளதும், இருபது மில்லியன் மக்கள் வாழ்ந்து வந்ததுமான பகுதியாகும்.
காஸாவிலும் தென் லெபனானிலும் இஸ்ரேலிய இராணுவம் இரண்டுமாத காலமாக இடைவிடாமல் பொழிந்து வரும் குண்டுகள் (இவற்றில் பாஸ்பரஸும் உள்ளது ) , வரலாற்றில் முன்னுவமை இல்லாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவ்வமைப்பு கூறுகிறது. சென்ற ஆண்டு (2022) நவம்பர் மாதம் இஸ்ரேல், பாலஸ்தீன மக்கள் பெருமளவில் வசிக்கும் தென் லெபனானில் 40000 ஒலிவ மரங்களைச் சுட்டுப் பொசுக்கியது. ஒலிவ எண்ணெய்தான் பாலஸ்தீனம் மற்றும் அண்டை நாடுகளிலுள்ள மக்களின் சமையல் எண்ணெயாகும். அதற்கு முந்திய மாதங்களில் 3.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்த ஓக், எலுமிச்சை , வாழை மரங்களையும் புல் வெளிகளையும் புதர்க் காடுகளையும் இஸ்ரேலிய இராணுவம் அழித்தது.
இது கொடூரமான கலாசார, ஆன்மிக, வேளாண் பேரழிவாகும். காஸாவுக்கு வர வேண்டிய தண்ணீரும்கூட இஸ்ரேலிய அரசாங்கத்தின் கடும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்பதை அம்னெஸ்டி இண்டர் நேஷனல், ஐ.நா.அவை ஆகிய சர்வதேச அமைப்புகள் ஆவணப்படுத்தியுள்ளன.
இப்போது நடந்துவரும் போருக்கு முன்பே காஸாவுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீரில் 96%, மனிதர்களின் நுகர்வுக்குப் புலன்படாத மாசு படிந்தவை. காஸாவுக்கு பொருள்களை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த பாதையைக் கடந்த (2023) அக்டோபரில் இஸ்ரேலிய அரசு முற்றிலுமாக அடைத்துவிட்டதால், கடல் நீரைக் குடிநீராக்க காஸாவில் இருந்த மூன்று ஆலைகளும் இயங்க முடியாமல் போய்விட்டன.
கடந்த அக்டோபரில் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுக்கும்போது தன்னுடைய நோக்கம் ‘விலங்கு மனிதர்களான’ ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதுதான் என்றும் எனவே அங்கிருந்த மக்கள் காஸாவின் தென் பகுதிக்குச் சென்றுவிட வேண்டும் என்று கூறி அவர்களுக்கு மிகக் குறுகிய அவகாசமே கொடுத்தது.
ஆனால் காஸாவின் தென் பகுதியில் தன்ணீர்க் கிணறுகளோ கழிவுநீர்ப் பாதைகளோ செயல்படுவதில்லை. ஆக காஸா மக்கள் ஒன்று இஸ்ரேலிய இராணுவத்துடன் மோதி இறக்க வேண்டும் இல்லாவிட்டால் தாகத்தால் தவித்து உயிர் நீக்க வேண்டுமென்ற நிலை உருவாகியுள்ளது.
இஸ்ரேல், ஏகாதிபத்திய நாடுகள் ஆகியவற்றின் உண்மை நோக்கம்
தற்போதைய குண்டு வீச்சுத் தாக்குதல் தொடங்கிய மூன்று வாரங்களுக்குப் பிறகு இஸ்ரேலிய அரசு காஸா, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதி அகியவற்றின் கடற்கரைகளுக்கு அப்பால் கடலிலுள்ள எண்ணெய் வளங்கள், இயற்கை வாயு ஆகியவற்றைத் தோண்டி எடுக்கும் தொழிலை விரிவுபடுத்தப் போவதாக அறிவித்தது.
காஸா பகுதியில் உள்ள எண்ணெய் , இயற்கை வாயு வளங்களை ஆராய்வதற்காக அது பிரிட்டிஷ் நிறுவனமான ’பிரிட்டிஷ் பெட்ரோல்’ (BP) உள்ளிட்ட ஆறு பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு 12 உரிமங்களை வழங்கியுள்ளது.
அந்த ஆய்வுகளில் வெற்றியடையும் நிறுவனங்கள் முன்னுவமை இல்லாத அளவுக்கு முதலீடுகளை செய்வதாக வாக்களித்துள்ளதாக இஸ்ரேலிய எரிசக்தித் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Karz) அறிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீடுகளைப் பொருத்தவரை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இஸ்ரேல் பேச்சு வார்த்தை நடத்தியது, இது முதல் தடவையல்ல.
2008இல் காஸா மீது இஸ்ரேலிய இராணுவம் படையெடுப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே காஸாவின் கடற்கரைக்கு அப்பாலுள்ள எண்ணெய் வளங்கள் மீது தனக்கு முழு உரிமையும் இறையாண்மையும் இருப்பதாக இஸ்ரேலிய அரசு அறிவித்தது. ‘பிரிட்டிஷ் காஸ்’ என்ற நிறுவனத்துடன் அது மீண்டும் மீண்டும் பேச்சு வார்த்தைகளை நடத்தியது.
அதாவது போருக்குப் பிந்தைய காஸாவில் இயற்கை வாயு வளங்களைச் சுரண்டி எடுப்பதற்கான திட்டத்தின்படி இந்த பேச்சுவார்த்தை காஸா பகுதியில், ’காஸா மரைன்’ ( Gaza Marine) என்றழைக்கப்படும் ( காஸா கடற்கரைக்கு அப்பாலுள்ள) எண்ணெய் வயல்கள் தொடர்பானதாகும்.
தற்போது இஸ்ரேலியக் கடற்கரைக்கு அப்பால் இஸ்ரேலிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள எண்ணெய், இயற்கை வாயு வயல்களைவிட நிலத்திற்கு மிகவும் அருகிலேயே ’ காஸா மரைன்’ இருப்பதால், அந்த வளங்களைச் சுரண்டி எடுப்பது செலவு குறைந்ததாக இருக்கும், ’காஸா மரைன்’ வளங்களின் இன்றைய நிகர மதிப்பு 4.50 பில்லியன் டாலராகும் ’ வணிகம், வளர்ச்சி ஆகியவற்றுக்கான ஐ.நா. மாநாடு’ (UNCTAD) என்ற அமைப்பு, மத்தியதரைக் கடல் பகுதியிலுள்ள லேவண்ட் வடிநிலப் பகுதி (Levent Basin) முழுவதிலுள்ள எண்ணெய் , இயற்கை வாயு வளங்களின் மதிப்பு 524 பில்லியன் டாலருக்கும் அதிகம் என மதிப்பிட்டுள்ளது.
2020இல் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு ரஷ்யா மீது மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் பொருளாதாரத் தடை விதித்தன.
அதன்படி ரஷ்ய எண்ணெய், இயற்கை வாயு ஆகியவை அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டதன் காரணமாக அந்த நாடுகள் எரிசக்தித் தட்டுப்பாட்டை எதிர்கொண்டன. அந்த சிக்கலிலிருந்து மீள்வதற்கு சவுதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து அதிக விலைக்கு வாங்குகின்றன.
எனவே அந்த சூழ்நிலையில் எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் தன்னை உலகிலேயே மிகப் பெரும் வலிமை வாய்ந்த நாடாக ஆக்குவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் மேற்கொள்ளத் தொடங்கியது. அதன் பொருட்டு அது ஐரோப்பிய யூனியனுடன் வரலாற்று முக்கியத்துவமுடைய ஒப்பந்தமொன்றை அண்மையில் செய்து கொண்டது.
கடந்த (2023) செப்டம்பர் மாதம் ஐ.நா. தலைமையகத்தில் இஸ்ரேலிய பிரதமர் நெடன்யாஹு ஆற்றிய உரையில் ‘ புதிய மத்திய கிழக்கு’ பற்றிய ஒரு வரைபடத்தை சமர்ப்பித்தார். அதில் பாலஸ்தீனம் முற்றாக நீக்கப்பட்டிருந்தது.
அந்த வரைபடத்தின்படி . அரேபிய தீபகற்பத்திலிருந்து இஸ்ரேல் வரையிலான வழித்தடம் அமைந்திருக்கும். அது கடல்வழியிலுள்ள சோதனை மையங்களை (Checkpoints) தொடாமல் அவற்றைக் கடந்து போகின்றதாக இருக்கும். அதன் காரணமாக பொருள்கள், தகவல்தொடர்பு, எரிசக்திப் பொருள்கள் ஆகியவற்றின் விலைகள் 2 கோடி இஸ்ரேலிய மக்களுக்கு அதிசயத்தக்க முறையில் குறையும்.
அது மட்டும்மல்ல, இந்த வரைபடம் மேற்சொன்ன லேவன் நீர்வடி நிலத்திலுள்ள எண்ணெய், இயற்கை வாயு வளங்களை எடுப்பதற்காக இஸ்ரேல் நாட்டை நிறுவியவரும் அதன் முதல் பிரதமராக இருந்தவருமான பென்- குரியன் பெயரில் புதிய கால்வாய் தோண்டப்படும் என்பதையும் குறிக்கின்றது.
அது தற்போது மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய்க்கு மாற்றாக இருக்கும். சூயஸ் பூசந்தியின் ஊடாக தற்போது ஆசியாவையும் ஐரோப்பாவையும் வணிகப் போக்குவரத்துக்காக இணைக்குக் கடல் வழித்தடமாக இருப்பது சூயஸ் கல்வாய்தான். (பூசந்தி என்பது கடல் போன்ற நீர்நிலைகளால் பிரிக்கப்பட்டிருக்கும் இரண்டு பெரிய நிலப்பகுதிகளை இணைத்து கடலை பிரிக்கும் ஒரு குறுகிய நிலப்பகுதி ஆகும்)
பொதுவாக கடல்களை இணைக்கும் கால்வாய்கள் கப்பல் போக்குவரத்தின் பயண தூரத்தை, குறுக்குவழியே வெகுவாக குறைக்கும் நோக்கத்துடன் பூசந்தியின் ஊடாகவே அமைக்கப்படுகின்றன.
மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் , எகிப்தின் கட்டுப்பாட்டிலுள்ள சினாய் தீபகற்பத்தின் ஊடாக சூயஸ் பூசந்தியின் மேற்குப் பகுதியை வெட்டி எடுக்கப்பட்டே அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கடல்வழிப்பாதை ஐரோப்பாவுக்கும் ஆசியாவிற்கும் இடையிலான கப்பல் பயண தூரத்தை வெகுவாகக் குறைப்பதால், அந்தந்த நாட்டுக் கப்பல்கள் சூயஸ் கால்வாயைப் பயன்படுத்த ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அது எகிப்தின் வருமானத்தில் கணிசமான பகுதியாக உள்ளது.
சூயஸ் கால்வாய் எகிப்தின் கட்டுப்பாட்டிலும் அதன் உடைமையிலும் இருப்பதால், இஸ்ரேல் அதைப் பயனின்றிச் செய்து அதற்கு மாற்றீடாக தன் கட்டுப்பாட்டிலும் அதற்கு அனைத்துவகையிலும் உதவி செய்து வரும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலும் இருக்கும் பென் – குரியன் கால்வாயை உருவாக்கும்.
மத்தியதரைக் கடலையும் ஜோர்டான் நாட்டின் ஒரே கடற்கரை நகரான அகாபா (Aqaba) அருகிலுள்ள வளகுடாவையும் இணைக்கும் 160 மைல் தூரக் கடல் வழித்தடத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி 1960களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் பென்- குரியன் கால்வாயை அமைக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
முதலில் அணுசக்தி உள்ள வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி கடல்வழிக் கால்வாயைத் தோண்டலாம் என்ற யோசனை கூறப்பட்டது. ஆனால் அது பெருமளவில் கதிரியக்கத்தை உருவாக்குமாதலால், மரபான வழிகளில் – இயந்திரங்கள், மனித உழைப்பு முதலியவற்றைக் கொண்டு – அந்தக் கால்வாயை தோண்டலாம் என்றால் அது பெரும் செலவு பிடிக்கும். காஸாவின் ஊடாக அந்தக் கால்வாய் தோண்டும் பணியை மேற்கொண்டால் பாதிக்குப் பாதி செலவு குறையும்.
ஆக, காஸாவை இஸ்ரேல் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டால் அதற்கு இரு பலன்கள் கிடைக்கும்,ஒன்று அங்குள்ள என்ணெய், இயற்கை வாயு வளங்களை முற்றிலுமாகக் கைப்பற்றலாம்.
2. பென் -குரியன் கால்வாயை காஸா ஊடாகக் தோண்டலாம். ஆனால் அவற்றுக்கு இடைஞ்சலாக உள்ளவர்கள் அங்குள்ள 2 மில்லியன் பாலஸ்தீனர்கள். அதனால்தான் காஸாவில் இஸ்ரேலிய இராணுவம் நிரந்தரமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அங்குள்ள 2 மில்லியன் பாலஸ்தீனியர்களை என்ன செய்வது? இந்தத் திட்டத்திற்கு அவர்கள் குறுக்கீடாக இருப்பார்கள் அல்லவா?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோ பிடனின் எரிசக்தி ஆலோசகராக உள்ள அமோஸ் ஹோச்ஸ்டைன் (Amos Hochstein – அவரும் யூதர்தான்) அண்மையில் இஸ்ரேலுக்கு வந்து காஸாவின் கடற்கரைக்கு அப்பாலுள்ள என்ணெய், இயற்கை வளங்களை எடுக்கும் திட்டத்தைத் துரிதப்படுத்துமாறும் அது பாலஸ்தீனத்தின் பொருளாதாரத்திற்குப் புத்துயிர் கொடுக்கும் என்றும் கூறினார்.
இது பாலஸ்தீனர்களுக்காக அமெரிக்கா வடிக்கும் முதலைக் கன்ணீர்தான் என்பது ஒருபுறமிருக்க, அங்குள்ள எண்ணெய் , இயற்கை வளங்களின் பலன்களில் கடுகளவுகூட பாலஸ்தீனர்களுக்குப் போய்ச் சேர்வதில் இன ஒதுக்கல் முறையைக் கடைப்பிடிக்கும் இஸ்ரேலுக்கு விருப்பம் இல்லை. அது பாலஸ்தீனர்களின் இருப்பே தனக்கு இடையூறு என்று கருதுகிறது.
எனவேதான் அது பாலஸ்தீனர்களை இனக்கொலை செய்து அவர்களைத் துடைத்தழிக்கும் இராணுவத் தாக்குதலை நடத்துகிறது. பாலஸ்தீன மக்களின் வம்ச விருட்சங்கள் முழுவதையும் அழித்தல், ஒலிவ மரங்களுக்கு நஞ்சூட்டுதல், ஜோர்டான் நதியை வறண்டுபோகச் செய்தல் ஆகியவையும் அவற்றுக்கு ஏகாதிபத்திய நாடுகள் அனைத்து வகை உதவி செய்து வருவதும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்துள்ளன.
இஸ்ரேல் ஏற்படுத்தி வரும் சூழல் சீர்கேடு அந்தப் பகுதியை மட்டுமல்ல, நாம் வாழக் கிடைத்துள்ள இந்த ஒரே ஒரு புவிக் கோளம் முழுவதையும் நாசமாக்கிவிடும்.
அராபிய மக்கள் உள்ள எகிப்து, மத்திக் கிழக்கு நாடுகள், வளைகுடா நாடுகள் ஆகியவை ஒன்று பெரும்பாலும் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் அடிமைகளாக இருக்கின்றன அல்லது ஈரான், ஏமன், லிபியா, சிரியா ஆகியவை போல அமெரிக்க, ஐரோப்பிய , சவூதி அரேபிய இராணுவத் தலையீடுகளால் சீர்குலைக்கப்பட்டுள்ளன. பாலஸ்தீன மக்கள் மீது கரிசனம் கொண்ட ஜோர்டான் நாடு, அமெரிக்காவுக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது.
1967இல் அரபு நாடுகள் இஸ்ரேலிடம் தோல்வி கண்ட பிறகு அரபு உலகம் முழுவதிலுமே தோல்வி மனப்பான்மையும் விரக்தி உணர்வும் மேலோங்கியிருந்த காலத்தில் உலகப் புகழ்பெற்ற அராபியக் கவிஞர்களிலொருவரான நிஸ்ஸான் கப்பானி எழுதினார்: அரபுக் குழந்தைகளே எதிர்காலத்தின் தானியக் கதிர்களே நீங்கள் எங்கள் சங்கிலிகளை உடைப்பீர்கள் எங்கள் தலைகளில் உள்ள அபினியைக் கொல்வீர்கள் பிரமைகளைக் கொல்வீர்கள். அரபுக் குழந்தைகளே மூச்சுத்திணறச் செய்யப்பட்ட எங்கள் தலைமுறையைப் பற்றிப் படிக்காதீர்கள் நாங்கள் வீணாகிப் போனவர்கள் தர்பூசிணிப் பழ ஓட்டைப் போல எதற்கும் பயன்படாதவர்கள் எங்களைப் பற்றிப் படிக்காதீர்கள் எங்களை நகல் செய்யாதீர்கள் எங்களை ஏற்றுக் கொள்ளாதீர்கள் எங்கள் கருத்துகளை ஒப்புக் கொள்ளாதீர்கள் நாங்கள் மோசடிக்காரர்களும் செப்பிடுவித்தைக்காரர்களுமடங்கிய கூட்டம் அரபுக் குழந்தைகளே வசந்தகால மாரிகளே எதிர்காலத்தின் தானியக் கதிர்களே தோல்வியை வெல்லப் போகும் தலைமுறையினர் நீங்கள்.
கட்டுரையாளர் குறிப்பு:
எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் வெள்ளம் பாயும்போது தெரியலையா? – அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: அவசர டெல்லி பயணம்… அமித் ஷாவை சந்திக்கும் உதயநிதி