தனது பெயரை, தொழிலை, பணத்தை பறித்ததாக நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலச் செயலாளராக இருந்த சூர்யா சிவா ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடல் வைரலான நிலையில், காயத்ரி ரகுராம் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதோடு பெண்களுக்கு பாஜகவில் பாதுகாப்பு இல்லை என அவர் கூறி வரும் நிலையில், இதற்கு பாஜக பிரமுகர் குஷ்பு உள்ளிட்டோர் பதிலளித்து வருகின்றனர்.
இந்நிலையில் 6 மாத காலம் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த காயத்ரி ரகுராம் நிரந்தரமாக நீக்கப்படுவதாக மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் லோகநாதன் அறிவித்துள்ளார்.
அதில், “தனது சுய விருப்பத்தின் பெயரில் பாஜகவிலிருந்து விலகுவதாக சமூக வலைதளங்களில் காயத்ரி ரகுராம் பதிவிட்டு வந்துள்ளார். அத்துடன் மாநில அமைப்பு பொதுச் செயலாளருக்கு வாட்ஸ் அப்பில் “நான் ராஜினாமா செய்கிறேன்” என்று செய்தியும் அனுப்பி இருந்தார்.
அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு மாநில தலைவர் அண்ணாமலை ஒப்புதலின்படி காயத்ரி ரகுராம் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச்சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதனை விமர்சித்துள்ள காயத்ரி ரகுராம், “ஆபாச பேச்சாளரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசும் ஒரு தலைவருக்கு Z வகைப் பாதுகாப்பு.
ராஜினாமா செய்யச் சரியான முடிவை எடுத்தேன். பெண்கள் பாதுகாப்பு சூப்பர். நன்றி மோடி ஜி நான் உங்களை அப்பாவாக பார்த்தேன்.
என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மான பங்கம் செய்ததற்கு நன்றி, என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி.
என்னால் திரும்பக் கொண்டுவர முடியாத இளமைக் காலத்தைப் பறித்ததற்கு நன்றி.
என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பறித்ததற்கு நன்றி, பாதுகாப்பைத் தராததற்கு நன்றி. எனக்குத் துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி, நீதி வழங்காததற்கு மிக்க நன்றி.
கடவுள் உங்களைப் பார்த்துக்கொள்வார். நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள் உங்களுக்குப் பதில் சொல்வார்கள். நான் என் தர்மத்தை நிலைநாட்டுவேன். விரைவில் களத்தில் சந்திப்போம்” என கூறியுள்ளார்.
பிரியா
போகி பண்டிகை : மேளம் அடித்து கொண்டாட்டம்!
வேலைவாய்ப்பு : கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!