வைஃபை ஆன் செய்ததும் ட்விட்டர் இன்பாக்ஸில் சில ஸ்க்ரீன் ஷாட்டுகள் வந்து விழுந்தன. பாஜக நிர்வாகியாக இருந்து ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம், கனத்த மனத்தோடு பாஜகவில் இருந்தே விலகுவதாக ஜனவரி 3 அதிகாலை 2.04 மணிக்கு வெளியிட்ட அறிவிப்புதான் அது.
அந்த ட்விட்டர் த்ரட்டை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
”பாஜகவின் அக்கா தம்பியாக விளங்கிய திருச்சி சூர்யா- டெய்சியின் ஆபாச ஆடியோ கடந்த நவம்பர் மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் திருச்சி சூர்யா திமுகவின் ஸ்லீப்பர் செல், பாஜகவின் பெயரைக் கெடுப்பதற்காக இப்படி பேசியிருக்கிறார். அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும், டெய்சிக்கு என்னுடைய ஆதரவும், ஆறுதலும் என்று பதிவிட்டார்.
ஆனால் அடுத்த நாளே கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து ஆறு மாத காலத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதை கடுமையாக எதிர்த்த காயத்ரி ரகுராம், எவ்வித விசாரணையும் இன்றி என்னை நீக்கியிருக்கிறார் அண்ணாமலை. நான் தேசிய தலைமையிடம் முறையிடுவேன் மீண்டும் பாஜகவுக்குள் வருவேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் அந்த விவகாரத்தின் அடுத்தடுத்த டெவலப்மென்ட்டுகளில் திருச்சி சூர்யாவும் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின் அவர் அடிப்படை உறுப்பினரில் இருந்து தானாகவே விலகினார். பாஜக அடிப்படை உறுப்பினராக தொடர்ந்த காயத்ரி ரகுராம் ட்விட்டரிலும் தான் அளிக்கும் பேட்டிகளிலும் அண்ணாமலையை தொடர்ந்து தாக்கி வந்தார்.
மேலும் தன்னைப் பற்றி ஆபாசமான முறையில் மலிவான முறையில் அண்ணாமலையின் வார் ரூம் உத்தரவுப்படி அவரது ஆதரவாளர்கள் ட்விட்டரில் விமர்சிப்பதையும் ட்ரோல் செய்வதையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் பாஜகவில் இருக்கும் பெண் நிர்வாகிகள் அண்ணாமலையால் உளவு பார்க்கப்படுவதாக கூறினார். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
இப்படி தொடர்ந்து அவர் பாஜக உறுப்பினராக இருந்துகொண்டே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வெளிப்படையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைப்பதற்காக கோவை வந்தார்.
அப்போது தமிழக பாஜக நிர்வாகிகளிடம் சிறிது நேரம் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடிய நட்டா, ‘நான் இப்போது வந்திருப்பது ஏதோ சாதாரணப் பொதுக்கூட்டத்துக்காக அல்ல. தேர்தல் பிரச்சாரத்துக்கான பொதுக்கூட்டம்.
தமிழகத்தில் நம்முடைய தேர்தல் வேலை அதிகாரபூர்வமாக தொடங்கிவிட்டது. தேர்தல் வேலைகள் தொடங்கிவிட்ட நிலையில் இனிமேலும் தமிழக பாஜக தலைவர் மீது புகார்களை தூக்கிக் கொண்டு டெல்லிக்கு வந்துகொண்டிருக்காதீர்கள்.
அண்ணாமலைதான் தலைவர். அதில் இப்போது மாற்றம் இல்லை. எனவே மாநிலத் தலைவர் தலைமையில் தேர்தல் பணிகளைத் தொடருங்கள். சீனியர் தலைவர்களான உங்களுக்கென பணிகள் திட்டமிட்டப்பட்டு ஒதுக்கப்படும்’ என்று உறுதியோடு சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் நட்டா.
மேலும் இந்த பயணத்துக்குப் பிறகு காயத்ரி ரகுராம் உள்ளிட்ட மாநிலத் தலைமையை தொடர்ந்து விமர்சிக்கும் சிலரை டிஸ்மிஸ் செய்யவும் தேசிய தலைமையிடம் ஓப்புதல் பெற்றுவிட்டார் அண்ணாமலை.
இந்த பின்னணியில் ஜனவரி 3 ஆம் தேதி காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து நீக்குவதற்கான அதாவது டிஸ்மிஸ் செய்வதற்கான அறிவிப்பு 2 ஆம் தேதியே தயாராகியிருக்கிறது.
இந்த நிலையில் இதுபற்றிய அலர்ட் காயத்ரி ரகுராமுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தரப்பில் இருந்து நேற்று இரவு சென்றிருப்பதாக சொல்கிறார்கள்.
அதாவது, ‘சட்டமன்றத் தேர்தல் வரையிலும் என்று சொல்ல முடியாவிட்டாலும் 2024 மக்களவைத் தேர்தல் வரை அண்ணாமலைதான் தமிழக பாஜக தலைவர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. நட்டாவே இதை கோவை பயணத்தின் போது உறுதிப்படுத்திவிட்டார்.
மேலும் உங்களை டிஸ்மிஸ் செய்யவும் தயாராகிவிட்டார் அண்ணாமலை. டிஸ்மிஸ் செய்துவிட்டால் அதன் பின் பாஜகவில் நுழையவே முடியாது. எனவே அதற்கு முன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிவிடுங்கள்.
பாஜகவுக்கு உள்ளே இருந்து அண்ணாமலையை எதிர்ப்பதை விட பாஜகவுக்கு வெளியே சென்று அண்ணாமலையை டார்கெட் செய்யுங்கள்’ என்று தனக்கு வந்த அலர்ட்டின் அடிப்படையிலேயே காயத்ரி ரகுராம் இன்று நள்ளிரவு 2.04 மணிக்கு பாஜகவின் உறுப்பினரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவர் தாமதித்திருந்தால் இன்று காலை அவரது டிஸ்மிஸ் அறிவிப்பை அண்ணாமலை வெளியிட்டிருப்பார் என்கிறார்கள்.
மேலும் பாஜகவில் இருந்து வெளியேறியுள்ள காயத்ரி ரகுராம் கட்சி ரீதியாக பாஜகவை தாக்கக் கூடாது என்றும், அண்ணாமலையை மட்டுமே குறிவைத்து தாக்க வேண்டும் என்றும் அவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்த ஆலோசனையை அண்ணாமலைக்கு எதிராக கட்சியில் இருக்கும் சில சீனியர்களே வழங்கியிருக்கிறார்கள்.
இப்போது பாஜக என்ற கட்டுப்பாட்டுக்குள் இல்லாத காயத்ரி ரகுராம் அண்ணாமலையின் வார் ரூம், அவரது தனிப்பட்ட செயல்பாடுகள் பற்றி தொடர்ந்து விமர்சிப்பார்.
திமுக உள்ளிட்ட வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டால் இதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். எனவே எந்த கட்சிக்கும் செல்லாமல் அண்ணாமலை மீது போலீஸ் புகார் வரைக்கும் சென்று கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.
இதை அண்ணாமலைக்கு எதிரான சீனியர்களும், திமுக போன்ற எதிர்க்கட்சிகளும் பயன்படுத்திக் கொள்வார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
பொங்கலுக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
‘டாடா’வை வாங்கும் ரெட் ஜெயன்ட்