மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வரும் 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 4-ம் தேதி கடந்த 2009 முதல் 2014 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் விருதாளர்களுக்கு தங்கப்பதக்கம், சிறந்த படங்கள், நெடுந்தொடர் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப்பரிசு ஆகியவை வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கும் விழா குறித்து செய்தி அறிக்கை இன்று (செப்டம்பர் 2) அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் 2009-2014 ஆண்டுக்கான மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு வெளியானது.
ஆனால் அப்போது அதற்கான விழா நடத்தப்படவில்லை. இதனையடுத்து திமுக ஆட்சியில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் வரும் 4ம் தேதி விருது வழங்கப்படுகிறது.
காயத்ரி ரகுராமுக்கு விருது!
இதில் 2014-ம் ஆண்டுக்கான சிறந்த நடனக் கலைஞர் விருது நடிகையும், நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராமிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தில் சிறந்த நடனத்தை அமைத்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக இருக்கும் காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி!
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ”எனக்கு மாநில விருது கிடைத்தது உணர்ச்சிகரமான தருணம். இந்த விருதை எனது தந்தை எஸ்.ரகுராம் டான்ஸ் மாஸ்டருக்கு சமர்ப்பிக்கிறேன்.
நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மாநில விருது வழங்கும் விழாவினை ஏற்பாடு செய்ததற்காக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. எனது நண்பரின் தந்தையிடமிருந்து நான் அதைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நடிகர்கள் சமுத்திர கனி, ஜெயம்ரவி மற்றும் அமலா பாலுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ”எனது தொழில், அரசியல் மற்றும் அரசியல் பார்வைகளிலிருந்து வேறுபட்டது. நான் வெறுப்பவள் இல்லை. நான் சரியான விஷயங்களைச் செய்ய விரும்புகிறேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நண்பரா?
2019ம் ஆண்டு வரை பல்வேறு படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய காயத்ரி ரகுராம், பின்னர் 2020ல் பாஜகவில் இணைந்தார். சர்ச்சை கருத்துகளுக்கு பெயர் போன இவர், தொடர்ந்து ஆளும் கட்சியான திமுகவிற்கு எதிராக கருத்து கருத்து பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது மாநில விருது பெறப்போவதை அடுத்து, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் விருது அளிக்கும் நிலையில், அவரது மகனும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம் எல் ஏவான உதயநிதி ஸ்டாலினை நண்பர் என்றும் அவர் அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
அரசு விருது பட்டியலில் நயன்தாரா, ஆர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், திருமதி செல்வம்