திருச்சி சூர்யா மீது ஆபாச புகார்: கண்டித்த காயத்ரியை நீக்கிய  அண்ணாமலை 

அரசியல்

தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் அக்கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இன்று (நவம்பர் 22) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும்  கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் வகைகளில் தொடர்ந்து செயல்பட்டு வருவதால்  கட்சியில் அவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து ஆறு மாத காலத்துக்கு நீக்கப்படுகிறார்.

ஆகவே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி ரீதியாக அவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

இந்த அறிவிப்பை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ள காயத்ரி ரகுராம்,

“இதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் என் மீது அன்பு கொண்டவர்கள், தொடர்ந்து என்னிடம் பேசிக் கொண்டிருப்பார்கள். யாரும் அதைத் தடுக்க முடியாது. நான் நீக்கப்பட்டிருந்தாலும் தேசப் பணியைத் தொடர்ந்து செய்வேன்”

என்று அண்ணாமலைக்கு அதிரடியாக பதில் கூறியுள்ளார்.

அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் காயத்ரி ரகுராமுக்கும் கடந்த சில நாட்களாகவே சமூக தளங்களில் வார்த்தைப் பரிமாற்றங்கள் கடுமையாக நடந்து வந்திருக்கின்றன.

இந்த நிலையில்தான் சமீபத்தில் பாஜகவில் வந்து சேர்ந்தவரான திருச்சி சூர்யா பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநில நிர்வாகி டெய்சியை கடுமையாக பேசி மிரட்டும் ஆடியோ உரையாடல் சமூக தளங்களில் வெளியானது.

அந்த ஆடியோவில், தமிழக பாஜக அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மீதே கடுமையாக குற்றச்சாட்டுகளை வைத்திருக்கும் சூர்யா, டெய்சியை மிக அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசுகிறார்.

இந்த ஆடியோ பற்றி கருத்து தெரிவித்த காயத்ரி ரகுராம்,  “ குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு என் ஆறுதல் மற்றும் ஆதரவு. கட்சியை குறை சொல்ல வேண்டாம் என அனைவரையும் தாழ்மையாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

திமுக ஸ்லீப்பர் செல்கள் தான் நம்மை சேதப்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் திராவிட மாடலை இங்கே காட்டுகிறார்கள். இதை நான் கண்டிக்கிறேன். இந்த நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும்.

பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார் மாநிலத் தலைவர். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்?,

இந்த ஹைனாக்களுக்கு ( கழுதைப் புலி) அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு” என்று இன்று கடுமையாக கண்டித்தார்.

gayathri raghuram was expelled from bjp party

குஷ்புவை ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை கண்டித்து நடந்த மகளிர் அணி ஆர்பாட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை,

”பாஜக ஆட்சியில் அமரும்போது பெண்ணை பற்றி தவறாக பேசுபவர்களுக்கு நாக்கு இருக்காது… கை வைப்பவர்களுக்கு கை இருக்காது… அப்படிப்பட்ட ஆட்சியை பாஜக கட்சி கொடுக்கும்” என்று நவம்பர் 1 ஆம் தேதி பேசியிருந்தார்.

இந்த நிலையில்தான் கட்சி விதிகளை மீறியதாக காயத்ரி ரகுராமை நீக்கியிருக்கிறார் அண்ணாமலை.

தன் கட்சி நிர்வாகியாக இருக்கும் பெண்ணையே ஆபாசமாக அவதூறாக பேசியதாக கூறப்படும் திருச்சி சூர்யா மீது முதல் கட்ட நடவடிக்கை எடுக்காமல் அதை கண்டித்து கருத்து தெரிவித்த காயத்ரி ரகுராம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி நீக்கியிருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.

வேந்தன்

“ஆண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கும் காலம் வரலாம்”: ராணி மேரி கல்லூரியில் ஸ்டாலின்

அவ்வை நடராஜன் மறைவு: காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி!

+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1