கோவையில், ட்விட்டர் பதிவு தொடர்பாக நடிகை காயத்ரி ரகுராமிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் சார்பில் இன்று (அக்டோபர் 29) கோயம்புத்தூர் பகுதியில் உள்ள குஜராத் சமாஜத்தில் மாநில பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் வெளிநாடு மற்றும் அண்டை மாநிலத் தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவரும், திரைப்பட நடிகையுமான காயத்ரி ரகுராம் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் இளைஞர்கள் பலர் போலி விசாவை பெற்றுச் சென்று அங்கு தவறான கும்பலிடம் மாட்டிக் கொள்கின்றனர்.

அங்கு, அவர்கள் தவறான வழியில் வழி நடத்தப்படுகிறார்கள். எனவே வெளிநாடு செல்லும் இளைஞர்கள் பாதிக்காத வகையில் தீவிர சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
நான் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து தமிழ் மொழி குறித்து அங்குள்ள மக்களிடம் கூறி வருகிறேன்.
அப்படி ஒரு முறை பிலிப்பைன்ஸ் சென்றபோது, அங்கு தமிழைப் போற்றும் திருவள்ளுவர் சிலைகள் அதிகமாக இருந்தது.
எனவே தமிழகத்திலும் வெளிநாடுகளைப் போல திருவள்ளுவர் சிலைகளை அதிக அளவில் சிலை வடிவமைப்பாளர்கள் செய்து விற்பனை செய்ய வேண்டும்.
திராவிட கட்சிகள் தமிழை வளர்க்கவில்லை. அதற்குப் பதிலாக ஆங்கிலத்தைத்தான் வளர்த்துள்ளது.
ஆங்கில கல்விக்கூடங்கள்தான் தமிழகத்தில் பெருகியுள்ளன. எனவே தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இந்தி எங்கும், யாரிடமும் திணிக்கப்படவில்லை” என்றார்.

பின்னர் பேட்டி முடிந்ததும், ’ட்விட்டர் பக்கத்தில் 1998ஆம் ஆண்டு போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பதாக கருத்து ஒன்றைப் பதிவு செய்துள்ளீர்களே’ என காயத்ரி ரகுராமிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ”அதுபோன்ற பதற்றமான நிலையை உருவாக்க நான் எந்தப் பதிவும் போடவில்லை.
இந்த கேள்வி கேட்டு நீங்கள்தான் பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகிறீர்கள்” என ஆங்கிலத்தில் சத்தமாக பதிலளித்தார்.
அதற்கு பத்திரிகையாளர் ஒருவர், நாங்கள் பதற்றத்தை உருவாக்கவில்லை என்று கூறுகிறார்.
அப்போது அங்கிருந்த பாஜகவினர், நீங்கள் எந்த மீடியா என்று கேள்வி கேட்க, பத்திரிகையாளர்களுக்கும், பாஜகவினருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெ.பிரகாஷ்
ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு போட்ட உத்தரவு!
மீனவர்களைச் சிறை பிடித்த இலங்கை கடற்படை: ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்!