”ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு சீமான் அண்ணனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்ததற்காக நன்றி கூறுவேன்” என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
நடன இயக்குனராகவும், திரைப்பட நடிகையாகவும் இருந்தவர் காயத்ரி ரகுராம். இவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். இவருக்கு தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது.
இதனிடையே, பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யா – டெய்சி விவகாரத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பேசியதாக காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக ஜனவரி 3ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்து தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதன்பின்னர் தன்னை பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு கருத்துகள் பதிவிட்டு வருவதாக கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் விசிக தலைவர் திருமாவளவனை நேற்று (பிப்ரவரி 21 ) மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் காயத்ரி ரகுராம், எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது. விசிக தலைவர், எம்.பி. அண்ணா தொல் திருமாவளவன் அவர்களுக்கும், விசிகவுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி. மரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு இது என்று பதிவிட்டிருந்தார்.
காயத்ரி ரகுராம் நமது மின்னம்பலத்திற்கு அளித்த பேட்டியில், “ஏற்கனவே இருந்த பிரச்னையில் திருமாவளவன் நடந்துகொண்ட விதத்தில் என் மனதில் உயர்ந்துவிட்டார் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு சீமான் அண்ணனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்ததற்காக நன்றி கூறுவேன்” என்று இன்று (பிப்ரவரி 22 ) ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
பாஜகவை கடுமையாக எதிர்க்கும் விசிக தலைவர் திருமாவை நேற்று சந்தித்த நிலையில் இன்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க உள்ளதாக காயத்ரி ரகுராம் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்