சபரீசனை சந்தித்த காயத்ரி : சஸ்பெண்டுக்கு இது தான் காரணமா?

அரசியல்

தமிழக பா.ஜ.க.வில் இருந்து 6 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம், செய்தியாளர் சந்திப்பு, நேர்காணல்கள் மற்றும் ட்விட்டர் பதிவுகள் மூலம் தனது மனக்குமுறல்களை பதிவு செய்து வருகிறார்.


தன்னிடம் விசாரணை கூட நடத்தாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கையில் பவர் உள்ளதால் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அவர் விமர்சித்துள்ளார்.

யூடியூப் சேனல்களுக்கு கொடுத்த நேர்காணல்களில் அண்ணாமலைக்காக இயங்கும் ஐடி விங்குகள் தொடங்கி அவர் தன்னை எப்படி எல்லாம் உதாசீனப்படுத்தினார் என்பது வரை கண்ணீர் மல்க காயத்ரி ரகுராம் பேசியுள்ளார்.

கட்சியை விட்டு நீக்குவதற்கு முன்பு தன்னை செல்போனில் தொடர்பு கொண்ட அண்ணாமலை தான் எந்த வேலையையும் செய்யவில்லை என கட்சிக்காரர்கள் கூறுவதாக சொன்னது அதிர்ச்சியளித்ததாகவும் மேலும் 8 ஆண்டுகள் கட்சியில் இருப்பதெல்லாம் பெரிதில்லை என உதாசீனப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜக தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வகுமார், விளையாட்டு மற்றும் திறன்மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் நடத்தி வரும் ஐடி விங் மூலம் தான் குறிவைக்கப்படுவதாக அவர் சந்தேகம் எழுப்பினார்.

அண்ணாமலையை எளிதில் அணுகமுடியவில்லை என்றும் தன்னிடம் விளக்கம் கேட்காமல் நீக்கிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சோமர்செட் ஹோட்டலில் சந்தித்து காயத்ரி ரகுராம் ஒரு மணி நேரம் வரை பேசியதாகவும் முதுகில் குத்துபவர்களுக்கு பாஜகவில் இடமில்லை என்றும் அமர்பிரசாத் ரெட்டி காயத்ரி ரகுராம் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை காயத்ரி ரகுராம், அமர் பிரசாத் ரெட்டியை முட்டாள் என விமர்சித்து ட்விட்டரில் பதிவு வெளியிட்டார். அதில் தன்னுடைய தோழியின் பிறந்த நாளுக்கு சில பிரபலங்கள் அழைக்கப்பட்டிருந்ததாகவும் அதில் சபரீசனும் கலந்துகொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், யாரையும் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டு போகும் அளவுக்கு தான் முதிர்ச்சியற்ற நபர் அல்ல என அவர் விளக்கமளித்துள்ளார். இந்த பதிவை தற்போது காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.

இந்நிலையில் இன்று (நவம்பர் 23) செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை இன்னும் 10 நாள் பொறுத்திருங்கள் அதிரடி நடவடிக்கை தொடரும் என கூறியுள்ளார். கட்சியில் களை எடுக்க வேண்டியவர்களை நிச்சயம் நீக்குவேன் என்றும் கூறியுள்ளார்.

அப்துல் ராஃபிக்

அரசு விளம்பர பேனர் ஊழல்: ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி புகார்!

இதுதான் உங்கள் அரசியலா: காயத்ரி ரகுராம் பக்கம் நிற்கும் கஸ்தூரி

+1
0
+1
3
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *