அமைச்சர் பொன்முடி மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்.பியுமான கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு எம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 2006-11ஆம் ஆண்டில் திமுக அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் அளவுக்கு அதிகமாக குவாரிகளில் செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.
பொன்முடி அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டவர்கள் மீது 2012-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் கவுதம சிகாமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது.
இதனை தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்தநிலையில் கவுதம சிகாமணி மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி எம்.பி எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த வழக்கு செப்டம்பர் 11-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
செல்வம்
அனுமதியற்ற மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெற அவகாசம் : முத்துசாமி புதிய அறிவிப்பு!