நடிகை கௌதமியின் சொத்துகளை ஏமாற்றியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்த நடிகை கவுதமி, கடந்த அக்டோபர் 23ஆம் தேதி அக்கட்சியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார்.
அதில் பாஜகவைச் சேர்ந்த அழகப்பன் தனது சொத்துகளை அபகரித்து கொண்டதாகவும், ஆனால் பாஜக கட்சி தனக்கு ஆதரவு தெரிவிக்காமல், அழகப்பனுக்கு ஆதரவாக இருப்பதால் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்றும் கூறியிருந்தார்.
சென்னை மாநகர காவல்துறையில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் 2023 செப்டம்பர் 29 ஆம் தேதி கவுதமி ஒரு புகாரும் அளித்திருந்தார்.
அந்த புகாரில், “எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது மருத்துவ செலவுகளுக்காக எனது சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்தேன். பாஜக பிரமுகரான அழகப்பனை நம்பி பணமும் சொத்துக்களின் பவரும் கொடுத்தேன்,
நானும் பாஜகவில் இருந்ததால் அவர் மீது அதிகமான நம்பிக்கை இருந்தது, ஆனால் எனது சொத்துக்களை விற்பனை செய்து அவர் மனைவி பெயரில் சொத்துக்களை வாங்கி சுமார் 6.30 கோடி ஏமாற்றிவிட்டார்,
நானும் பலமுறை பாஜக தலைவர்களிடம் முறையிட்டு உதவி கேட்டேன், ஆனால் அனைவரும் அழகப்பனுக்குதான் ஆதரவாக இருந்தனர்” என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி ஜான் விக்டர் நியமிக்கப்பட்டு. அவரது தலைமையில் மூன்று குழு அமைக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த அழகப்பனை போலீசார் தேடி வந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் குண்ணம்குளம் பகுதியில் அழகப்பன் தலைமறைவாகியிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். டிஎஸ்பி ஜான் விக்டர் தலைமையிலான குழு கேரளா விரைந்தது.

குண்ணம்குளத்தில், அழகப்பன் குடும்பத்துடன் இருக்கும் வீட்டை உறுதி செய்துகொண்ட போலீசார், டிசம்பர் 21 ஆம் தேதி இரவு முதல் அவர்களை கண்காணித்து வந்தனர். நேற்று (டிசம்பர் 22) காலை 7.30 மணியளவில் இவர்கள் தங்கியிருக்கும் வீட்டுக்குச் சென்ற போலீசார் யாரும் தப்பிக்காதவாறு சூழ்ந்து நின்றனர்
வீட்டில் இருந்தவர்களிடம், ‘நாங்கள் சென்னை போலீஸ். கௌதமி கொடுத்த புகாரில் உங்களை கைது செய்கிறோம்’ என்றனர், அவர்களிடமிருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
அதன் பிறகு கேரளா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சென்னைக்கு அழைத்து போக இடமாற்ற மனு தாக்கல் செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
வரும் வழியிலேயே அழகப்பன், அவரது மனைவி நாச்சாள், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, இன்னொரு மகன் சதீஷ்குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரித்துள்ளனர்.
எதற்காக இப்படி ஏமாற்றினீர்கள் என்று போலீசார் கேட்க அதற்கு அழகப்பா மனைவி நாச்சாள், “நடிகை சவகாசம் வேண்டாம் என்றேன். இவர் கேட்காமல் கௌதமி கேட்கும் போதெல்லாம் உதவி செய்தார். மகளைப் போன்று பார்த்துக்கொண்டார். பணம் உதவியும் செய்தோம். ஆனால் நாங்கள் ஏமாற்றிவிட்டோம் என்று குடும்பத்தார் மீது புகார் கொடுத்துள்ளாரே?” என்று அழுதுள்ளார்.
மருமகள் ஆர்த்தி, “எனக்கு எதுவும் தெரியாது. என்மீது ஏன் புகார் கொடுத்தாங்கனு தெரியல” என்று கூறியுள்ளார்.
அழகப்பனிடம் விசாரித்தபோது, “நான் ஏமாற்றவில்லை அவர்தான் எங்கள் குடும்பத்தாரை ஏமாற்றியுள்ளார். கௌதமிதான் எங்களுக்கு பணம் கொடுக்கவேண்டி இருக்கிறது” என்று சொல்ல,
அவரது பேச்சை மறித்த போலீசார், சரி உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று சொல்லும்போது, ஏன் பதுங்கி ஓட வேண்டும்? நேரில் வந்து ஆதாரத்துடன் பதில் சொல்லியிருக்கலாமே? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு, “வழக்கறிஞர்தான் எங்களை தவறாக வழிநடத்திவிட்டார், இது சிவில் கேஸ். நீதிமன்றத்தில் பார்த்துக்கலாம், பெயில் வாங்கி விடலாம் என்றார், இல்லை என்றால் அப்போதே சரண்டராகியிருப்போம்” என பதிலளித்தார் அழகப்பன்.
சரி நீலங்கரையில் 15,890 சதுரடி ரூ.3.90 கோடிக்கு நாச்சாள் பெயரில் சொத்து வாங்கியிருப்பது எப்படி? என போலீசார் கேட்க, அதற்கு பதில் சொல்லாமல்,
“எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளது, கௌதமிக்கு நாங்கள் பணம் கொடுத்த ஆதாரங்கள் இருக்கிறது” என்றார் அழகப்பன்.
சரி உங்கள் வங்கி கணக்குகள், ஆதாரங்களை கொடுங்கள் என்று கேட்டு போலீசார் விசாரித்தனர்.
இதுகுறித்து விசாரணை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்.
“இவர்களை போலீஸ் கஸ்டடியில் எடுக்கவுள்ளோம் . வங்கி கணக்குகள் மற்றும் பணப் பரிமாற்றம், வருமானத்துக்கான வழிகள் என அனைத்தும் பற்றி விசாரிப்போம்” என்றனர்.
சென்னை அழைத்து வரப்பட்ட இவர்கள் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
-வணங்காமுடி
இதுக்கொண்ணும் கொறைச்சல் கெடையாது… மும்பையை வறுக்கும் ரசிகர்கள்!
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்: ருதுராஜ் கெய்க்வாட் விலகல்!