கேங்க்ஸ்டர் முதல் அரசியல்வாதி வரை: யார் இந்த அதிக் அகமது?

அரசியல் இந்தியா

இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் ஒன்று கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 15 அன்று யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கும் உத்தர பிரதேசத்தில் நடந்தது.

உத்தர பிரதேசத்தின் குற்றப்பின்னணி கொண்டவர்கள் பட்டியலில் அரசியல்வாதியாகவும், பிரபல தாதாவாகவும் இருந்த அதிக் அகமது மற்றும் அவரது சகோதரரான அஷ்ரப் அகமது இருவரையும் பிரயாக் ராஜின் சிறையில் இருந்து துமன்கன்ச் காவல் நிலையத்திற்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஏப்ரல் 15 சனிக்கிழமை இரவு 8 மணிக்கு அழைத்துச் சென்றனர்.

பிறகு மருத்துவ பரிசோதனைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரயாக்ராஜ் காவ்லின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர், போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கி கைகளில் விலங்குடன் அதிக் அகமதுவும், அஷ்ரப்பும் சில அடிகள் எடுத்து வைத்தனர்.

அப்போது பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருக்கையில் திடீரென துப்பாக்கிகள் வெடித்தன. அதிக் அகமது, அஷ்ரப் இருவரை நோக்கியும் தலையில் நெற்றியில் என குண்டுகள் பாய்ந்தன. ரத்த வெள்ளத்தில் இருவரும் கீழே சரிந்தனர்…பத்திரிகையாளர் போல் வந்த மூவர் , அத்தனை போலீஸ் பாதுகாப்பையும் மீறி பத்திரிகையின் நேரலை காட்சிகளுக்கு இடையே இருவரையும் சுட்டுகொன்று விட்டு ’ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட்டபடி அந்த இடத்திலேயே நின்றனர்.

அந்த மூவரையும் கைது செய்த உபி போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சமூக தளங்களிலோ இது உபி போலீஸாரின் வேறு மாதிரியான என்கவுன்ட்டர் என்றும் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்தியா முழுதும் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார் இந்த அதிக் அகமது.

ரயிலில் நிலக்கரி திருடும் சிறுவனாக வாழ்க்கையை தொடங்கி கொலைகாரனாக மாறி பிறகு தாதாவாகி அரசியல்வாதியாக எம்.எல்.ஏ எம்பி பதவிவகித்து இன்றைக்கு சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் தாதா அதிக் அகமது யார்?, அவரின் பின்னணி என்ன?

வரலாறு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தொடங்கும். அதிக் அகமதுவிற்கு அது திருட்டின் மூலம் தொடங்கியது.

Gangster turned politician who is atiq ahmed

குதிரை வண்டி ஓட்டி குடும்பத்தை நடத்தி வந்த பெரோஸ் அகமதுவின் மகனாக 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் நாள் உத்தர பிரதேசத்தின் அலகாபாத்தில் (இன்றைய பிரயாக்ராஜ்) அதிக் அகமது பிறந்தார்.

கல்வியில் நாட்டம் இல்லாத அதிக் பிரயாக்ராஜ் நோக்கி வரும் சரக்கு ரயில்களில் இருந்து நிலக்கரியை திருடி விற்பனை செய்யும் வேலையை ஆரம்பித்தார். பின்னர், ரயில்வே கழிவு பொருட்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வந்த அவர் ஒரு கட்டத்தில் ரயில்வே கழிவுகளை வாங்கும் ஒப்பந்தம் கிடைக்காமல் போகவே ஒப்பந்ததாரர்களையும், அரசு அதிகாரிகளையும் மிரட்டி ரயில்வே கழிவு பொருட்களை வாங்குவதை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.

இதை அவர் செய்யும் போது அவருடைய வயது வெறும் 16 மட்டுமே.

பிறகு தொழில் போட்டி அதிகரிக்கவே 1979 ஆம் ஆண்டு அதாவது தன்னுடைய 17 வது வயதில் ஒருவரை கொலை செய்கிறார். திருடுவது, மிரட்டுவது என்று சென்று கொண்டிருந்த அதிக் அகமதுவின் வாழ்க்கையில் அவர் செய்த முதல் கொலை இது. கொலை செய்தால் தான் தன்னைக் கண்டு எல்லோரும் பயப்படுவார்கள். அந்த பயத்தின் மூலம் தான் நினைத்தவற்றை எல்லாம் சாதிக்கலம் என்று நினைத்திருக்கிறார்.

இப்படி தன்னுடைய 23 வயதில் பிரயாக்ராஜ் நகரின் பிரபலமான ரவுடியாக தன்னை மற்றிக்கொண்டார்.

ஆனால் அப்போது அந்த பகுதியில் சந்த் பாபா என்ற ரவுடி கோலோச்சிக் கொண்டிருந்தார்.

இளம் ரத்தம், தனக்கு கீழ் வேலை செய்ய சிலர், தன்னைக்கண்டால் பயப்படும் மக்கள் என்றிருக்க பிரயாக்ராஜ் பகுதி எப்படி சந்த் பாபா கட்டுப்பாட்டில் இருக்கலாம் என்று அதிக் அகமது நினைத்தார். சந்த் பாபாவை கொலை செய்தால் மட்டும் தான் தனது கட்டுப்பாட்டில் அந்த பகுதி முழுவதும் வரும் என்று அவரை கொலை செய்ய முடிவு செய்தார் அதிக் அகமது.

இதனால், அந்த பகுதியில் உள்ள சின்ன சின்ன ரவுடிகளை எல்லாம் தன்பக்கம் இழுத்துக் கொண்டார். பிறகு தன்னுடைய கூட்டாளிகளை வைத்து பட்டப்பகலில் சந்த் பாபாவை தீர்த்துக்கட்டினார்.

மெல்ல மெல்ல ஒரு தாதாவாக அறிமுகமான அதிக் அகமது ரவுடிகளின் கடைசி புகலிடம் அரசியல் என்பதையும் உணரத் தவறவில்லை. தாதாவாக இருந்து தனக்கு கிடைத்த பணத்தை எல்லாம் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அரசியலில் குதித்தர்.

17 வயதில் கொலை செய்தவர் 27 வயதில் அதாவது 1989 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் மேற்கு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம்கண்டார். அதில் வெற்றியும் பெற்றார். அதன் மூலம் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார்.

பிறகு 1991 முதல் 1993, 93 முதல் 96 என்று மொத்தம் மூன்று முறை சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றிருக்கிறார்.

எந்த ஒரு அரசியல் கட்சியின் பின்புலமும் இல்லாமல் ஒரு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு மூன்று முறையும்… சமாஜ்வாதி கட்சியின் மூலம் ஒரு முறையும் அப்னா தளம் கட்சியின் மூலம் ஒரு முறையும் அலகாபாத் மேற்கு தொகுதியை 1989 முதல் 2004 ஆம் ஆண்டு வரை என அந்த தொகுதியையும் தொகுதி மக்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தர்.

2004 முதல் 2009 வரை புல்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி எம்பி ஆகவும் பதவி வகித்தார்.

சமாஜ்வாதி, அப்னா தளம் உள்ளிட்ட கட்சிகளில் இருந்த இவர் மீது கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் என 103 வழக்குகள் உள்ளன. கடந்த 2005 ஆம் ஆண்டில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் அதிக் அகமது மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பால் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி கொல்லப்பட்டார். இந்த வழக்கிலும் அதிக் அகமது மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

உமேஷ் பால் கடத்தப்பட்ட வழக்கில் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி அதிக் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதேநாளில் அவரது 3-வது மகன் ஆசாத் அகமது என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த 1995-ல் மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றபோது..,. சமாஜ்வாதி ஆதரவாளர்கள், மாயாவதி உட்பட பகுஜன் எம்எல்ஏக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அந்த தாக்குதலை செயல்படுத்தியது அதிக் அகமது தலைமையிலான ரவுடிகள்கள்தான் என்று அப்போது பகுஜன் சமாஜ் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதன்பிறகு பகுஜன் எம்எல்ஏ ராஜு பாலையும் அதிக்கின் அடியாட்கள் கொலை செய்தனர்.

Gangster turned politician who is atiq ahmed
ஆசாத் அகமது

இதன் காரணமாக மாயாவதி முதல்வராக இருந்தபோது அதிக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சமாஜ்வாதி ஆட்சிக் காலத்தில் அதிக் சுதந்திரமாக வலம் வந்தார். இந்த சூழலில் கடந்த 2017 ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். அப்போது முதல் அதிக் அகமது மற்றும் அவரது அடியாட்கள் 89 பேர் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அவரது ரூ.11,684 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன.

Gangster turned politician who is atiq ahmed
உமர் அகமது மற்றும் அலி அகமது

அதிக் அகமதுவுக்கு 5 மகன்கள். இவர்களில் மூத்த மகன் உமர் அகமது , 2-வது மகன் அலி அகமது ஆகியோர் ஆள்கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். 3-வது மகன் ஆசாத் அகமது என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். கடைசி 2 மகன்களும் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் உள்ளனர்.

Gangster turned politician who is atiq ahmed
ஷாயிஸ்தா பர்வீண்

அதிக் அகமதுவின் மனைவி ஷாயிஸ்தா பர்வீண் தலைமறைவாக உள்ளார். இப்படி ஒரு குடும்பமே கொலை ,கொள்ளை, ஆள்கடத்தல் என்று சிறையில் இருக்கும் சூழலில் தான் கடந்த ஏப்ரல் 15 அன்று சிறையில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கெஜ்ரிவாலிடம் விசாரணை: சிபிஐ சொல்வது என்ன?

சட்ட நடவடிக்கைக்கு தயார்: ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை சவால்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *