கணேசமூர்த்தியின் இழப்பு பெரும் துயரம்: ஸ்டாலின் வேதனை!
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஸ்டாலின்
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், ஒருங்கிணைந்த மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளைத் திறம்பட ஆற்றியவர்.
பின்னர், அண்ணன் வைகோவுடன் இணைந்து பயணப்பட்டார். ஆற்றல்மிகு தளகர்த்தராகச் செயல்பட்ட அவரது இழப்பு சொல்லொணாத் துயரத்தைத் தருகிறது. அவரது பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்களுக்கும், திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக தலைவர் அண்ணாமலை
ஈரோடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுகவின் பொருளாளரும், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான கணேசமூர்த்தி இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. கணேசமூர்த்தி குடும்பத்தினருக்கும், மதிமுக தலைவர் அண்ணன் வைகோ மற்றும் மதிமுக தொண்டர்களுக்கும், பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
மதிமுகவின் மூத்த நிர்வாகியும், ஈரோடு மக்களவை உறுப்பினருமான கணேசமூர்த்தி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மதிமுகவினருக்கும், கணேசமூர்த்தியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Gold Rate: புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை… சவரன் ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை!
மக்கள் நலனே கடமை என வாழ்ந்தவர் கணேசமூர்த்தி: வைகோ இரங்கல்!