ராஜன் குறை
அலாவுதீன் அற்புத விளக்கைத் தேய்த்தால் பூதம் தோன்றுவது போல, சனாதனம், சனாதனம் என்று பேசினால் மக்களிடையே பெரும் சலசலப்பை உருவாக்கலாம் என்று ஆளுநரும், பாஜக கட்சியினரும் நம்புகிறார்கள் போல தெரிகிறது. தமிழ்நாட்டில் அது கடினம். இங்கே என்ன புரிந்துகொள்கிறார்கள் என்றால் முற்போக்கான மாற்றங்களுக்கு முட்டுக்கட்டை போடுபவர்களே சனாதனிகள் என்று நினைக்கிறார்கள்.
விதவை மறுமணத்தை மறுத்தவர்கள் சனாதனிகள். அவர்களை சமூக வாழ்விலிருந்து விலக்கி வைத்து சித்திரவதை செய்தவர்கள் சனாதனிகள். குழந்தைத் திருமணத்தைத் தடை செய்யக்கூடாது என்று வாதிட்டவர்கள் சனாதனிகள். தேவதாசி முறையை ஒழிக்கக் கூடாது என்றவர்கள் சனாதனிகள். இன்றைக்கும் ஜாதி வேறுபாட்டை கட்டிக் காப்பவர்கள் சனாதனிகள்.
ஏனென்றால் சனாதனம் என்ற சொல்லின் பொருள் என்றைக்கும் அழியாதது, மாறாதது என்று கூறப்படுகிறது. அதனால் பிற்போக்கான சமூக ஏற்பாடுகள் எல்லாம் மாறக்கூடாது என்று நினைப்பதே சனாதனம் என்று கூறப்படுகிறது என்பதே பரவலான புரிதல். அதனால்தான் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்கள்.
இதைப் புரிந்துகொள்ளாததுபோல இந்து மதம் என்றால் சனாதனம், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது இந்து மதத்தையே ஒழிப்பது என்றெல்லாம் கூக்குரல் போடுகிறார்கள். பெரிய பிரச்சினையாக்க வட நாட்டில் முயல்கிறார்கள். சனாதனம் என்று கேட்டால் ஏதேதோ விளக்கங்களைச் சொல்கிறார்கள். இயற்கையை நேசிப்பது, இயற்கையுடன் இணைந்து வாழ்வது என்று கூட வெங்கையா நாயுடு கூறியுள்ளார். அப்படி ஒரு சனாதனம் இருந்தால் அதை ஏன் யாரும் ஒழிக்கப் போகிறார்கள்?
இது எப்படியென்றால் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் பல சிறுவர்களில் மஞ்சள் சட்டை போட்ட சிறுவன் நிறைய குறும்பு செய்கிறான். பார்த்தவர் ஒருவர் மஞ்சள் சட்டை போட்ட சிறுவன் குறும்பு செய்தான் என்கிறார். அடுத்தவர் வீட்டுக்குள் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த வேறொரு மஞ்சள் சட்டை அணிந்த சிறுவனைக் கூட்டி வந்து இவன் படித்துக்கொண்டுதான் இருந்தான் என்கிறார். முதலாமவர் இவனைச் சொல்லவில்லை. வேறு மஞ்சள் சட்டை போட்டவனைச் சொன்னேன் என்கிறார். இவர் அதெப்படி, நீங்கள் மஞ்சள் சட்டை என்றுதானே சொன்னீர்கள் என்று தகராறு செய்கிறார். இப்படி ஒரு குழப்பத்தைத்தான் பாஜக தலைவர்கள் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் சனாதனம் என்றால் வர்ணாசிரம தர்மம், பெண்ணடிமைத்தனம், பிறவியிலேயே ஏற்றத்தாழ்வு போன்றவற்றை ஆதரிப்பதுதான்.
சனாதனம் என்றால் என்னவென்று புரிந்துகொள்ள கேரளா, தமிழ்நாடு மற்றும் இந்திய வரலாற்றில் செல்வாக்கு செலுத்திய வைக்கம் போராட்ட களத்துக்குச் சொல்வோம். வைக்கத்திலிருந்து ஆலயத்தைச் சுற்றிய தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள் நுழையக்கூடாது என்பதை சட்டமாக வைத்திருந்தார்கள். இவ்வாறான விலக்கம் தவறானது என்று ஒரு சத்தியாகிரக இயக்கம் காந்தி, நாராயண குரு ஆகியோர் ஆதரவுடன் துவங்கப்பட்டது. கேரள காங்கிரஸ் தலைவர்கள் கைதானார்கள். அந்த நிலையில் போராட்டத்துக்குத் தலைமையேற்று நடத்த காங்கிரஸ் தலைவர் பெரியாரை அழைத்தார்கள். அவர் அங்கு சென்று தீவிரப் பங்கேற்பை வழங்கினார். கைது செய்யப்பட்டார்.
இருபத்தோரு மாதங்கள் நடந்த சத்தியாகிரகப் போராட்டத்தின் பன்னிரண்டாவது மாதம் காந்தி வைக்கம் சென்றார். பல தரப்பினரையும் சந்தித்துப் பேசி உடன்படிக்கை ஏற்படுத்த முயற்சி செய்தார். அந்த பேச்சுவார்த்தைகளில் ஒன்றுதான் 1925ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி இந்தன் துருத்தில் தேவன் நீலகண்டன் நம்பியாத்ரி இல்லத்தில் வைதீகர்களுடன் நடந்த உரையாடல். இந்த உரையாடல் பழ.அதியமான் அவர்கள் எழுதியுள்ள ‘வைக்கம் போராட்டம்’ நூலில் முழுமையாகத் தரப்பட்டுள்ளது.
ஜெனரல் டயர் போன்றவர்கள் நீங்கள்!
காந்தி மிகுந்த பணிவுடனும், நேயத்துடனும்தான் நீலகண்டன் நம்பியாத்ரி உள்ளிட்டவர்களுடன் பேசுகிறார். காந்தியும் கடவுள் நம்பிக்கை உள்ளவர், இந்து மதத்தில் பற்றுக் கொண்டவர், சாஸ்திரங்களை ஏற்றுக்கொள்பவர், ஏன் வர்ணாசிரமத்தையும் அவர் புரிந்துகொள்ளும் விதத்தில் ஏற்றுக்கொள்பவர், மறுபிறவி, பாவ புண்ணியம் அனைத்தையும் ஏற்றுக்கொள்பவர். ஆனால் அவர் ஒரு சில தீண்டப்படாத ஜாதிகளை குறிப்பிட்ட தெருக்களில் நடக்க அனுமதிக்க மறுப்பது தவறு என்று கூறுகிறார்.
ஏன் தவறு என்று விளக்கச் சொல்லி வைதீகர்கள் தரப்பு கேட்கிறது. காந்தி இந்து மதத்தில் இவ்விதம் வேறுபாடு காட்டச் சொல்லி எங்கும் சொல்லியிருக்கவில்லை என்கிறார். வைதீகர்கள் பின்னர் நாங்கள் ஏன் அவ்விதம் கூறுகிறோம் என்று கேட்கிறார்கள். அதற்கு ஜாலியன்வாலாபாக்கில் படுகொலைகளை நிகழ்த்திய ஜெனரல் டயர் என்ற பிரிட்டிஷ் அதிகாரியைப் போன்றவர்கள் நீங்கள். அந்த டயர் இந்தியர்களை தங்களுக்கு சமமாகவே மதிக்கவில்லை. வெறுத்தான். அதைப்போலத்தான் நீங்களும் தாழ்த்தப்பட்ட மக்களை வெறுக்கிறீர்கள் என்று கூறுகிறார்.
வைதீகர்கள் தரப்பில் ஒரு விளக்கம் சொல்கிறார்கள். ஈழவர்கள், புலையர்கள் என தாழ்த்தப்பட்டவர்கள் சென்ற பிறவியில் செய்த பாவத்தால், தீமையால் இந்த பிறவியில் தாழ்த்தப்பட்டவர்களாக கடவுளால் பிறக்க வைக்கப்பட்டுள்ளார்கள். அது அவர்களுக்கான தண்டனை. அதனால்தான் நாங்கள் அவர்கள் பிறப்பை சார்ந்த விலக்கத்தைச் செய்கிறோம். அப்போதுதான் அவர்கள் தண்டனை நிறைவேறும் என்று கூறுகிறார்கள்.
காந்தி என்ன செய்கிறார் என்றால், அவர்கள் சொல்லும் எதையும், மறுபிறவி உட்பட மறுப்பதில்லை. இந்தப் பிறவியில் சக மனிதர்களான அவர்களை நீங்கள் தெருவிற்குள் வரக்கூடாது என்று விலக்கி வைக்கலாமா என்று மட்டும் கேட்கிறார். பின்னர் நீங்கள் அவர்களைப் பற்றிக் கூறுவது போல, அவர்களும் உங்களைப் பற்றிக் கூறினால் என்ன செய்வது என்று கேட்கிறார்.
வைதீகர்கள் இல்லையில்லை; நாங்கள் சொல்வதெல்லாம் சங்கராச்சாரியார் சொல்வதுதான் என்று கூறுகிறார்கள். காந்தி அதற்கான ஆதாரத்தைக் காட்டுமாறு கேட்கிறார். நீங்கள் ஊரிலிருந்து கிளம்புவதற்கு முன் தருகிறோம் என்று சொல்கிறார்கள். காந்தி அது உண்மையில் சங்கரர் எழுதியதுதானா என்று பார்க்கவும், அதன் பொருளை விளக்கவும் வட நாட்டில் உள்ள சில பண்டிதர்களைக் கேட்டுப் பார்க்கிறேன் என்று கூறுகிறார். வைதீகர்கள் நாங்கள் சங்கராச்சாரியார் எழுதியது என்று எங்களுக்கு கூறப்பட்ட சில சுலோகங்களைத்தான் நாங்கள் தருவோம். அது அவர் எழுதியதா என்ற ஆராய்ச்சிக் கேள்வியெல்லாம் எங்களிடம் கேட்கக் கூடாது என்று கூறி பின்வாங்குகிறார்கள்.
அடுத்து, வைக்கத்தில் பெரும்பான்மையோர் எங்களைத்தான் ஆதரிக்கிறார்கள் என்று வைதீகர்கள் கூறுகிறார்கள். அந்தத் தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்தால் தீட்டுப்பட்டுவிடும் என்பதை பெரும்பான்மையினர் ஏற்பதாகக் கூறுகிறார்கள். காந்தி வைக்கத்தில் வசிப்பவர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தலாமா என்று கேட்கிறார். ஒன்று சங்கராச்சாரியார் எழுதிய ஆதாரத்தைக் கொடுங்கள் அல்லது பொது வாக்கெடுப்பு நடத்த ஒப்புதல் கொடுங்கள் என்று கூறுகிறார். மூன்றாவதாக மற்றொரு வழியையும் கூறுகிறார். திவான் தலைமையில் ஓர் ஆய்வுக்குழு அமைப்பது. சத்தியாகிரகிகள் சார்பில் பண்டித மதன் மோஹன் மாளவியா. வைதீகர்கள் தரப்பில் ஒருவரை அவர்கள் கூறலாம். அந்த மூவர் குழு தீர விசாரித்து என்ன தீர்ப்பைக் கூறுகிறதோ அதை ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறுகிறார்.
இது எதற்கும் வைதீகர்கள் ஒப்புதல் வழங்குவதில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிகிறது, மேலும் ஒன்பது மாத கால போராட்டத்திற்குப் பிறகு தெருக்கள் அனைவருக்கும் திறந்துவிடப்படுகின்றன.
சனாதனி யார்? காந்தியா அல்லது வைதீகர்களா?
இந்த விவாதத்தைக் கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும். காந்தியும், வைதீகர்களும் பல அம்சங்களில் ஒன்றுபடுகிறார்கள், காந்தி அவர்கள் நம்பிக்கைகள் எதையுமே மறுப்பதில்லை. ஆனால், மனிதனை மனிதன் விலக்கிவைக்கும் தன்மையை மறுக்கிறார். தீண்டாமையை எதிர்க்கிறார். இதற்கெல்லாம் இந்து மதத்தில் இடமில்லை என்கிறார். அதைவிட முக்கியம், ஒரு பழக்கம் தவறென்று தெரிந்தால் அதனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார்.
சாத்திரங்கள் இப்படிக் கூறுவதாக சான்று காட்டினால்கூட அதன் உண்மைத்தன்மையை அறிய வேண்டும் என்கிறார். பாரதியார் கூறினாரல்லவா?
சூத்திரனுக்கொரு நீதி – தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோருநீதி
சாத்திரம் சொல்லிடு மாயின் – அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.
அடுத்து காந்தி பொது வாக்கெடுப்பில் மக்கள் மனதை அறிந்துகொள்ளலாம் – அதன்படி முடிவெடுக்கலாம் என்றும் கூறுகிறார். அதாவது எது சாத்திரம் என்பதையே மக்கள்தானே ஏற்படுத்துகிறார்கள்?
மூன்றாவதாக ஒரு குழு அமைத்து ஆராய்ந்து முடிவு செய்யலாம் என்கிறார். அதில் சத்தியாகிரகிகளின் சார்பாக இந்து மகா சபா மதன் மோஹன் மாளவியா உறுப்பினராக இருப்பார் என்று கூறுகிறார். அவருக்கு ஒரு மன உறுதி உள்ளது. யார் அந்த குழுவில் இருந்தாலும் அவர்கள் உண்மையை, ஜாதி விலக்கத்தை ஒழிப்பதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறார்.
ஆனால் வைதீகர்கள் இது எதையுமே ஏற்கத் தயாராக இல்லை. தங்கள் கையில் சில சாத்திரங்கள் உள்ளன. அவை கூறுவதுதான் சட்டம் எனப் பிடிவாதம் பிடிக்கிறார்கள். அந்த பிடிவாதம்தான், மாற்றத்தை ஏற்க மறுக்கும் மனோபாவம்தான் சனாதனம். தமிழ்நாட்டில் சனாதனம் என்ற வார்த்தையின் பொருள் அதுதான்.
காந்தி ஒரு மரபுவாதி. ஆங்கிலத்தில் இதை கன்சர்வேடிவ் (Conservative) என்று அழைப்பார்கள். சமூக நடைமுறைகளை ஏற்றுக்கொண்டு பாதுகாப்பது முதல் இயற்கையை, சூழலை பாதுகாப்பது வரை எல்லாமே கன்சர்வேஷன்தான். அரசியல் ரீதியாக மரபுவாதம், தொடர்ச்சியை வலியுறுத்தினாலும், மாற்றங்களே இல்லாத தொடர்ச்சியைப் பேசுவதில்லை.
சனாதனம்தான் மாறாதது, அழியாதது என்று கூறி மாற்றங்களை முற்றாக மறுதலிப்பது. இந்தன் துருத்தில் நீலகண்ட நம்பூதிரிதான் சனாதனி. அவரைப்போல கால மாற்றத்தினை அனுசரிக்க மறுப்பவர்களைத்தான் எதிர்க்க வேண்டியது அவசியமாகிறது. காந்தி போல, நாராயண குரு போல வழிபாடுகளை செய்பவர்கள், இறை நம்பிக்கை உள்ளவர்கள் ஆகியவர்களை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. சமூக மாற்றத்தினை ஏற்பவர்கள், அதற்காக குரல் கொடுப்பவர்கள் துறவிகளாகவே இருந்தாலும் அவர்கள் சனாதனிகள் அல்ல.
இந்த வேறுபாடுகளைக் குழப்பி, பக்தி உணர்வை மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு முற்போக்காளர்கள் சனாதன எதிரிகள், அதனால் இந்து எதிரிகள் என்று சிலரை வர்ணித்து ஓட்டுகளை அறுவடை செய்ய பாஜக முயல்கிறது. காந்தி சனாதனியல்ல, மாற்றங்களை மறுப்பவர் அல்ல, ஆனால் பக்தியுடையவர், தன்னை இந்து என்று கூறிக்கொண்டவர் என்பதை மனதில் கொண்டால் நாம் பாஜக-வின் திரிபு வேலைகளுக்கு மயங்கமாட்டோம். நாம் எதிர்க்க வேண்டியது இந்தன் துருத்தில் நம்பூதிரி போன்ற சனாதனிகளைத்தான்!
காந்தி ஜெயந்தி தினத்தில் நாம் சரியான தெளிவைப் பெறுவோம்! சனாதன எதிர்ப்புக்காக தன் உயிரையும் கொடுத்தவர் அல்லவா அவர்!
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாடு மேய்த்தவன் மகன் ஐஏஎஸ் ஆவதை ஒழிக்கவே விஸ்வகர்மா திட்டம்: கி.வீரமணி