விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கள அளவில் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன என்று கூறுகிறார்கள் அங்கே தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள்.
2019 தேர்தலின்போது வேட்பாளரான திருமாவளவன், வன்னியர்கள் வசிக்கும் பல பகுதிகளில் வாக்கு சேகரிக்கக் கூட உள்ளே நுழைய முடியவில்லை. ஆனால், இப்போது திமுகவின் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிவசங்கர் ஆகியோரும் வன்னியர் சமூகத்தில் முக்கிய பணியாற்றும் படையாச்சியார் பேரவை காந்தி ஆகியோரும் மேற்கொள்ளும் பணிகளால் சென்ற முறை நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள் இப்போது நடைபெறாதது மட்டுமல்ல… வேறு பல திருப்பங்களும் திருமாவுக்கு ஏற்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சிதம்பரம் களத்தில் திருமாவளவனுக்காக பணியாற்றி வரும் படையாச்சியார் பேரவையின் நிறுவனத் தலைவரும், புதிய உழைப்பாளர் கட்சியின் தலைவருமான எம்.பி. காந்தியிடம் பேசினோம்.
“வேப்பூர் ஒன்றியம் கே.புதூர் பகுதியில் திருமாவளவன் வாக்கு சேகரிக்கச் செல்கிறார். இரட்டை இலை சின்னம் வீடுகள் தோறும் வரையப்பட்டிருக்கிறது. அவற்றைப் பார்த்துவிட்டு திருமாவளவன் சற்று தயக்கத்தோடுதான் கடந்து செல்கிறார். ஆனால், அந்த வீடுகளில் இருந்து வந்த மக்கள், ‘நில்லுங்க…எங்க போறீங்க?’ என்றபடியே திருமாவளவனோடு நின்று செஃல்பி எடுத்துக் கொள்கிறார்கள்.
இன்னும் பலர் திருமாவளவனின் கையில் கவரை கொடுத்து, ‘அண்ணே தேர்தல் செலவுக்கு வச்சிக்கங்கண்ணே…’ என்று அன்பாக கொடுத்து உதவுகிறார்கள். தமிழகம் முழுதும் வேட்பாளர்கள்தான் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கே சிதம்பரத்தில் வாக்காளர்களே வேட்பாளர் திருமாவளவனுக்கு தேர்தல் நிதி கொடுக்கிறார்கள். இது வித்தியாசமான காட்சியாக இருந்தது.
வன்னியர் சமுதாயத்தினர் வசிக்கும் பகுதிகளில் திருமாவளவன் செல்லும்போது பலத்த வரவேற்பு கிடைக்கிறது. ‘வன்னியர் சமுதாயத்துக்காக இதுவரை நாடாளுமன்றத்தில் அன்புமணியோ பாமகவின் மற்ற எம்பிக்களோ குரல் கொடுத்ததில்லை. ஆனால், திருமாவளவன் தான் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசினார். இதுமட்டுமல்ல… வன்னியர் சமுதாயத்தில் இருந்து திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜியை வெற்றி பெற வைத்து சட்டமன்றத்துக்கு சிறுத்தைகள் சார்பில் அனுப்பியதும் திருமா தான்’ என்பதெல்லாம் இந்த முறை வன்னிய மக்கள் தரப்பிலும் திருமாவளவனுக்கு சாதகமான சூழலை உருவாக்கியிருக்கிறது.
அதேபோல தொகுதியின் முக்கியமான வன்னியர் பிரமுகர்களை படையாச்சியார் பேரவை சார்பில் சந்தித்து, ‘பாமகவால் இனி வன்னிய சமுதாயத்துக்கு எந்த பயனும் இல்லை. சிதம்பரம் அமைதியான வழியில் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமானால் இந்திய அளவில் செல்வாக்கு பெற்ற திருமாவளவனை தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி வருகிறோம்.
களத்தில் இதுவரை நாங்கள் பார்த்த வகையில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் திருமாவளவன். அதுமட்டுமல்ல தொகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரோடும் அதே போலத்தான்.
தன்னோடு பிரச்சாரத்துக்கு வந்துகொண்டிருந்த ஒரு சிறுத்தையைப் பார்த்த திருமாவளவன், ‘தம்பி இங்க வா… நீ பக்கத்து ஒன்றியமாச்சே… இந்த ஒன்றியத்துல உனக்கென்ன வேலை… உன்னோட ஒன்றியத்துக்கு போ’ என்று உரிமையாக எச்சரித்து அறிவுறுத்தி அனுப்புகிறார்.
அதுமட்டுமல்ல… தேர்தல் பரப்புரையில், ‘இன்று முதல் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இருக்கும் நான் உள்ளிட்ட அத்தனை சிறுத்தைகளும் அவரவர் பதவியில் இல்லை. உங்களுடைய பணி உங்கள் பூத்தில் தான் இருக்க வேண்டும். மாவட்டச் செயலாளராக இருந்தால் நீங்கள் உங்கள் பூத்தில்தான் இருக்க வேண்டும். ஒன்றிய செயலாளராக இருந்தாலும் உறுப்பினராக இருந்தாலும் உங்கள் பூத்தில்தான் இருக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருக்கிறார். இந்த வித்தியாசமான வியூகத்தால் சிறுத்தைகள் அவரவர் பூத்தில் வாக்கு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைகளில் இறங்கிவிட்டனர்.
தொழில்நுட்ப ரீதியாகவும் விடுதலை சிறுத்தைகள் பிரச்சாரக் களத்தில் முன்னேறியிருக்கிறார்கள். க்யூ ஆர் கோடு பொறிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும், சுவரொட்டிகளையும் ஒவ்வொரு வீட்டிலும் ஒட்டியிருக்கிறார்கள். அந்த க்யூ ஆர் கோர்டை செல்போனில் ஸ்கேன் செய்தால் திருமாவளவனின் பிரச்சார உரையை பார்க்கலாம்.
சிதம்பரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘இங்கே சிறுத்தையை வெற்றி பெற வைக்க இரு சிங்கங்களை களமிறக்கியிருக்கிறேன்’ என்று அமைச்சர் எம்.ஆர்.கே.வையும், சிவசங்கரையும் குறிப்பிட்டுப் பேசினார். அது உண்மைதான். அவர்களோடு படையாச்சியார் பேரவை, புதிய உழைப்பாளர் கட்சியான நாங்களும் சிங்கக் குட்டிகளாக சிறுத்தை தலைவருக்கு பணியாற்றி வருகிறோம்.
களத்தில் கண்டதை வைத்து அடித்துச் சொல்கிறேன். கடந்த முறை போல அல்லாமல் இந்த முறை திருமாவளவனின் வாக்கு வித்தியாசம் மிகவும் அதிகமாக இருக்கும். சிதம்பரத்தின் சமூக, அரசியல் போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்ந்து சிதம்பரத்தின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, உள்கட்டமைப்பு முன்னேற்றம் காணவேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்” என்று கூறினார் எம்பி.காந்தி.
-ஆரா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெயிலின் தாக்கம்: கேரள நீதிமன்றத்தில் வெள்ளை நிற ஆடை அணிய அனுமதி!
இரவு 10 மணிக்கு மேல் அண்ணாமலை பிரச்சாரம்… திமுக – பாஜகவினர் மோதல்!