Gandhi Memorial Day

காந்தி நினைவு நாள்: பாஜகவுக்கு எதிரான அரசியல் ஆக்கிய திமுக!

அரசியல்

Gandhi Memorial Day

ஒவ்வொரு வருடமும் காந்தி நினைவு நாளில் சம்பிரதாயமாக நடைபெற்று முடிந்துவிடும், ‘மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி’யை இந்த முறை ஓர் இயக்கமாகவே நடத்தியிருக்கிறது திமுக.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 123 ஆவது பிறந்தநாள் விழா ஜனவரி 23 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் பங்கை குறைக்கும் விதமாக பேசியதாக கண்டனங்கள் எழுந்தன. அனைத்து அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில் ஆளுநர், தனது கருத்து ஊடகங்களால் திரிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில்தான்… ஜனவரி 30 ஆம் தேதி காந்தியடிகளின் நினைவு நாளை ஒட்டி வழக்கமாய் அரசு அலுவலகங்களிலும், கட்சியின் தலைமை அலுவலங்களிலும் நடக்கும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பை விரிவாக தமிழகம் முழுதும் நடத்த திமுகவினருக்கு உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின்,

ஜனவரி 28 ஆம் தேதி அவர் வெளியிட்ட அறிவிப்பில், “ ஜனவரி 30 – அண்ணல் காந்தியடிகள் அவர்கள் நினைவு நாள்…

“என் மதத்தின் மீது சூளுரைத்தே சொல்கிறேன். என் மதத்திற்காக நான் உயிர் துறக்கவும் தயார். ஆனால் அது என்னுடைய சொந்த விவகாரம். அதில் அரசுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை.” என்று நிமிர்ந்து சொன்னவர் மகாத்மா காந்தியடிகள். தன்னை இந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டவர். அதே நேரத்தில் தன்னைப் போலவே அனைத்து மதத்தவர் உணர்வுக்கும் மரியாதை கொடுத்தவர் அவர். அனைத்து மதங்களும் ஒரே நோக்கம் கொண்டவை என்றவர் அவர்.

ஒற்றை மதவாத தேசியவாதத்தை அவர் ஏற்கவில்லை. அதனாலேயே மதவெறிக்கு அவர் பலியானார். 75 ஆண்டுகள் ஆனபிறகும் அண்ணல் காந்தியார் மீதான கோபம், வகுப்புவாதிகளுக்கு குறையவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் காந்தியாரை வலதுசாரி சக்திகள் இழிவுபடுத்துவது தொடர்கதை!

‘காந்தியால் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை’ என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பதும் இதே வன்மம் கலந்த நோக்கத்துடன்தான். தேசத் தந்தை என்று போற்றப்படும் காந்தியடிகளை, பொய்களாலும் அவதூறுகளாலும் கொச்சைப்படுத்தும் காலமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அவரது கொள்கைகள் மட்டுமல்ல, அவரே இழிவுபடுத்தப்படுகிறார். இது நிகழ்காலம் எவ்வளவு வகுப்புவாதச் சகதியில் சிக்கி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். இதனை உடனே தடுத்தாக வேண்டும்.

மதநல்லிணக்கத்தின் அடையாளமான அண்ணல் காந்தியடிகள் அவர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜனவரி 30-ஆம் நாளை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகள் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இந்தக் கடமை அதிகம் இருக்கிறது. எனவே, ஜனவரி 30-ஆம் நாளன்று மதநல்லிணக்க உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை ஜனவரி 30 அன்று மாவட்டக் கழகங்கள் நடத்திட வேண்டும். இதில் அனைத்து மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்திய நாட்டின் பண்பாட்டையும், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற தமிழ்நாட்டின் மாண்பையும் இந்திய ஒன்றியத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக திட்டமிட்டு நடத்திட வேண்டும்” என்று உத்தரவிட்ட ஸ்டாலின்,

இந்நிகழ்வில் அந்தந்த மாவட்டப் பொறுப்பு அமைச்சர்கள் கலந்து கொள்ள வேண்டும். கழகச் சிறுபான்மையினர் அணியினர் மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும். மனிதநேயம், மத நல்லிணக்கம், பொது அமைதி ஆகியற்றுக்காக நடத்தப்படும் நிகழ்வு என்பதால் அனைத்து பொதுமக்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அதன்படி இன்று (ஜனவரி 30) திமுக தலைமையகம் அறிவாலயத்தில் தொடங்கி ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் திமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

அறிவாலயத்தில் திமுக முதன்மைச் செயலாளரான அமைச்சர் நேரு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்.
இதேபோல தமிழகம் முழுதும் திமுகவினர் இன்று காலை அனைத்து மதத்தினரையும் திரட்டி மத நல்லிணக்க உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

நம்மிடம் பேசிய திமுக நிர்வாகிகள், “ஆளுநர் காந்தி பற்றி அவ்வாறு பேசியிருக்காவிட்டால், இப்படி தமிழகம் முழுதும் மத நல்லிணக்க உறுதிமொழியை ஓர் இயக்கமாகவே மேற்கொண்டிருக்க மாட்டோம். ஆளுநர் அவ்வாறு பேசியதன் மூலம் காந்தி படுகொலை பற்றி பேசவும், காந்தியின் நினைவு நாளை முன்பைவிட விரிவாக அனுசரிக்கவும் வழி வகுத்துவிட்டார் ஆளுநர். அவருக்கு நன்றி” என்கிறார்கள்.

இதேநாளில் ஆளுநரும் காந்திக்கு மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-வேந்தன்

சென்னை பர்மிட் ஆட்டோக்கள் எல்லை நீட்டிப்பு!

கார்த்தி27: டாப் வில்லனை ‘லாக்’ செய்த படக்குழு

Gandhi Memorial Day

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *