கடலூர் பற்றி அத்துப்படி… நிவாரணக் களத்தில் கலக்கிய ககன் தீப் சிங் பேடி

Published On:

| By Aara

நவம்பர் 30-ஆம் தேதி  தமிழகத்தை ஃபெஞ்சல் புயல் தாக்கியதை அடுத்து கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம்,  கடலூர் மாவட்டங்களும் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

முதல்வர் ஸ்டாலின் உடனடியாக அமைச்சர்களையும், துணை முதல்வர் உதயநிதியையும்  மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அனுப்பினார்.  

அமைச்சர்களோடு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு மூத்த  ஐ.ஏ.எஸ். அதிகாரியையும் நியமித்து, நிவாரணப் பணிகளையும் மீட்புப் பணிகளையும் துரிதமாக மேற்கொள்ளச் செய்தார்.

இந்த வகையில்தான்…  கடலூர் மாவட்டத்தைப் பற்றி நன்கு அறிந்தவரும், ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளருமான ககன் தீப் சிங் பேடியை கடலூர் மாவட்டத்துக்கு அனுப்பினார்.

கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே திட்ட இயக்குனர், கலெக்டர் போன்ற பொறுப்புகளில் பணியாற்றி மாவட்ட மக்களிடம்  நல்ல அறிமுகம் பெற்றவர் ககன் தீப் சிங் பேடி. அதுமட்டுமல்ல… சுனாமி, புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது அரசுத் துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து நிவாரணப் பணிகளில் வேகம் காட்டியவர்.  இந்த அடிப்படையில்தான் ககன் தீப் சிங் பேடியை கடலூருக்கு அனுப்பினார் முதல்வர் ஸ்டாலின்.

டிசம்பர் 1 ஆம் தேதி காலை சென்னையில் இருந்து கடலூருக்குக் காரில் புறப்பட்டார் பேடி.  அப்போதே கடலூர் கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமாருக்கு போன் போட்ட ககன் தீப் சிங் பேடி,

‘மாவட்டத்துல  தாசில்தார்கள், டெபுடி தாசில்தார்கள், பிடிஓக்கள், இன்ஜினியர்கள்,  மின்சார வாரிய ஊழியர்கள் மொத்தம் எவ்வளவு பேர் என்றும்,  அனைத்து  அலுவலர்களின் பட்டியல் வேண்டுமென்றும் கேட்டார்.  பேடி கடலூர் செல்வதற்குள்ளாக அவர் கேட்ட பட்டியலை அனுப்பிவிட்டார் கலெக்டர்.

அன்று பகல் கடலூரைச் சென்றடைந்த ககன் தீப் சிங் பேடி  கலெக்டருடன் ஆலோசனை நடத்தினார். மழைவெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் என்னென்ன, குறிப்பாக எத்தனை கிராமங்கள் என்று கேட்க…. 105 கிராமங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று பட்டியல் கொடுத்தார் கலெக்டர்.

சில மணி நேரங்களில்  இரு கிராமத்துக்கு பத்து அதிகாரிகள் கொண்ட ஒரு குழு என 105 கிராமங்களுக்கும் 52 குழுக்களை  அமைத்தார் ககன் தீப் சிங்.    

டெபுடி தாசில்தார் அந்தஸ்திலான அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட அந்த குழுவினருக்கு ககன் தீப் சிங்  முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

’உடனடியாக உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு செல்லுங்கள். பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து முதலில் மக்களை வெளியேற்றி அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வையுங்கள். உடனடி தேவையான உணவு, உடை, சுகாதார வசதிகளை செய்துகொடுங்கள். குறிப்பாக அங்கே போகும்போதே உணவு, குடி தண்ணீருடன் செல்லுங்கள்.

எக்காரணத்தை முன்னிட்டும் மக்களிடம் கோபப்படாதீர்கள். நமக்கு இது சில நாள் வேலைதான்… ஆனால் அவர்கள் வாழ்வாதாரமே போன விரக்தியில் இருப்பார்கள். அதனால் கோபத்தில்தான் இருப்பார்கள்.

ஆனால், மக்களிடம்  நாம் பதிலுக்கு கோபப்படக் கூடாது. அவர்களுக்கு என்ன தேவையோ உடனே அவற்றை செய்துகொடுங்கள்… பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை கொடுங்கள்’  என்று அறிவுறுத்தி சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுக்களை களத்தில் இறக்கினார் ககன் தீப் சிங். நிலைமை சிக்கலானால் பெரிய உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக அழைக்குமாறும் கூறினார்.

உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட கிராமங்களில் பணியாற்றிவிட்டு மாலை 6.30 மணிக்கு தினமும் கலெக்டர் ஆபீசுக்கு குழுவில் இருந்து தலைமை அதிகாரி வந்து ரிப்போர்ட் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ககன் தீப் சிங் அமைத்த அதிகாரிகள் குழுவினர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களுக்கு தேவையான  பெட் ஷீட், சாப்பாடு வசதிகளை செய்துகொடுத்தனர்.  மீனவர் அமைப்புகளோடு பேசி வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு படகுகளை அனுப்பி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட  ககன் தீப் சிங் பேடி உடனடியாக கலெக்டருடன் சேர்ந்து   தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்கு விசிட் அடித்தார்.

கண்டக்காடு பகுதியில் சாலை அரிக்கப்பட்டிருந்தது. உப்பளவாடி  பகுதியில் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துவிட்டது. ஊரக வளர்ச்சித் துறையால் கட்டப்பட்ட வீடுகள்தான் அவை. இப்போது வெள்ளத்தால் பழுதடைந்திருந்தன. அந்த வீடுகளுக்கு பதில் புதிய வீடுகளை கட்டித் தர ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் என்ற வகையில் உடனடியாக முடிவெடுத்து, பாதிக்கப்பட்டவர்களிடமும் தெரிவித்தார்.

கடலூர் கலெக்டர் ஆபீஸ் எதிரே தென்பெண்ணையாற்றின் வடக்கு கரையில்  மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட உடைப்புகளால்,  கஸ்டம்ஸ் ரோடு அரிக்கப்பட்டு சாலையே பிளந்துவிட்டது. பண்ருட்டி செம்மேடு பகுதியில் மலட்டாறு பாலம் பழுதுபட்டிருந்தது.

கடலூர் ஒன்றியம்  குட்டியாங்குப்பம் கிராமம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை ஒட்டி அமைந்திருக்கிறது. அந்த பகுதியில் அமைந்திருக்கும் ஏரியில் இருந்து வரும் வாய்க்கால் கரை உடைத்து வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்தத் தகவல் ககன் தீப் சிங்கிடம் சொல்லப்பட்டது. கூடவே, ‘அந்த ஏரி வாய்காலின்  கரையை யார் கட்டுவது என்று தமிழக அரசு அதிகாரிகளுக்கும், புதுச்சேரி அரசு அதிகாரிகளுக்கும் இடையே பிரச்சினை இருக்கிறது.  இதனாலேயே மக்கள் பாதிக்கப்படுறாங்க…’ என்று ககன் தீப் சிங்கிடம் கூறினர்.

உடனடியாக சம்பந்தப்பட்ட தமிழக அதிகாரிகளைத் தொடர்புகொண்ட ககன் தீப் சிங், ‘இப்போதைக்கு போட்டி போட வேணாம். உடனடியா நாமே கரையை பலப்படுத்துவோம்’ என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

மேலும் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர்,  அதிகாரிகளைத் தொடர்புகொண்ட ககன் தீப் சிங் பேடி, ‘தென் பெண்ணை ஆற்றின் கரை புதுச்சேரி எல்லைக்கு உட்பட்ட  பகுதிகளிலும் அமைந்திருக்கிறது.  உங்கள் எல்லையில் இருக்கும் கரையை பலப்படுத்துங்கள்’ என்று கூறியிருக்கிறார்.

மேலும், புதுச்சேரி அரசு அதிகாரிகளையும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளார் ககன் தீப் சிங் பேடி. இவரது இந்த அணுகுமுறை கடலூர் மாவட்டத்தில் இருக்கும் இளம் அதிகாரிகள் பலரையும்  வியக்க வைத்திருக்கிறது.

தான் பயணித்த ஒவ்வொரு பகுதியிலும் பாதிப்பு நிலவரத்தை வீடியோ எடுத்துக் கொண்ட ககன் தீப் சிங்பேடி,  பாதிப்புகள் பற்றிய அறிக்கையை முதல்வருக்கு அனுப்பும்போது இந்த வீடியோ ஆதாரங்களையும் இணைத்திருக்கிறார்.  

கடலூர் மாவட்டத்தில் 20 இடங்களில் ஆற்றங்கரை உடைப்பு, பத்து பாலங்கள் பழுது, கோழிகள், ஆடு-மாடுகள் இறப்பு மொத்தம் 25 ஆயிரம் மற்றும் வீடுகள் பாதிப்பு என மொத்த பாதிப்புகளையும்  அதிகாரிகள் குழு மூலமாக துல்லியமாக அறிந்து ரிப்போர்ட் ரெடி செய்தார் ககன் தீப் சிங் பேடி.

டிசம்பர் 6 ஆம் தேதி மாலை வெள்ள சேதத்தைப் பார்வையிடும் மத்திய குழு சென்னை வந்த நிலையில்… மத்திய குழுவினரை சந்திக்கும் முன்பே மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட அதிகாரிகளை சென்னைக்கு வரவழைத்து சந்தித்திருக்கிறார் முதல்வர்.

அப்போது கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சேதம் பற்றிய அறிக்கையை வீடியோ ஆதாரங்களோடு இணைத்துக் கொடுத்துள்ளார் ககன் தீப் சிங் பேடி.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்களில் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் கடலூர் மாவட்டத்தில் சிற்சில இடங்களில் மக்கள் தெருவுக்கு வந்தாலும், பரவலாக போராட்டங்கள் இல்லை. இதற்குக் காரணம் கடலூரின் தட்பவெப்பத்தை அத்துப்படியாக அறிந்த ககன் தீப் சிங் பேடியின் கள ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள்தான் என முதல்வர் வரை தகவல் போயிருக்கிறது என்கிறார்கள் கடலூர் காவல்துறை வட்டாரத்தில்.

-வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பேமிலி படம் : விமர்சனம்!

அரசியலில் பதில் சொல்லக்கூடிய அளவுக்கு விஜய் வளரவில்லை : ரகுபதி

”நானும் இறுமாப்போடு சொல்கிறேன்” : விஜய்க்கு கனிமொழி பதில்!

நான் தடுமாறுகிறேனா? திருமாவளவன் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel