டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலகின் வலிமை மிக்க ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை (டிசம்பர் 1, 2022- நவம்பர் 30, 2023), இந்த ஆண்டு இந்தியா ஏற்று நடத்துகிறது.
இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் 32 பிரிவுகளில் 200 ஆலோசனைக் கூட்டங்களும் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் ஜி 20 மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நாளை மாலை 5 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் அனைத்து .மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சி தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாளை காலை டெல்லி செல்கிறார். அதுபோன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடந்த நவம்பர் 15 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பி உள்ளார்.
இந்த கடிதம் இன்று (டிசம்பர் 4) இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரியா