ஜி 20 மாநாட்டுக்காக அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அழைப்பு விடுத்ததை ஒட்டி டெல்லி சென்று டிசம்பர் 5 ஆம் தேதி அந்த கூட்டத்திலும் கலந்துகொண்டார் எடப்பாடி பழனிசாமி.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், உடனடியாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் ஆகிய நான் இப்போது இருக்கிறேன். 2021 டிசம்பர் மாதம் நடந்த கட்சி தேர்தலில் அதிமுக கட்சியின் தொண்டர்களால் ஒருமனதாக போட்டியின்றி இந்த பதவிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.
நான் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த தகவல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி கட்சியால் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாங்கள் ஜி-20 ஆலோசனைக் கூட்டத்திற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு இடைக்கால பொதுச் செயலாளர் என்று அடைமொழியோடு கடிதம் அனுப்பி உள்ளீர்கள்.
எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் தலைவர் அல்ல என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
கட்சியில் சில நிர்வாகிகளின் செயல்பாடுகள் மூலமாக அதிமுகவின் தலைமையை அபகரித்து அதில் தன்னை இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தானாகவே அறிவித்துக் கொண்டிருக்கிறார்.
இது அதிமுகவின் அடிப்படை சட்ட விதிகளுக்கு எதிரானது. மேலும் பழனிச்சாமியின் இந்த கட்சி பதவி என்பது இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத ஒன்று.
இந்த நிலையில் மத்திய அரசின் மூலம் அனுப்பப்பட்ட கடிதத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு இருப்பது தவறானது. இனியும் இது போன்ற தவறுகள் நடக்காது என்று நம்புகிறேன்.
அதிமுகவின் தலைமை பற்றிய விவகாரம் தற்போது வெவ்வேறு வகையான சட்ட தளங்களில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் ஜி 20 ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுகவின் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டதும் அவர் அதில் கலந்து கொண்டதும் துரதிர்ஷ்டவசமானது.
அவர் அதிமுகவின் ஒரு பிரிவுக்கான பிரநிதி மட்டுமே” என்று குறிப்பிட்டிருக்கிறார் பன்னீர்செல்வம்.
இந்த நிலையில் இன்று (டிசம்பர் 6) உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், “கட்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றத்தை வழக்கை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் பரிசீலிக்க மறுக்கிறது. இதனால் கட்சி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இவ்வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்ற வாதத்தை முன் வைத்திருக்கிறார்கள்.
அதாவது கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தான் தேந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க மறுக்கிறது என்று உச்சநீதிமன்றத்திலேயே எடப்பாடி தெளிவுபடுத்தியுள்ளார்.
அதாவது டிசம்பர் 5 ஆம் தேதிய நிலையின்படி தான் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்பதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவே இல்லை என்றும் எடப்பாடி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
–வேந்தன்
முதல்வரை சந்தித்த பிரக்ஞானந்தா