விஜய் பேச்சு எதிரொலி… பரபரக்க அறிக்கை வெளியிட்ட ஜி ஸ்கொயர்

Published On:

| By christopher

பரந்தூர் விமான நிலையத்தையும் தாண்டி இந்த ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் இருக்கிறது என தவெக தலைவர் விஜய் இன்று (ஜனவரி 20) பேசியிருந்த நிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி, சென்னையின் 2ஆவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு வருகின்றன.

அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் சுற்று வட்டார பகுதி மக்கள் 900 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலை வேனில் புறப்பட்ட நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய், பரந்தூர் கிராம மக்களை இன்று (ஜனவரி 20) நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

ஏதோ லாபம் இருக்கிறது!

அப்போது பேசிய அவர், “நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. விமான நிலையம் வரக்கூடாது என்று நான் சொல்லவில்லை. பரந்தூரில் அமைக்கக்கூடாது என்றுதான் நான் வலியுறுத்துகிறேன்.

நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எட்டுவழிச் சாலையை எதிர்த்தீர்கள்… காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள்… அந்த நிலைப்பாட்டைதானே இங்கும் எடுத்திருக்க வேண்டும். அது எப்படி எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளும் கட்சியாக இருக்கும் போது எதிர்ப்பா?

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதை நான் வரவேற்கிறேன். அதைத்தானே பரந்தூர் பிரச்சினையிலும் செய்திருக்க வேண்டும். அரிட்டாப்பட்டி மக்கள் எப்படி நமது மக்களோ… பரந்தூர் மக்களும் நமது மக்கள்தான் என்று அரசு நினைக்க வேண்டும்.

இந்த விமான நிலையத்தையும் தாண்டி இந்த ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் இருக்கிறது. அதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்” என விஜய் பேசியிருந்தார்.

பரந்தூரில் எங்களுக்கு ஒன்னும் இல்ல!

இந்த நிலையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் மேற்கொண்டுவரும் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம், பரந்தூர் பகுதியில் எங்களுக்கு நில உடைமைகள் இல்லை என தற்போது ’உண்மை விளக்க அறிக்கை’ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ”எங்கள் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம். தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக பரந்தூர் கிராமத்தில் எங்கள் நிறுவனம் பெரிய நிலப் பகுதிகளை வைத்திருப்பதாக சில நபர்கள் தவறான தகவல்களால் பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவின் பரந்தூர் புதிய விமான நிலைய விரிவாக்கப் பகுதியில் எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை. எங்கள் நிறுவனத்திற்கு எந்தக் கட்சியுடனும் எந்த அரசியல் தொடர்பும் இல்லை.

அச்சு அல்லது மின்னணு ஊடகங்களில் வெளியிடுவதற்கு அல்லது இடுகையிடுவதற்கு முன்பு, சரிபார்க்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை மட்டுமே நம்பியிருக்குமாறு எங்கள் நிறுவனம் பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரிவிக்கிறது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது முதல்வர் ஸ்டாலின் மருமகனான சபரீசன் பெயரும் அடிபட்டது. இதனையடுத்து ஜி ஸ்கொயர் மற்றும் சபரீசனுக்கு தொடர்பிருப்பதாக அப்போது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel