ஜி20 மாநாடு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார்.
ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (டிசம்பர் 5) மாலை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் உள்ள 40க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று அவர்கள் இருவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் ஒற்றைத் தலைமையால் பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் தனித்தனி அணிகளாய்ச் செயல்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் இருவரும் எல்லா நிகழ்வுகளிலும் தனித்தனியாகத்தான் சென்று வருகின்றனர். கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி டெல்லி புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
அதேநேரத்தில், சமீபத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அடுத்தடுத்து தமிழகம் வந்தபோதுகூட அவர்கள் இருவரும் தனித்தனியாகவே சந்திக்க முயற்சித்தனர். ஆனால், பிரதமர் மோடி வருகையின்போது இருவருக்கும் ஒரே நேரத்தில் வரவேற்கவே நேரம் ஒதுக்கப்பட்டது.
மோடி சென்றதற்குப் பின், மறுநாள் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, ஓ.பன்னீர்செல்வம் மட்டும் சந்தித்துப் பேசினார். அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை என தகவல் பரவியது.
இதுகுறித்து கடந்த நவம்பர் 16ஆம் தேதி மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பா.ஜ.க என்பது தேசிய கட்சி. ஒவ்வொரு முறையும் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் வரும்போது சந்திக்க வேண்டும் என்பதில்லை. அ.தி.மு.க – பா.ஜ.க என்பது இரு வேறு கட்சிகள்” எனத் தெரிவித்திருந்தார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கருத்து தெரிவித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் எடப்பாடியின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில், ஜி20 ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லியில் இருந்து அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதை, அத்தரப்பு பெரிய அங்கீகாரமாக கருதுகிறதாம். அதிலும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் எழுதிய இந்த கடிதத்தை பார்த்ததும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
ஏற்கெனவே அதிமுக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதன் விசாரணை நாளை மீண்டும் வர இருக்கிறது. முன்னர் வந்த நீதிமன்றத் தீர்ப்பின்படி, எடப்பாடி தரப்பின் கையே ஓங்கியிருக்கிறது. அதுபோல், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அவரிடமிருந்து விலகி எடப்பாடியிடம் தஞ்சமடைந்து வருகின்றனர்.
தற்போது டெல்லியில் இருந்து அங்கீகாரம் கொடுத்து அழைத்திருக்கும் அழைப்பின் மூலம், மத்திய அரசு ஆதரவு தமக்கு இருப்பதாக கருதும் எடப்பாடி பழனிசாமி, இன்னும் அதிக சந்தோஷத்தில் இருக்கிறாராம்.
அதே சந்தோஷத்துடன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவுத் தினத்தில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெவின் நினைவிடத்துக்குச் சென்று தன்னுடைய ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்திய எடப்பாடி, பின்னர் டெல்லிக்கு புறப்பட்டார்.
ஜெ.பிரகாஷ்
ஜெ நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை!
2024 நாடாளுமன்றத் தேர்தல்: பாஜக இன்று ஆலோசனை!