எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி வரை! எதிர் புரட்சியின் வரலாறு!

அரசியல்

ராஜன் குறை

புரட்சி நடிகர் என்றும் பின்னால் அரசியல் கட்சி துவங்கி தலைவரான பிறகு புரட்சித் தலைவர் என்றும் அறியப்பட்டவர் எம்.ஜி.ஆர்.

இந்த புரட்சி என்ற வார்த்தையின் பொருள் நெகிழ்வானது. உள்ள நிலையினை மாற்றி அமைப்பது, அப்படி அமைக்க துணிகரமாக முயல்வது போன்றவை புரட்சிகர செயல்பாடுகள். பொதுவாக ஜாதிய ஏற்றத்தாழ்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, பாலியல் சமமின்மை இவற்றை சமன் செய்ய முயல்வதும், அரசியல் ரீதியாக இந்த பாகுபாடுகளை கடந்து எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் சம உரிமை பெற்றவர்கள் என்று கருதுவதுமே புரட்சிகர முன்னேற்றங்கள்தான். எம்.ஜி.ஆர் துவக்க காலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சமூக நீதி, சம உரிமை, சமத்துவம் சார்ந்த கொள்கைகளை தன் படங்களில் வலியுறுத்தி நடித்ததால் புரட்சி நடிகர் என அழைக்கப்படலானார்.

தி.மு.க அத்தகைய சமத்துவ இலட்சியத்தின் கூறுகளாக பார்ப்பனீய இந்து மத எதிர்ப்பு, வடவர் ஆதிக்க எதிர்ப்பு, இந்தி மொழியாதிக்க எதிர்ப்பு ஆகியவற்றையே திராவிட என்ற சொல்லின் மூலம் சுட்டியதுடன், திராவிடம் எனப்படும் தென் இந்திய நிலப்பகுதியை தனித்த கூட்டாட்சி பிரதேசமாக அமைப்பதையும் இலட்சியமாகக் கொண்டிருந்தது. 1963-ஆம் ஆண்டு இந்திய அரசு பிரிவினைப் பிரசாரத்தை தடை செய்ததால் தனி நாடு கோரிக்கையை, மாநில சுயாட்சி கோரிக்கையாக மாற்றிக் கொண்டது. தனி நாடு கோரிக்கையை கைவிட்டாலும், திராவிடம் என்ற தென்னிந்திய நிலப்பகுதியின் பண்பாடு வரலாறு சார்ந்த விழுமியங்களை தன் இலட்சியமாக ஆரிய பார்ப்பனீயம் என்று கருதப்பட்ட ஜாதீய கருத்தியலுக்கு எதிராக வலியுறுத்தி வந்தது.

**புரட்சித் தலைவரின் எதிர்புரட்சி முனைப்புகள்**

எம்.ஜி.ஆர் தி.மு.க தலைமையுடன் கருத்து வேறுபாடுகள் கொண்டு, காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலின் பேரில் தனிக்கட்சி துவங்கினார். தான் அண்ணாவின் கொள்கைகளுக்கு உண்மையான வாரிசு என்று கூறிக்கொண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்தார். முதன் முதலில் தேர்தலில் பங்கேற்றபோதே மாயத்தேவர் என்ற ஜாதிப்பெயருடன் கூடிய வேட்பாளரை தன் கட்சியின் சார்பாக திண்டுக்கல் தொகுதியில் நிறுத்தினார். தான் ஜாதீயக் கருத்தியலுக்கு எதிராக இல்லை என்பதை உணர்த்தும் விதமாகவே இந்த செயல் அமைந்தது. தி.மு.க-வின் பின்னால் முழுமையாக அணி திரளாத பெரும்பான்மை நிலவுடமை ஜாதிகளை தன் வசம் இழுக்கும் திட்டம் அவரிடம் இருந்தது. அதற்கான தெளிவான அறிகுறியே மாயத்தேவர் என்ற ஜாதிப்பெயருடன் கூடிய வேட்பாளரை அவர் நிறுத்தி வெற்றி பெற்றது எனலாம்.

அதற்கடுத்து, இந்திரா காந்தி 1975- ஆம் ஆண்டு நெருக்கடி நிலை அறிவித்த போது தி.மு.க அரசு அதை எதிர்த்ததால் கலைக்கப்பட்டது. தி.மு.க செயல்பாட்டாளர்கள் பலர், கலைஞரின் இளைய மகன் மு.க.ஸ்டாலின் உட்பட, மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் பல கொடுமைகளுக்கு உள்ளாயினர். எம்.ஜி.ஆர் நெருக்கடி நிலையை எதிர்க்கவில்லை. அந்த நேரத்தில் அவர் தன் கட்சியின் பெயரையே மாற்றினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதுடன் அகில இந்திய என்ற அடைமொழியை சேர்த்து அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க) என்று பெயர் வைத்தார்.

**திராவிடம் எப்படி அகில இந்தியமாகும்?**

திராவிட இயக்க வரலாற்றை அறிந்தவர்கள் திராவிடம் என்பது மூன்று அம்சங்களை குறிக்கக் கூடியது என்பதை அறிவார்கள். முதலில் அது தென்னிந்திய நிலப்பகுதியை குறிப்பது. அங்கு வசித்த ஆரியர்கள் வருகைக்கு முந்தைய பூர்வகுடிகளான மக்களைக் குறிப்பது. தென்னிந்திய நிலப்பகுதியில் பேசப்படும் மொழிகளைக் குறிப்பது. திராவிடம் என்ற சொல் எப்படித் தோன்றியது, அது தமிழ் என்பதன் மருவிய ஒலிப்பா என்பது போன்ற விவாதங்கள் இருந்தாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் திராவிடம் என்பது தென்னிந்திய நிலப்பகுதி, ஆரியர்களுக்கு முந்தைய குடிகளான இனம், தென்னிந்திய மொழிகள் ஆகியவற்றை குறிப்பதாக அமைந்தது. ஆரியர்கள் சமஸ்கிருதம் என்ற மொழியோடும், வேதங்களோடும், அவற்றை பயன்படுத்தும் பார்ப்பனர்களோடும் அடையாளப் படுத்தப் பட்டதால், தமிழகத்தில் பார்ப்பனரல்லோதாரை திராவிடர் என்று அழைப்பதும் வழமையாயிற்று.

பெரியார் தலைமையில், அண்ணாவின் பங்களிப்போடு சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியின் பெரும்பகுதியும் இணைந்தபோது 1944 ஆம் ஆண்டு உருவான அமைப்பு திராவிடர் கழகம் என அழைக்கப்பட்டது. அப்போது “அர்” என்ற விகுதி திராவிட இனத்தவரை, மக்களை குறிப்பதாக அமைந்தது. அது பார்ப்பனர் அல்லாதோர் என்ற அரசியல் தொகுதியை குறிக்கும் ஒரு மாற்றுச்சொல்லாக கருதப்பட்டது.

பெரியாரிடமிருந்து பிரிந்து புதிய கட்சி துவங்க வேண்டிய நிலையில் புதிய கட்சிக்கான பெயரை ஆலோசனை செய்தபோது அண்ணா “திராவிடர் முன்னேற்றக் கழகமா?, திராவிட முன்னேற்ற கழகமா?” என்ற கேள்வியை தன்னுடன் இருந்த சிலரிடம் ஓரு நாள் மாலையில் கேட்டதாக அரங்கண்ணல் எழுதியிருப்பதை திருநாவுக்கரசு தனது தி.மு.க வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.” திராவிடர்” என்று மக்களை பிரித்துக்கூறும் வண்ணம் இருப்பதை விட, நிலப்பகுதியில் வாழும் அனைவரையும் புதிய கோட்பாட்டில், சமுதாய சித்தாந்தத்தில் ஒருங்கிணைப்பதை குறிக்கும் வண்ணம் தென்னிந்திய குடியரசை சுட்டும் வகையில் “திராவிட” என்ற சொல்லையே தேர்ந்தெடுத்தனர்.

இப்படி தென்னிந்தியாவை, அதன் மக்கள் தொகுதிகளை, அங்கு புழங்கிய மொழிகளைப் பேசுபவர்களை குறிக்கும் சொல்லின் முன் “அகில இந்திய” என்ற அடைமொழியை எப்படி சேர்க்க முடியும்? முற்றிலும் ஒன்றுக்கொன்று முரணாக இல்லையா? எம்,ஜி.ஆரிடம் கேட்டபோது அவர் தமிழகத்துக்கு வெளியே கோலார் போன்ற பகுதிகளிலும் கட்சிக்கு கிளை இருப்பதை குறிப்பிட்டதாக படித்த நினைவு இருக்கிறது.

தமிழகத்திற்கு வெளியே இருந்தாலும் அது திராவிட நிலப்பகுதியில் இருப்பதுதான். கிளைகள் மும்பாய், டெல்லியில் கூட இருக்கலாம். அதற்காக கட்சியின் இலட்சியம், அதன் கோட்பாடுகளைக் குறிக்கும் ஒரு சொல்லை நிராகரிக்கும்படியாக புதிய முன்னொட்டுகளை ஏற்படுத்த முடியுமா? அதுவும் திராவிட நாடு பத்திரிகையை நடத்திய அண்ணாவின் பெயருக்கு முன்னால், “அகில இந்திய” என்ற முன்னொட்டுகளை சேர்க்க எம்.ஜி.ஆருக்கு எப்படி மனம் வந்தது?

from mgr to edapadi anti revolution

என்னுடைய பார்வையில் எம்.ஜி.ஆர் மைய அரசின் இறையாண்மையுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார் என்றுதான் யூகிக்கிறேன். இது தொடர்பாக விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டி இருந்தாலும், எழுபதுகளில் நான் படித்த அவருடைய நேர்காணல்கள், கட்சி நாளிதழ்களில் வெளியான உரைகள் என்னிடம் அத்தகைய மனப்பதிவையே ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக நெருக்கடி நிலை மத்திய அரசின் சர்வாதிகாரத்தை தெளிவாக உணர்த்தியிருந்த நிலையில், தி.மு.க கட்சியினரை சிறைப்படுத்தி கொடுமைகள் புரிந்திருந்த நிலையில், 1977 தேர்தலில் இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது நினைவில் கொள்ள வேண்டியது. இந்திராவை எதிர்த்து ஆட்சிக்கு வந்த ஜனதாவின் வலுதுசாரித் தன்மையும், அதில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினரும் மீண்டும் 1980 ஆம் ஆண்டு தி.மு.க இந்திராவுடனேயே கூட்டணி வைக்கும் சூழலை ஏற்படுத்தினாலும், இரண்டு தேர்தல்களுக்கும் இடையில் நிகழ்ந்த சம்பவங்கள் பல முக்கியமானவை; ஆய்விற்குரியவை.

**அகில இந்தியமும், திராவிடமும்**

எம்.ஜி.ஆர் சூடிக்கொண்ட அகில இந்திய அடைமொழி அகில இந்தியத்தன்மையை எப்படியெல்லாம் தமிழக அரசியலில் உருவாக்கியது என்பது ஆய்வுக்குரியது. ஆனால் மாநில சுயாட்சிக் கோரிக்கை என்ற தி.மு.க-வின் முன்னெடுப்பு தேக்கத்தை சந்திக்க நேர்ந்தது எம்.ஜி.ஆரின் ஆட்சியினால்தான் என்பதை சுலபமாக உணரலாம். தி.மு.க-வுடன் தொடர்ந்து அரசியல்ரீதியாக போராட வேண்டியிருந்த அ.இ.அ.தி.மு.க பல வகைகளில் திராவிடத்தை முற்றிலும் கைவிட முடியாமலும், தி.மு.க போல மக்கள் நல திட்டங்களை வலுப்படுத்த வேண்டியும் இருந்தாலும் தி.மு.க தொடர்ந்து கோட்பாட்டு அளவில் மாநில நலன்களின் அரசியலை இந்திய அளவில் முன்வைத்து செயல்பட்டதைப் போன்ற வரலாற்றை அ.இ.அ.தி.மு.க-விடம் காண முடியாது.

from mgr to edapadi anti revolution

பார்ப்பனீய இந்து மத எதிர்ப்பிலும் அ.இ.அ.தி.மு.க நீர்த்துப்போன அணுகுமுறையையே கடை பிடித்தது. எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்து, தன்னுடைய வாரிசு என்பதை உணர்த்தும் விதத்தில் செயல்பட்டதை இன்று கவனமாக அலசி ஆராய வேண்டிய தேவை இருக்கிறது. அது ஏதோ தனிநபர் தேர்வு என்பதைவிட அதன் குறியீட்டு முக்கியத்துவம் கவனத்திற்குரியது.

இலங்கை தமிழர் விடுதலைப் போரின் தாக்கம் அதிகரித்த நிலையில், எம்.ஜி.ஆருக்குப் பிறகு மீண்டும் 1989 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, அநியாயமாக கலைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரசுடன் கூட்டணி வைத்த ஜெயலலிதா, ராஜீவ் படுகொலையின் காரணமாக ஆட்சிக்கு வந்தார். இயல்பாகவே ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் மிகுந்திருந்த தி.மு.க-வை எப்படியாவது ராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்புறுத்தி தடை செய்ய வேண்டுமென முயற்சித்தார்.

ஜெயலலிதா மிக மூர்க்கமான தி.மு.க எதிர்ப்பினையே தன் அரசியலின் மைய அச்சாக, வழிமுறையாகக் கொண்டார். இந்தப் போக்கு “முன்னேற்றம்” என்ற வார்த்தை குறிக்கும் சமூக மாற்றத்திற்கான போக்கை வலுப்படுத்தாமல், மீட்புவாத, பிற்போக்கு சிந்தனைகளை, ஜாதீய, மதவாத போக்குகளை வலுப்படுத்தவதாகவே அமைந்தது. அ.இ.அ.தி.மு.க கட்சியில் பிற்போக்குவாத ஜாதி அடையாள சக்திகள் மேலோங்கின. கட்சி அணிகளிடையே அரசியல் நீக்கம் தீவிரமடைந்து, பிழைப்புவாதம் மேலோங்கியது. தி.மு.க எதிர்ப்பைத் தவிர வேறு அரசியல் உள்ளடக்கமே கட்சிக்கு இல்லாமல் போனது.

அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஜெயலலிதா கரசேவைக்கு ஆதரவளித்தார். மதமாற்ற தடைசட்டம் கொண்டுவந்தார். பார்ப்பனரல்லாதோர் வழிபாட்டு முறைகளான கோழி,ஆடுகளை பலியிடுவதை தடை செய்தார். மகாமக விழாவில் பங்கெடுத்து, சடங்குரீதியான நீராடலை தன் தோழியுடன் மேற்கொண்டார். பார்ப்பனீய இந்து மத எதிர்ப்பை கட்சி முழுமையாக கைவிட்டது எனலாம்.

**எடுபிடி ஆட்சியான எடப்பாடி ஆட்சி **

from mgr to edapadi anti revolution

முழுமையான சித்தாந்த ரீதியான சீரழிவுக்கு உட்பட்ட கட்சியில், ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் கட்சியை ஒருங்கிணைத்து நடத்துவது யாரென்பதில் பிரச்சினை ஏற்பட்டது மட்டுமின்றி, ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள கட்சியினர் மத்திய பாரதீய ஜனதா கட்சியின் தயவில்லாமல் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டது. சசிகலா தலைமையை விரும்பாத பாஜக, முதலில் ஓ.பன்னீர்செல்வத்தையும், பின்னர் எடப்பாடி பழனிசாமியையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்து பினாமி ஆட்சி நடத்தத் துவங்கியது அ.இ.அ.தி.மு.க கட்சியின் எதிர்புரட்சித் தன்மையை முழுமையடையச் செய்தது.

இந்த வீழ்ச்சியின் முத்தாய்ப்பான தருணமே நாடே பொங்கியெழுந்து எதிர்க்கும் குடியுரிமை சீர்திருத்த சட்டத்தை அ.இ.அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆதரவளித்து நிறைவேற்றிய பரிதாபம். பாரதீய ஜனதாவுடன் ஆதரவுப்போக்கில் இருந்த பல்வேறு மாநில கட்சிகளும், ஆட்சிகளும் கூட எதிர்க்கும் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு, குடியுரிமை சீர்திருத்த சட்டம் ஆகியவற்றை வெட்கமின்றி ஆதரித்து நிற்கும் மாநில கட்சியாக அ.இ.அ.தி.மு.க சீரழிந்துள்ளது கண்கூடு. எம்.ஜி.ஆர் துவ்ங்கிய எதிர்புரட்சி அரசியல் எடப்பாடியுடன் முழுமையடைந்ததை நாளைய வரலாறு எடுத்துச்சொல்லும்.

**கட்டுரையாளர் குறிப்பு**

from mgr to edapadi anti revolution by rajankurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அ.இ.அ.தி.மு.க-வின் அவல அரசியல்: நாடகங்களும், ஊடகங்களும்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *