Export

ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் இருந்து கூட்டுக்களவாணி முதலாளித்துவத்துக்கு.. : பகுதி 7

அரசியல் சிறப்புக் கட்டுரை

 தமிழகத்துக்கும் ஒன்றியத்துக்குமான அரசியல் பொருளாதார முரண் வரலாற்று வழிபட்டது. தமிழகத்தின் அரசியல் பொருளாதார வரலாற்று வளர்ச்சி சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் ஏனைய இந்தியப் பகுதிகளில் இருந்து அடிப்படையில் வேறானதாக இருந்து வந்திருக்கிறது. வடக்கின் வளர்ச்சி ஆரியர்களாலும், பார்ப்பனியத்தாலும், முகமதியர்களாலும் தொடர்ந்து இடையீட்டுக்கு ஆளாகி வந்திருக்கிறது. தெற்கு, குறிப்பாக தமிழகம் அதை நிராகரித்து வடக்கின் நேரடி ஆதிக்கத்துக்கு இடம்கொடாமல் இயல்பாக நிலவுடைமை ஏற்படும்வரை வளர்ந்து வந்திருக்கிறது.

அதோடு இந்திய நிலப்பரப்பில் எல்லோரும் ஏற்றுக்கொண்டபின் இறுதியாகத்தான் தமிழகத்தின் மீது பார்ப்பனியம் திணிக்கப்படுகிறது. வடக்கில் ஆட்சியாளர்களாக வரும் முகமதியர்கள் தெற்குக்கு முதலில் வர்த்தகர்களாகத்தான் வருகிறார்கள். பிற்காலத்தில்தான் ஆட்சியாளர்களாக மாறுகிறார்கள். அதேபோல ஐரோப்பியர்களால் முதன்முதலாக பார்ப்பனிய கட்டமைப்பு உடைப்புக்குள்ளாவதும் தெற்கிலும் தமிழகத்திலும்தான். இது சுதந்திரத்துக்கு முந்தைய போராட்டத்திலும் பிந்தைய வளர்ச்சியிலும் தொடர்ந்து பிரதிபலித்து வந்திருக்கிறது.

திராவிட மாதிரியின் மூலம்; மூலதன அரசுடைமையாக்கம்

சுதந்திரத்துக்கு முந்தைய ஒடுக்கப்பட்ட மக்களை ஒட்டச் சுரண்டிய முதலாளித்துவ ஏகாதிபத்தியம் மற்றும் பார்ப்பனிய சமூக ஏகாதிபத்தியம் ஆகிய இரண்டில் மற்றவர்கள் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தை மட்டும் எதிர்த்துக் கொண்டிருந்தபோது சமூக மாற்றத்துக்கு இன்றியமையாத பார்ப்பனியத்துக்கு எதிராக பெரியாரின் தலைமையில் கலாச்சாரப் புரட்சி செய்தது தமிழகம். மற்ற பகுதிகளில் அந்நிய நேரடி ஆதிக்கம் ஒழிந்து பார்ப்பனியம் மீட்சி கண்டு முதல் மூவர்ணத்தின் ஆதிக்கத்தைத் தோற்றுவிக்கிறது. தமிழகமோ, பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒடுக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் பின்னணியைக் கொண்ட காமராஜரின் தலைமையில் கல்விப் பரவலாக்கத்தைக் காண்கிறது. சுதந்திர இந்தியாவில் மூவர்ண நிலவுடைமை மற்றும் தொழிற்துறை ஏகபோகம் (முற்றுரிமை) இந்தியாவை வறுமையில் தள்ளுகிறது.

 வறுமையும், தங்கத்தின் மதிப்பைத் தெரிவிக்கும் டாலரின் அடிப்படையிலான உலக ஒழுங்கின் உடைப்பும், வறுமைக்கு எதிரான இந்திய மக்களின் போராட்டமும் இந்தியாவில் நிலவுடைமை ஆதிக்கம் உடைந்து பகுதியளவு நிலச்சீர்திருத்தத்தைக் கொண்டுவருகிறது. மூலதனமும் நிதியும் அரசின்கீழ் வந்து சமூகச் சந்தைப் பொருளாதார முறை நடைமுறைக்கு வருகிறது.

அப்போது விவசாயம் வளர்ச்சி கண்டு மற்ற பகுதி மக்கள் வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தபோது தமிழகம் விவசாய வளர்ச்சியுடன் உணவு, கல்வி, மருத்துவம் ஆகிய அனைத்தையும் அனைத்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் விரிவாக்கி திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்கி தொழிற்துறை வளர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறுகிறது. இந்த மாற்றத்துக்கான மூலம் மூலதனமும் நிதியும் அரசின்கீழ் வந்தது. பார்ப்பனிய ஆட்சியும் நிர்வாகமும் அகற்றப்பட்டு சமூகநீதி சமத்துவ ஜனநாயகம் நிலைபெற்றிருந்த தமிழகத்தில் அதன் பலன்கள் சமமாக எல்லோருக்கும் சென்றடைந்து அது இந்தியச் சமூகத்துக்கே உரித்தான தனிச்சிறப்பான திராவிட மாதிரியாக கருக்கொண்டு உருவாகி வளர்கிறது.

alt="from export policy to collective gambling"

உலகமயத்தால் உடைக்கப்பட்ட சமூகச் சந்தைப் பொருளாதாரம்

இது தமிழக பிராந்திய முதலாளிகளின் வளர்ச்சிக்கு வித்திட்டு இயல்பாக ஒன்றிய பார்ப்பனிய தொழிற்துறை ஏகபோகத்துடன் முரண்படுவதை நோக்கிச் சென்றிருக்க வேண்டும். அப்படியான முதலாளிகளின் போராட்டத்துக்கு ஒருங்கிணைந்த மக்கள் தொகுதியின் தேவையை அது ஏற்படுத்தி இருக்கும். அது பழைய நிலவுடைமை-பார்ப்பனிய பண்பாடுகளை மேலும் உடைத்து நொறுக்கி சாதியை பின்னுக்குத்தள்ளி மக்கள் சம உரிமைகளுடன் கூடிய தொழிற்துறை தொழிலாளர்களாக மாறுவதை நோக்கி சென்றிருக்கும். கெடுவாய்ப்பாக, பனிப்போரில் சோவியத் ஒன்றியம் அமெரிக்காவுடன் தோற்று உடைந்து சிதறுகிறது.

அமெரிக்காவின் தலைமையில் ஒற்றைத் துருவம் உருவாகி உலகமயம் இந்தியாவுக்கு வருகிறது. அது தனது நிதிமூலதனச் சந்தை விரிவாக்கத் தேவைக்கு இந்திய மூவர்ண தொழிற்துறை ஏகபோகத்தை உடைத்து நொறுக்குகிறது. தொழிற்துறை வளர்ச்சிக்குத் தயாராக இருந்த ஆனால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்த தமிழக முதலாளிகளுக்கு, புதிய வாய்ப்புகளைத் திறந்து விடுகிறது. தமிழக தொழிற்துறை வளர்ச்சிக்காக தயாராக உருவாக்கி வைத்திருந்த திறன்மிக்க தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு உலகம் முழுவதும் சென்று உழைத்து பொருளீட்டக் கிளம்புகிறார்கள். நமது அரசும் சமூகம் அவ்வளவு உழைப்பையும் முதலையும் செலுத்தி உருவாக்கிய தொழிலாளர்களை எந்தச் செலவுமின்றி தனது வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டு பலனடைகிறது மேற்குலகம். இவர்கள் அனுப்பும் டாலரில் இந்தியா திருப்தி கொள்கிறது.

இதற்கு முந்தைய நக்சல்பாரி கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான நிலவுடைமைக்கு எதிரான போராட்டம் நிலச்சீர்திருத்தத்துக்கு வழிவகுத்து உலக ஒழுங்கின் உடைப்பால் உருவான சமூகச் சந்தைப் பொருளாதார முறை தொழிலாளர்களுக்குப் பகுதியளவேனும் பலன்களைக் கொண்டு வருகிறது. இந்திய பிராந்திய முதலாளிகளின் வளர்ச்சியினூடான போராட்டத்தின் மூலம் மூவர்ணத் தொழிற்துறை உடைந்திருந்தால் தொழிலாளர் உரிமைகளை வலுப்படுத்தி அந்தப் பலன்களை மேலும் அதிகப்படுத்தி இருக்கும். மாறாக ஏகாதிபத்தியத்தின் தேவைக்கான இந்தியத் தொழிற்துறை ஏகபோகத்தின் உடைப்பு அப்படிக் கிடைத்த குறைந்தபட்ச பலன்களையும் இல்லாமல் ஆக்குகிறது. நிதிமூலதன ஏற்றுமதி பொருளாதார உற்பத்தித் தேவையின் காரணமாக தென்னிந்தியாவைப் போன்று நாட்டின் பல பகுதிகளிலும் கல்விப் பரவலாக்கம் நடைபெற்றாலும் அப்படி உருவான தொழிலாளர்கள் உருவாக்கிய செல்வத்தின் பலன்களை நிதிமூலதனம் உறிஞ்சிக் கொள்கிறது. அதன் முழு ஆதிக்கத்துக்கும் சுரண்டலுக்கும் வளர்ச்சிக்கும் தடையாக நிற்கும் இதற்கு முந்தைய சமூகச் சந்தை பொருளாதார கட்டமைப்புகளான நிதி, வங்கி, காப்பீடு, அரச முதலாளித்துவக் கட்டமைப்புகளை அடித்து நொறுக்க ஆரம்பிக்கிறது.

வாய்ப்பைத் தவறவிட்டு உலகமயத்தில் மங்கிய தமிழகம்  

எழுபதுகளில் நிலவுடைமைகளின் ஆதரவை இழந்த காங்கிரஸ் இதுவரையிலும் தொழிற்துறைக்காக ஒட்டுமொத்த இந்தியச் சந்தையையும் கட்டிக்காக்க உதவி வந்தது. இப்போது ஒருங்கிணைந்த சந்தையின் உரிமையாளனாக உலகமய பன்னாட்டு நிறுவனங்கள் மாறியதை அடுத்து ஏகாதிபத்தியத்தின் உண்மையான ஏஜென்டாக மீண்டும் தன்னை மாற்றியமைத்துக் கொண்டு ஆட்சியைத் தொடர்கிறது. இதற்கு முந்தைய எழுபதுகளின் உடைப்பின்போது மூவர்ண நிலவுடைமைகளின் ஆதரவைப் பெற்ற பாஜக இப்போது இந்த உலகமய உடைப்பினால் மூவர்ண முதலாளிகளின் ஆதரவையும் பெறுகிறது. உலகமய உடைப்பும் உள்ளூர் அழுத்தமும் கோரும் தொழிற்துறை, தொழிலாளர் உருவாக்க தேவைக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முனைவது வடக்கில் அதுவரையிலான மூவர்ண ஆதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

வீதிக்கு வந்த அவர்களை பார்ப்பனிய கருத்தியல் கட்டமைப்புடன் தயாராக இருந்த ஆர்எஸ்எஸ் – பாஜக உள்வாங்குகிறது. பெரும்பான்மையை அணி திரட்ட இந்து-முஸ்லிம் வெறுப்பு அரசியலைக் கையிலெடுத்து இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்கிறது. யார் சிறப்பாக ஏகாதிபத்திய சேவை செய்வது என்பது இதன் பிறகான அரசியலாக மாறுகிறது.

ஏற்கனவே திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்கி ஓரளவு தொழிற்துறை வளர்ச்சி கண்ட தமிழகத்துக்கு இந்தியாவில் ஏற்பட்ட தொழிற்துறை உடைப்பு புதிய டாலர் நிதிமூலதனத்தையும், உற்பத்தியை நவீனப்படுத்திக் கொள்ளும் தொழில்நுட்பங்களையும்,  தொழிற்துறை ஏற்றுமதி வாய்ப்புகளையும் வழங்குகிறது. முதலாளித்துவத்துடன் ஒட்டிப்பிறந்த இன்னொரு குழந்தையான லஞ்ச லாவண்யம் தமிழகத்தில் கரைபுரண்டு ஓடுகிறது. அது திராவிடக் கட்சியினரின் கைகளை நிறைத்து கண்களை மறைத்து குறைந்தபட்சம் இருந்த கொள்கைப் பற்றையும் முதலாளித்துவ லஞ்ச தேன் நனைத்து ஈரமாக்கி நமுத்துப் போகச்செய்கிறது.

மாநிலச் சுயாட்சி என்ற சொல்லே அவர்களின் சொல் அகராதியில் இருந்து மறைந்து விடுகிறது. ஒன்றிய பார்ப்பனியம் பலகீனமடைந்து அப்போது கிடைத்த அந்நிய மூலதனம், தொழில்நுட்ப வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு விவசாயத்தை நவீனமயமாக்கி, தொழிற்துறையை வளர்த்தெடுத்து, தொழில்முனைவோரை ஊக்குவித்து, தொழிலாளர் வருமானத்தைப் பெருக்கி, திறன்மிக்க தொழிலாளர்களின் வெளியேற்றத்தைத் தடுத்து, தொழில்நுட்பங்களை தன்வயமாக்கி (Indigenization) தமிழகம் சீரான மாற்றம் பெறுவதை உறுதி செய்திருக்க வேண்டும்.

அவ்வாறான மாற்றத்துக்கு அடிப்படையான நிதி, தொழிற்துறை அரசியல் அதிகாரங்களை மாநிலத்துக்குக் கிடைக்கச் செய்யும் திசையில் தமிழகம் நகர்ந்திருக்க வேண்டும். தொழிற்துறை வளர்ச்சியூடான சாதிய சமத்துவ சமூக ஜனநாயகக் கட்டமைப்பைக் கட்டி எழுப்பி வலுப்படுத்தி இருக்க வேண்டும். மாறாக, விவசாயம் புறக்கணிக்கப்பட்டு ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நமது மொத்த ஆற்றலையும் திருப்பி விட்டோம்.

உற்பத்தி செய்த பொருட்களோடு கடின உழைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு தலைமுறை தொழிலாள வர்க்கத்தையும் சேர்த்து ஏற்றுமதி செய்தோம். தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்து ஏற்றுமதி வருவாயைப் பெருக்கிக் கொண்ட முதலாளிகள், அதைக் கைகொள்ளும் ஆக்கபூர்வமான சிந்தனையோ, அப்படியான பொருட்களுக்கான உள்ளூர் சந்தையை உருவாக்கிக் கொள்ளும் ஊக்கமோ இன்றி அடிமாட்டு விலைக்குத் தொழிலாளர்கள் கிடைத்து அதன் மூலம் பொருட்களை ஏற்றுமதி செய்து லாபம் பெருகினால் சரி என இருந்துவிட்டார்கள். இந்தியத் தொழிற்துறை கோராத திறன்மிக்க தொழிலாளர்கள் இங்கிருந்து வெளியேறினார்கள். அங்கிருந்து வந்த நிதி மூலதனமும், பொருட்களும் இங்கிருக்கும் நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பையும் தொழிலாளர்களின் கூலியையும் உண்டு இல்லை என்றாக்கியது.

alt="from export policy to collective gambling"

உலகமயமும் சமூகத்தின் வீழ்ச்சியும்

 1980 ஜனவரி வரை 8.1ஆக இருந்த டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு டாலர் நிதி மூலதனம் உள்ளே நுழைய ஆரம்பித்த அடுத்த பத்து ஆண்டுகளில் 17.4 (1990-ஜனவரி) ரூபாயாகவும் உலகமயம் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு அது 31.0 (1993-ஜனவரி) ரூபாயாகவும் வீழ்கிறது. இதே காலத்தில் நாணயப் பரிவர்த்தனையை உள்ளூர்/வெளியூர் என இரண்டாகப் பிரித்து சந்தையிடம் விடாமல் அரச கட்டுப்பாட்டைத் தொடர்ந்த சீன நாணயத்தின் மதிப்பு 1.6 (1981)இல் இருந்து 1994இல் 8.7 ஆக சரிந்தாலும் அதன்பிறகு அதன் மதிப்பு கூடியதே தவிர, இதற்கும் கீழாகக் குறையவில்லை. ஆனால், இந்தியாவிலோ எழுபதுகளில் நிதியமயமாக்கத்தின் மூலம் (Financialization) அமெரிக்க நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பை நீர்க்கச் செய்து உழைப்பாளர்களின் கூலியை வீழச் செய்ததைப்போல இந்தியாவிலும் தொடர்ந்து வீழ்ச்சியடைய வைக்கிறார்கள்.

இந்த நிதியமயமாக்கத்தின்போது சேமிப்பில் உள்ள பணத்தின் அளவு தொடர்ந்து உயரும்; தொழிலாளர்கள் சம்பளமாகப் பெரும் பணத்தின் எண்ணும் உயரும். ஆனால், அதனால் வாங்க முடியும் பொருளின் அளவு தொடர்ந்து குறையும். பணத்தின் மதிப்பை நிலையில்லாமல் செய்து தொடர்ந்து பொருட்களின் விலையை ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாக்கி விளையாடும் நிதியச்சந்தை விளையாட்டின் இறுதியில் மக்கள் உழைத்து உருவாக்கும் மதிப்பை இழந்திருப்பார்கள்; பங்குச்சந்தை சூதாடிகள் அதைக் கறந்து மதிப்புமிக்க மாற்று சொத்துகளாக மாற்றி வைத்துக் கொண்டிருப்பார்கள். இப்படிக் குவியும் செல்வம் தனது மதிப்பை இழக்காமல் பெருக வேண்டுமானால் அது தொடர்ந்து உற்பத்தியில் ஈடுபட்டு மேலும் மேலும் பெருக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் அது தொடர்ந்து வாழ்க்கையை மேம்படுத்தும் புதிய பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

 அதேசமயம் உற்பத்தியை உழைப்பாளர்கள் மலிவாகக் கிடைக்கும் நாடுகளுக்கு மாற்றி அவர்களை வஞ்சிக்கிறது; அவர்களின் கூட்டு பேரவலிமையை உடைக்கிறது; வாங்க வழியற்றவர்களாக மாற்றுகிறது. அப்படி வாங்க வழியற்றவர்களை வாங்கச் செய்ய நுகர்வு வெறியைத் தூண்டி கடனாளியாக்குகிறது.

அந்தக் கடனை அடைக்க உழைத்துக் களைத்த அவர்கள் மறுநாள் வேலைக்குச் செல்ல தன்னை தயார்படுத்திக்கொள்ள கிடைக்கும் ஓய்வு நேரத்திலும் உழைக்கிறார்கள். உடல், மன ஆரோக்கியத்தை இழந்து இறக்கிறார்கள். இப்படிக் குறையும் தொழிலாளர்களை பதிலீடு செய்ய மறு உற்பத்தியில் ஈடுபட்டு, குழந்தை பெற்று, வளர்த்து ஆளாக்கும் வல்லமையின்றி குழந்தை பெற்றுக்கொள்வதையே தவிர்க்கிறார்கள்.

அது குழந்தை பிறப்பு விகிதத்தை (Fertility Rate) பாதித்து சமூகப் பிரச்சினையாக (Demographic Problem) மாறுகிறது. இந்த நிதியமயமாக்கம் ஆரம்பிப்பதற்கு முந்தைய எழுபதுகள் வரை வளர்ந்த நாடுகளிலும் அமெரிக்காவிலும் அவசியமான பதிலீடுட்டு (Replacement Level) அளவான 2.1 விட அதிகமாகவே இருந்து வந்திருக்கிறது. இது எழுபதுகளுக்குப் பிறகு இந்த அளவுக்கும் கீழாக அமெரிக்காவில் வீழ்ந்து உலகமயம் ஆரம்பித்த தொண்ணூறுகளின்போது எழுந்து இப்போது அது மீண்டும் வீழ்ந்து 1.67ஐ தொட்டிருக்கிறது.

இதைச் சரிசெய்ய தொழிலாளர்களின் கூலியை உண்மையாக உயரச் செய்வதற்கு பதிலாக, மற்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்து சமாளிக்கிறார்கள். தமது மேன்மையை இழந்துவிட்ட அமெரிக்க உள்ளூர் தொழிலாளர்களின் கோபத்தை, குடியேறிகளுக்கு எதிராகத் திருப்பி இனவெறியைக் கிளப்பி உண்மையை மறைக்கிறார்கள். கெட்டித்தட்டிய ஜப்பானிய, கொரிய சமூகங்கள் அமெரிக்கர்களைப்போல இறக்குமதியும் செய்ய முடியாமல் சுயமாகப் பெருகவும் முடியாமல் அருகிக் கொண்டிருக்கின்றன. (விரிவாக பிறிதொரு சமயம் பார்ப்போம்)

முன்னேறிய வாழ்க்கை முறை பின்தங்கிய சமூக வளர்ச்சி

 தொண்ணூறுகளுக்கு முன்பு விவசாய உற்பத்தி பெருகி உணவுப் பிரச்சினை தீர்ந்து, பொதுக்கல்வி மற்றும் சுகாதாரம் நடைமுறையில் இருந்த காலத்தில் பதிலீட்டு அளவுக்கும் அதிகமாக இருந்த பிறப்பு விகிதம் இப்போது அதற்கும் கீழாக தமிழகத்தில் சரிந்திருக்கிறது. நவீன சாதனங்களின் அறிமுகம், கல்வி, மருத்துவத்தில் அரசு பின்வாங்கி தனியாரை அனுமதித்தது, இவற்றால் பெருகிய செலவினங்களுக்கு ஏற்ப உயராத வருமானம் ஆகியவற்றை சமாளிக்க முடியாமல் மக்கள் ஆசைக்கொரு குழந்தை போதுமென்று அளவோடு பெற்றுக் கொள்கிறார்கள். இந்த நெருக்கடியை, பெருமளவு தொழிலாளர்கள் மத்திய கிழக்குக்கும் மற்ற நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து உழைத்து பொருளீட்டி சமாளிக்கிறார்கள். தூண்டப்பட்ட நுகர்வால், வலிந்து திணிக்கப்படும் பொருளாதாரச் சூழல்களால் கடன்வாங்கி நவீன சாதனங்களைக் கொண்டு வீடுகளை நிரப்புகிறார்கள்.

உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவைக் கொண்டு அடைக்காமல் வெறும் மாவுச்சத்தை அதிகமாகக் கொண்ட அரிசியைக் கொண்டு நிரப்புகிறார்கள். பஞ்சத்தில் அடிப்பட்ட மேற்கு, உருளைக்கிழங்கைத் தின்று உயிர் வாழ்ந்ததைப்போல தமிழர்கள் அரசி சோற்றைத் தின்று நிரந்தர ஊட்டச்சத்து பஞ்சத்திலும், சர்க்கரை, ரத்தகொதிப்பு நோய்களுடனும் உடல்பருமனுடனும் வாழ்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அப்படியான மோசமான வாழ்வை வாழ்கிறோம் என்ற பிரக்ஞையின்றி அறியாமையுடனே வாழ்ந்து சாவதுதான்.

 வீடுகள் முழுக்க நவீன பொருட்களும் மனிதர்களின் சிந்தனை முழுக்க அரதப் பழசான பிற்போக்கு சிந்தனையும் ஆட்கொண்டிருக்கிறது. ஒரு பழங்குடியின் கைகளில் திறன்பேசியும் வீட்டில் நவீன வண்ணத் தொலைக்காட்சி உள்ளிட்ட சாதனங்களும் வந்துவிட்டதாலே அவர் முதலாளித்துவ சமூகத்துக்குரிய பண்பு நலன்களை மதிப்பீடுகளைப் பெற்றுவிடுவதில்லை. அந்தப் பொருட்களை உருவாக்கத் தேவையான தொழில்நுட்பத்தைக் கைகொள்ளும் அளவுக்கு அந்தச் சமூகத்தின் உழைப்பின் ஆற்றல் உயரும்போதுதான் அப்படியான மதிப்பீடுகளைப் பெறும். அப்படியான உழைப்பின் வளர்ச்சியை எட்டத் தவறிய தமிழகமும் இந்தியாவும் முழுமையான முதலாளித்துவச் சமூகமாகவும் இல்லாமல் பழைய நிலவுடைமை சாதிய சமூக மதிப்பீடுகளைத் தொடரவும் முடியாமல் இரண்டுக்கும் இடையில் அல்லாடுகிறது.

உற்பத்தி தொழில்நுட்பங்களை அடையும் முனைப்பின்றி சாதிய சமூக மாற்ற நோக்கத்தை விடுத்து பாஜகவுடன் கூட்டணி வைக்கும் அளவுக்கு கொள்கை சமரசம் செய்துகொண்ட திமுக, இந்தக் காலங்களில் அதற்கான விலையைக் கொடுக்கிறது. சமூக முன்னேற்றமின்றி தனிநபர், சமூக செல்வமும் குறுகிய நிலையில் இங்கிருப்பவர்களை அது சாதிய குழுக்களாக இறுக்கமாக இணைந்து கொண்டு அந்த குறைவான செல்வத்தை அடைய சண்டையிட வைக்கிறது. அடிமட்டத்தில் பார்ப்பனிய அடிப்படைகள் மாறாமல் சங்கியாக இருந்தவர்களை பாஜக உள்வாங்குகிறது. சிந்தனை வளர்ச்சியடைந்த மட்டத்தில் உள்ளவர்களை முற்போக்கு இயக்கங்களும் எஞ்சிய இடைநிலையில் உள்ள பெரும்பான்மையை அதிமுகவும் திமுகவும் அணிதிரட்டி அரசியல் செய்து வருகின்றன.

டாலர் பெருக்கமும்  நிதிச் சீர்திருத்தமும்

தொண்ணூறுகளுக்கு முந்தைய நிதியமயமாக்கத்தின் மூலம் ஏதுமற்றவர்களாக மாற்றப்பட்ட அமெரிக்க பெரும்பான்மை இதன் பிறகு பெரும் கடனாளிகளாகிறார்கள். அதற்கு மேலும் சந்தை விரிவடைய சாத்தியமில்லாத நிலையில் உலக இயற்கை வளங்களை ஆக்கிரமிக்கவும் இன்னும் திறக்கப்படாமல் விடப்பட்ட கொஞ்சநஞ்ச சந்தை வாய்ப்புகளைத் திறக்கவும் கிளம்பியது அமெரிக்க ஏகாதிபத்தியம். இந்தியாவில் திறக்கப்படாத காப்பீடு, வங்கி, பாதுகாப்பு, சில்லறை வர்த்தகம் உள்ளிட்டவற்றை திறக்க அழுத்தம் கொடுக்கிறது. இடதுகள் உள்ளிட்டவர்களின் எதிர்ப்பால் காங்கிரஸ் அவற்றை செயல்படுத்தத் தடுமாறுகிறது. சமூகச் சந்தை பொருளாதார காலத்தில் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கு என்றே தனியாக அருண்ஷோரியை அமைச்சராகக் கொண்ட ஒரு துறையை உருவாக்கி அவர்களைவிட ஏகாதிபத்திய அடிமைச்சேவகம் செய்வதில் நாங்கள்தான் வல்லவர்கள் என அறிவித்துச் செயல்படுத்தி அவர்களின் ஆதரவைப் பெறுகிறது பாஜக. இந்தத் துறைகளில் அந்நிய முதலீடு அனுமதிக்காத 2007 வரையிலும் இந்திய (1993 – ஜனவரி 31.3; 2007 – ஜனவரி 43.9) ரூபாயின் மதிப்பு பெரிதாக வீழ்ச்சியடையவில்லை. 1992-2006 காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் உள்ளே நுழைந்த அந்நிய முதலீடு 0.1-4.1 பில்லியன் டாலர்களைத் தாண்டவில்லை. 2008 பொருளாதார நெருக்கடியும் இந்தியாவை அவ்வளவு பெரிய அளவில் பாதிக்கவில்லை.

 2008 பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க அமெரிக்கா டாலர்களை அதிகளவு அச்சிடுகிறது. நிதியமயமாக்கம் கொண்டுவந்த பிரச்சினைக்குத் தீர்வாக அதிகப்படியான நிதியமயமாக்கத்தைத் தீர்வாக உலக மக்களின்மீது திணிக்கிறது. உலக நாடுகள் குறிப்பாக சீனாவும் ரஷ்யாவும் இணைந்துகொண்டு டாலருக்கு மாற்றான கட்டமைப்புகளை ஏற்படுத்தும் திசையில் நகர ஆரம்பிக்கிறார்கள். இப்படி செயற்கையாக உருவாக்கப்பட்ட டாலர் நிதிமூலதனத்தை உள்ளே நுழைய அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீட்டை மேலும் அனுமதிக்க காங்கிரஸ் அரசை நெருக்குகிறார்கள். அவர்களின் நெருக்கடிக்கு அடிபணிந்து இந்தியா அனுமதிக்க ஆரம்பித்தது முதல் அந்நிய முதலீடு அனைத்து ஆண்டுகளிலும் பல பில்லியன் டாலர்களாக இரட்டை இலக்கத்தை எட்டுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபட வசதியாக ஆதார், இணையம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் தீவிரமடைகின்றன. இதைக் கைப்பற்ற இந்தியப் பெரு நிறுவனங்கள் இடையே போட்டி எழுகிறது. அது அலைக்கற்றை ஊழலாக வெளிப்பட்டு அப்போது திமுக அதில் பலி கொடுக்கப்படுகிறது.

alt="from export policy to collective gambling"

ஏகாதிபத்தியம் + பார்ப்பனியம் = கூட்டுக்களவாணி முதலாளித்துவம்  

சீனாவில் உள்ளூர் இணையதள தொழிற்துறை வளர்ச்சியின்போக்கில் இணையதள நிறுவனங்களின் அடிக்கட்டமைப்பில் சிறு, குறு உற்பத்தியாளர்கள், வணிகர்கள் பலன் அடையும் வகையில் மின்னணு பொருளாதார முறையை இருசாராரும் பலன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தி எந்த எதிர்ப்புமின்றி சீனர்கள் வெற்றி பெறுகிறார்கள். இந்தியாவில் அந்நிய பெருநிறுவனங்களின் அடித்தளத்தில் அப்படியான சிறு, குறு வணிகர்களை ஒழித்து அந்த இடத்தில் பெரு நிறுவனங்கள் பிடிக்க வசதியாக அவர்களின் தேவைக்காக கயமைத்தனமாக இவற்றை திணிக்கிறார்கள். இணையதள வளர்ச்சி ஆரம்பித்துவிட்ட நிலையில் சில்லறை வணிகத்தில் அமேசான், வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்களை அனுமதிக்க முனைகிறது காங்கிரஸ் அரசு. இந்தியா முழுக்க எழுந்த எதிர்ப்பை அடுத்து அது பின்வாங்குகிறது. கூடவே, சீன-ரஷ்ய நாடுகளின் பிரிக்ஸ், எஸ்சிஒ போன்ற அமைப்புகளில் இந்தியா பங்கெடுத்து டாலர் அழுத்தத்தைத் தவிர்க்கப் பார்க்கிறது இந்தியா. இருபக்கமும் துண்டைப்போட்டு முன்பு இரு துருவத்தை ஒருவருக்கு எதிராக மற்றவரை நிறுத்தி பலனடைந்ததைப் போல இப்போதும் பலனடைய இந்திய ஆளும்வர்க்கம் காய்களை நகர்த்துகிறது.  

 பொதுவான அமெரிக்க நிதிமூலதன டாலர் சுழற்சியில் மலிவாக டாலரை வெளியிட்டு அது உலகம் முழுக்க பாய்ந்து அந்தந்த ஊர் நிறுவனங்களின் மதிப்புமிக்க சொத்தில் முதலிடுவார்கள். பின்பு டாலர் உள்ளிழுக்கப்பட்டு டாலர் மதிப்புக் கூட்டப்படும்போது உள்ளே நுழைந்த டாலர் வெளியேறி சீட்டுக்கட்டுகள் சரிவதைப்போல முதலிட்ட நிறுவனங்களின் மதிப்பு சரியும். இப்போது பெருநிறுவனங்கள் அவற்றை வலுவான டாலரைக் கொண்டு இணைத்தல் மற்றும் வாங்குதல் (Merger and Acquisition) மூலம் கைப்பற்றும். அது பெருநிறுவனங்கள் சந்தையில் ஏகபோகம் பெற்று விலைகளை உயர்த்தி அவர்களின் லாபத்தைக் கூட்டும். விலைவாசி உயரும் அதேசமயம் வேலைவாய்ப்பு குறையும். 2013இல் இப்படியான டாலர் சுருக்க சுழலில் சிக்குகிறது காங்கிரஸ் கட்சி.

இந்திய ரூபாயின் மதிப்பு 65.6 ரூபாய் அளவுக்கு சரிகிறது. விலைவாசி உயர்கிறது. குஜராத் பனியாக்களைக் கூட்டாளியாக சேர்த்துக்கொள்ளும் ஏகாதிபத்தியம் காங்கிரஸின் மீது பழியைச் சுமத்தி சந்தை கேட்பதை எல்லாம் கொடுக்கும் குஜராத் மாதிரியை வளர்ச்சியின் பிம்பமாக கட்டமைத்து மக்களின் கண்களின் முன்னால் கானல்நீரை ஓட வைக்கிறது. 2014 தேர்தலில்  வானரங்களின் வா(யி)லில் வாட்ஸ்அப், முகநூல் பந்தங்களை சுற்றி பொய்யையும் புரட்டையும் எண்ணெயாக வார்த்து இந்தியா முழுக்க பேசுபொருளாக்கி வெற்றி பெறுகிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியமும் குறிப்பிட்ட (குஜராத்) மாநில முதலாளிகளுக்குமான சந்தையாக இந்தியா மாறுகிறது. இதன் சித்தாந்தமாக பார்ப்பனியமும் செயல்படுத்தும் கட்சியாக பாஜக பார்ப்பனிய நிர்வாகமும் செயல்படுகிறது. அமெரிக்க நிதிமூலதன பெருநிறுவனங்களுக்கு இந்தியச் சந்தையும் குஜராத் பனியாக்களுக்கு முன்பு சமூகச் சந்தைப் பொருளாதார காலத்தில் உருவாக்கப்பட்ட பொதுச்சொத்துகள் எனப் பங்கு பிரித்துக்கொண்டு கொள்ளையிடும் கூட்டுக்களவாணி பொருளாதார முறை நடைமுறைக்கு வருகிறது.

முடிவுக்கு வரும் சமூகச் சந்தைப் பொருளாதார அடிப்படைகள்  

 ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு 2015இல் 15 துறைகளில் அந்நிய முதலீடுகளுக்கான வரம்புகள் தளர்த்தப்படுகிறது. 2016இல் ஊகபேர நிதி மூலதன நிறுவனங்கள் முதலிட தோதாக விதிகள் இன்னும் தளர்த்தப்படுகிறது. ஆடுகளைப் பலி கொடுக்க கத்தியைத் தீட்டிக்கொண்ட பிறகு பணமதிப்பிழப்பை அறிவித்தும், ஜிஎஸ்டியை அறிமுகம் செய்தும் முறைசாரா பொருளாதாரம் முடக்கப்படுகிறது. இந்தியப் பொருளாதாரமும் சந்தையும் நிதிமூலதன பெருநிறுவனங்களின் முழுப்பிடிக்குள் செல்கிறது. தொலைத்தொடர்புத்துறை நிறுவனங்கள் திவாலாகி ஜியோமயமாகிறது. மின்சாரம், துறைமுகங்கள், விமான நிலையங்கள் அதானிமயமாகிறது. பொதுத்துறை வங்கிகளில் பாஜகவின் நண்பர்களுக்குக் கடன் வாரி வழங்கப்படுகிறது. அது வாராக்கடன்களின் அளவை அதிகரித்து வங்கிகளை திவாலாக்குகிறது. இந்துத்துவ அரசியல் புகையைக் கிளப்பி இந்து-முஸ்லிம் மக்களையும் எதிர்க்கட்சிகளையும் அங்கே கவனத்தைத் திருப்பிவிட்டு சத்தமில்லாமல் ஏகாதிபத்திய நிதி மூலதனம் இந்தியச் சந்தையையும் குஜராத் பனியாக்கள் இந்தியாவின் பொதுச்சொத்துகளையும் ஏப்பம் விடுகிறார்கள்.

 கொரோனாவின்போது மறுபடியும் மலிவாக டாலர்களை அச்சடித்து விடுகிறார்கள். இப்போது இந்தியாவில் இருந்த எல்லா தடைகளும் நீக்கப்பட்டு முக்கிய துறைகள் அனைத்திலும் அந்நிய முதலீடுகள் முழுமையாக அனுமதிக்கப்படுகிறது. பங்குச்சந்தை உச்சத்தைத் தொடுகிறது. இதோ இப்போது டாலர் மதிப்பைக் கூட்டி மற்றுமொரு டாலர் சுருக்க சுழற்சி தொடங்கப்பட்டிருக்கிறது. அந்நிய மூலதனம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. ரூபாயின் மதிப்பு 79 ரூபாய்க்கும் கீழாக வீழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் இணைத்தல் மற்றும் வாங்குதல் இப்போது மட்டுமல்ல இனிவரும் காலங்களிலும் சிறப்பாக இருக்குமென முதலீட்டு வங்கிகள் கூறுகின்றன. விலைவாசி உயர்ந்து உச்சத்தைத் தொட்டிருக்கிறது. வேலைவாய்ப்பு சுருங்கி முன்பு விவசாயத்தில் இருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் அதனை நோக்கி நகர்வதாகச் சொல்கிறார்கள். கொரோனாவுக்குப் பிறகு வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழும் மக்களின் அளவு அதிகரித்திருக்கிறது.

முன்பு கடனாகக் கொடுத்து வங்கிகளை காலி செய்தது போதாதென்று இப்போது வீழ்ந்துகொண்டிருக்கும் பங்குச் சந்தைகளை பொதுத்துறை காப்பீடு நிதி நிறுவனங்களில் உள்ள மக்களின் பணத்தைக் கொட்டி ஒன்றிய பார்ப்பனியம் தாங்கி பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பை வீழாமல் காத்துக் கொண்டிருக்கிறது. அரசின் கடன்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எழுபதுகளின் போதான சமூகச் சந்தைப் பொருளாதார அடிப்படைகள் முற்றிலுமாக நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. (சீனாவில் பெருநிறுவனங்களின் பங்கு மதிப்பு மதிப்பிழந்து அதலபாதாளத்தில் இருக்கும்போது வாங்குகிறார்கள். வரும்காலத்தில் அதன் மதிப்பு உயரும்போது அரசு(சமூகம்) அதில் பலனடையும். இதற்கு நேரெதிராக செல்லும் இந்தியாவில் பெருநிறுவன பங்கு வீழும்போது மக்களின் சொத்து இதில் மண்ணோடு மண்ணாகும்).  

 சமூகச் சந்தை காலத்தில் உருவான திராவிட மாதிரியை இப்போது மேடைதோறும் பேசிக்கொண்டே ஆட்சிக்கு வந்த ஓராண்டில் அத்தனை ஆயிரம் கோடி அந்நிய முதலீட்டை ஈர்த்திருக்கிறோம்; அதன்மூலம் வேலைவாய்ப்பைப் பெருக்குவோம் என அறிவிக்கிறது திமுக அரசு. அரசுத் துறைகளை நவீனமயமாக்கி வருகிறோம்; அரசின் செலவினங்களைக் குறைத்து பட்ஜெட்டை பற்றாக்குறையைக் குறைத்து விட்டோம் என பெருமை பேசுகிறது. இந்த அரசின் திராவிட மாதிரி பேச்சும் நவதாராளவாத கொள்கை செயல்பாடும் ஏன் முரண்பட்டது? அது எப்படி ஒன்றியத்துடனான பொருளாதாரக் கொள்கை முரணை தீர்ப்பதற்குப் பதிலாக தீவிரப்படுத்துகிறது? அது எப்படி இந்துத்துவர்களுடன் இவர்களை சமரசம் செய்துகொள்ள வைப்பதில் கொண்டுபோய்  நிறுத்துகிறது?

அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்

பகுதி 1 / பகுதி 2 / பகுதி 3 / பகுதி 4/ பகுதி 5 / பகுதி 6

கட்டுரையாளர் குறிப்பு:

alt="from export policy to collective gambling"

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

சிறப்புக் கட்டுரை : 2ஜி இழப்பு என்றால் 5ஜியில் நடந்தது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

1 thought on “ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் இருந்து கூட்டுக்களவாணி முதலாளித்துவத்துக்கு.. : பகுதி 7

  1. ஏன் அடுத்த பகுதி வரவில்லை? இந்துத்துவர்களுடன் திமுக சமரசம் செய்து கொண்டது பற்றி எழுதுவதில் ஏதும் தடங்கல் உள்ளதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *