– ரவிக்குமார்
“மாநில சுயாட்சிக்கான இன்றைய தேவை குறித்து தமிழ்நாட்டின் குரல்” என்னும் தலைப்பில் இன்று (30.10.2023) தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘போட்காஸ்ட்டில்’ உரையாற்றியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குஜராத் மாநில அமைச்சராக இருந்தபோது மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுத்ததையும், அவரே பிரதமராக வந்தபிறகு மாநில உரிமைகளைப் பறிப்பதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ‘மாநில சுயாட்சி மத்தியிலே கூட்டாட்சி’ என்ற முழக்கத்தின் இன்றைய தேவையை வலியுறுத்தியிருக்கிறார்.
‘மாநில சுயாட்சி மத்தியிலே கூட்டாட்சி’ என்ற முழக்கம் 1970ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் உருவெடுத்தது. இந்த முழக்கம் தமிழக எல்லையைத் தாண்டி இந்திய அளவில் எதிரொலிகளை எழுப்பியது மட்டுமின்றி, தலைமுறைகளைத் தாண்டி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தித் திணிப்பையும், வடவர் ஆதிக்கத்தையும் எதிர்ப்பதாக வெளிப்பட்ட இந்தக் குரல், தமிழுக்கான அங்கீகாரத்தைக் கோருவதாகவும், மாநில அரசுக்குக் கூடுதல் அதிகாரங்களைக் கேட்பதாகவும் அமைந்திருந்தது. அன்று, அதற்குத் தெளிவான கருத்தியல் வடிவத்தை வழங்கியவர் முரசொலி மாறன் ஆவார். அவர் மாநில சுயாட்சி குறித்து எழுதிய நூல் இன்றும் பொருந்தக்கூடியதாகும்.
ஆட்சி அதிகாரத்தை திமுக பிடித்தது முதல், அவசரநிலை அமல்படுத்தப்பட்ட காலம் வரை தமிழ்நாட்டில் இந்த மாநில சுயாட்சி முழக்கம் ஓங்கி ஒலித்ததை நாம் அறிவோம். ராஜமன்னார் குழு பரிந்துரையின் அடிப்படையில் மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 1974ஆம் ஆண்டில்தான், சுதந்திர தினத்தன்று கோட்டையிலே தேசியக் கொடியை ஏற்றிவைத்து இந்திய அளவில் ஒரு முன்னுதாரணத்தைக் கலைஞர் உருவாக்கினார்.
இப்படி மாநில மக்களின் உணர்வுகள் சனநாயக ரீதியாக வெளிப்பட்டுக் கொண்டிருந்த சூழலில்தான் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரங்களைக் குவித்துக்கொள்ள வேண்டும் என்ற நாட்டம் அன்றைய பிரதமர் இந்திராவின் கண்களை மறைத்தது. மாநில உணர்வுகள் சனநாயக ரீதியாக வெளிப்படுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டபோது பிரிவினை முழக்கங்கள் எழுந்தன. பஞ்சாப்பிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் ரத்த ஆறு பெருக்கெடுக்க அதுவே காரணமாய் அமைந்தது.
இந்தியாவின் தேசிய இனப்பிரச்சனையை ஆராய்கிறவர்கள் அதன் வேர் 1947ஐத் தாண்டியும் ஆழ்ந்து செல்வதை அறிவார்கள். மொழியால், இனத்தால் வேறுபட்டுக் கிடக்கும் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாக விளங்கும் இந்தியாவை நிர்வகிப்பதற்கு பிரிட்டிஷ்காரர்களும், படாதபாடுபட்டதை அவர்கள் புரிந்து கொள்ள முடியும்.
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அரசியலமைப்புச் சட்ட அவையின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் தத்தமது மாநிலங்களின் பிரதிநிதிகளாக அதில் பங்கேற்கவில்லை. எனவே மத்திய மாநில உறவுகள் குறித்த ஆழமான விவாதம் அந்த அவையில் நடைபெறவில்லை. நாட்டுப் பிரிவினையின் ரணம் ஆறாமல் இருந்த சூழலில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் அதிகாரம் பிரிவினைக்கு இட்டுச் சென்றுவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான் அன்றைய அரசியல் தலைவர்களிடம் மேலோங்கி இருந்தது. அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய அம்பேத்கரும் அதற்கு விதிவிலக்காக இல்லை. அதனால்தான் மாநிலங்களுக்கு அதிகாரங்களை வழங்கினாலும் தேவைப்படும்போது அந்த அதிகாரங்களை மத்தியில் மாற்றிக் கொள்வதற்குத் தோதாக நமது அரசியலமைப்புச் சட்டத்தை அவர் உருவாக்கினார்.
1967ஆம் ஆண்டிற்குப் பிறகு மத்தியில் இந்திராகாந்தி அம்மையார் பொறுப்பேற்றதற்குப் பின்னால் காங்கிரஸ் பேரியக்கம் ஒரு சில ஆண்டுகளில் இரண்டாக உடைந்த நிலையை இந்த நாடு பார்த்தது.
அப்போதே இந்தியா முழுமைக்கும் ஒரு கட்சி ஆட்சி என்பது ஏற்கமுடியாது என்கிற குரல்கள் வலுவாக ஒலித்தன. அதன் விளைவாகத்தான் இந்த நாட்டில் அவசர நிலையைக் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தம் இந்திரா அம்மையாருக்கு ஏற்பட்டது என்பதையும் நாமெல்லாம் அறிவோம்.
அந்த அவசர நிலை காலத்துக்குப் பிறகு ஜனசங்கம் முதலான கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து ஜனதா என்கிற கூட்டணியை உருவாக்கி இந்திய வரலாற்றில் 1977ஆம் ஆண்டில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத ஓர் ஆட்சியை மத்தியில் அமைத்தார்கள்.
இரண்டாண்டுக் காலம் நீடித்த அந்த ஆட்சி இந்தியா முழுமைக்கும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியது. எல்லா இடங்களிலும் மாநில உரிமைகளுக்கான கோரிக்கைகள் தீவிரமடைந்தன. மாநில உரிமைகளை முன்வைத்த கட்சிகள் ஏராளமாக உருவெடுத்தன. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் 1989ஆம் ஆண்டில் வி.பி.சிங் தலைமையிலான ஆட்சி. அதற்குப் பிறகு 1996ஆம் ஆண்டில் 16 கட்சிகளின் கூட்டணி ஆட்சி. 1998ஆம் ஆண்டு 18 கட்சிகளைக் கொண்ட கூட்டணி ஆட்சி. 1999ஆம் ஆண்டு 24 கட்சிகளைக் கொண்ட கூட்டணி ஆட்சி என்று மத்தியில் மாநிலக் கட்சிகள் பங்கேற்கின்ற கூட்டணி அரசுகள் உருவெடுத்தன.
மத்தியில் ஆளுகின்ற கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும்தான் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்கிற நிலை மாறி இந்தக் கூட்டணி ஆட்சிகளின்போதுதான் ஒப்பீட்டளவில் மாநில உரிமைகள் மதிக்கப்பட்டன. வளர்ச்சித் திட்டங்கள் மாநிலங்களுக்கும் வந்து சேர்ந்தன.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் தமிழ்ச் செம்மொழி ஆனது கூட்டணி ஆட்சியின் விளைவுதான். சேதுக்கால்வாய்த் திட்டம் வந்ததும் கூட்டணி ஆட்சியின் விளைவுதான். தமிழக சாலைகள் மேம்பட்டது கூட்டணி ஆட்சியின் விளைவுதான். 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்தினுடைய ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கமுடிந்தது என்றால் அது கூட்டணி ஆட்சியின் விளைவுதான். காவிரியில் நடுவர் மன்றம் காணமுடிந்தது என்றால் கூட்டணி ஆட்சியால் ஏற்பட்ட விளைவுதான்.
இப்படி கூட்டணி ஆட்சிகளால் தமிழகத்திற்குக் கிடைத்த நன்மைகள் பல. இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஒரு மத்திய பல்கலைக் கழகம் அமைந்திருக்கிறது, கூடுதலாக ஒரு ஐஐடி வந்திருக்கிறது – இவை எல்லாமே கூட்டணி ஆட்சி வந்ததற்குப் பின்னால் கிடைத்த நன்மைகள்தான். இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் நாம் எடுத்துக்காட்டுகளை சொல்லிக்கொண்டே போகலாம். ஆகவே, மாநிலங்கள் வளர்ச்சி பெறவேண்டும் என்றால் மத்தியில் கூட்டணி ஆட்சி அமையவேண்டும், அந்தக் கூட்டணி ஆட்சி கூட்டாட்சியாக வளர்ச்சி பெறவேண்டும் என்பதைப் பற்றி நாம் கவனம் செலுத்தவேண்டும்.
“ பெரும்பான்மை ஆட்சி நடக்கும் எந்தவொரு நாடுமே அவசரநிலை பிறப்பிக்கப்படுகிற ஆபத்துள்ள நாடுதான்” என சட்ட அறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் கூறினார். அது மறுக்கமுடியாத உண்மையாகும். 1975 இல் அவசரநிலை பிறப்பிக்கப்படும்போது இந்திராகாந்தி அம்மையாரின் தலைமையில் ஒரு பெரும்பான்மை ஆட்சிதான் நடந்துவந்தது. 1971 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 352 இடங்களில் வெற்றிபெற்று தனிப் பெரும்பானமையோடு ஆட்சிநடத்தியது.
இப்போதும் மத்தியில் பெரும்பான்மை பலத்தோடு பாஜக ஆட்சி நடத்துகிறது; எல்லா அதிகாரங்களும் பிரதமரின் கையில் குவிக்கப்படுகின்றன, நரேந்திர மோடி என்ற ஒருவரை மையப்படுத்தி துதிபாடும் வேலையில் ஊடகங்கள் யாவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பாஜக அல்லாத மாநில அரசுகள் ஓரவஞ்சனைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியிருக்கின்றன. இப்போது, அறிவிக்கப்படாத அவசரநிலையே நிலவுகிறது என்பதை அனைவருமே ஒப்புக்கொள்கிறார்கள்.
2024 இல் மீண்டும் பாஜக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்துவிட்டால் அதன்பிறகு இந்தியாவில் தேர்தல் ஜனநாயகமுறையே இருக்காது என்றும் அச்சம் தெரிவிக்கிறார்கள். அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்கவேண்டுமென்றால் அடுத்து மத்தியில் அமையும் ஆட்சி கூட்டணி ஆட்சியாக இருக்கவேண்டும் என்பதோடு அது கூட்டாட்சியாகவும் இருக்கவேண்டும். அதை உறுதி செய்யவேண்டியது மாநில உரிமைகள் குறித்து அக்கறை கொண்ட கட்சிகளின் பொறுப்பு. இன்று முதலமைச்சரின் ‘போட்காஸ்ட்’ உரை அந்தப் பொறுப்புணர்வின் வெளிப்பாடு. அவருக்குப் பாராட்டுகள்.
கட்டுரையாளர் குறிப்பு:
முனைவர் டி.ரவிக்குமார் – நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் தொகுதி), எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அக்டோபர் மாதத்தில் இயல்பை விட குறைந்த பருவமழை!
’அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம்’: TANGEDCO எச்சரிக்கை!