சமூகச் சந்தைப் பொருளாதாரத்தில் இருந்து ஏற்றுமதி பொருளாதாரத்துக்கு… பகுதி 6

அரசியல் சிறப்புக் கட்டுரை

தற்போதைய தமிழகத்தின் ஒன்றியத்துடனான பொருளாதாரக் கொள்கை முரணை பார்ப்பனிய எதிர்ப்பு அரசியல் விட்டுக்கொடுப்பின்மூலம் திமுக அரசு தீர்க்க முனைகிறது. இது அரசியல் விட்டுக்கொடுப்பின் மூலம் தீர்க்கப்படக்கூடிய அரசியல் முரணல்ல; பார்ப்பனிய எதிர்ப்புடன் கூடிய ஒன்றியத்தின் பாதைக்கு மாற்றான பொருளாதார முன்னெடுப்பின் மூலம் எதிர்கொள்ள வேண்டிய பொருளாதார முரண். அப்படியான மாற்றை இந்திய-தமிழக வளர்ச்சியை வரலாற்று வழியில் புரிந்துகொள்வதன் மூலமே கண்டடைய முடியும்.

பிரிட்டிஷ்கால இந்தியாவை முதலாளித்துவ ஏகாதிபத்தியம் மற்றும் பார்ப்பனிய-நிலவுடைமைச் சமூக ஏகாதிபத்திய சுரண்டும் வர்க்கங்களால் சுரண்டப்படும் உழைக்கும் வர்க்கம் என்பதாக வரையறுக்கலாம். முதலாளித்துவ ஏகாதிபத்தியம், பார்ப்பனிய-நிலவுடைமைச் சமூக ஏகாதிபத்தியம் ஆகிய இரு உழைக்கும் வர்க்க மக்கள் எதிரிகளில் யார் எதை எதிர்த்து எதை விட்டார்கள்; அது எந்தவிதமான சமூக மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதுதான் சுதந்திர இந்திய, தமிழக மாற்றங்களாக நம்முன் விரிந்திருக்கிறது.

எழுபதுகள் கால நெருக்கடியும் மாற்றங்களும்…

 சுதந்திரத்துக்கு முந்தைய காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளின் பார்ப்பனிய எதிர்ப்பற்ற அந்நிய ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒருங்கிணைந்த இந்தியாவில் பார்ப்பனிய முதல் மூவர்ணத்தின் ஆதிக்கத்தை உருவாக்குகிறது. பார்ப்பனிய சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிரான அம்பேத்கர் மற்றும் பெரியாரின் சமூகநீதி அரசியல் இட ஒதுக்கீடு ஏற்படக் காரணமாகி இந்தியாவில் சாதிய சமத்துவ ஜனநாயக அரசியலுக்கான விதையை விதைக்கிறது.

பெரியாரின் நிலவுடைமை எதிர்ப்பற்ற பார்ப்பனிய எதிர்ப்பு சுயமரியாதை அரசியல் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை வீழ்த்தி தமிழகத்தில் இடைநிலை சாதிகளின் கோரிக்கையான கல்விப் பரவலாக்கத்தைக் கொண்டுவருகிறது. அப்போதைய சமூகச் சூழலில் நடைமுறைப்படுத்த முடியாத முரணான தனிநாடு, தமிழ்த்தேசிய அரசியல் கருப்பையும் சிவப்பையும் அடையாளமாகக் கொண்ட திமுகவைத் தோற்றுவிக்கிறது.

ஆளும் வர்க்க நலனை முன்னிறுத்திய சுதந்திர இந்தியாவில் உழைக்கும் வர்க்கம் கைவிடப்பட்டு பட்டினியில் வீழ்ந்து இடதுகளின் தலைமையில் நிலவுடைமைக்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறது. இந்தியாவுக்குள் எழுந்த நிலவுடைமை எதிர்ப்பும் இதற்கு வெளியில் ஏற்பட்ட தங்கத்தின் மதிப்பை தெரிவிக்கும் டாலர் மதிப்பு விதி மாற்றமும் மூலதனம் மற்றும் நிதியை முழுமையாக அரசின்கீழ் கொண்டுவந்து நிலச்சீர்திருத்தத்தைக் குறிப்பிட்ட அளவு செயல்படுத்தி நிலவுடைமை ஆதிக்கத்தை உடைத்து சமூகச் சந்தைப் பொருளாதார முறை நடைமுறைக்கு வர காரணமாகிறது.  

பார்ப்பனிய எதிர்ப்பற்ற கம்யூனிஸ்டுகளின் நிலவுடைமை எதிர்ப்பு அரசியலும் தமிழகத்தில் வலுவாகக் காலூன்றி இருந்த பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலும் ஒடுக்கப்பட்ட மக்களின் தேவைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்துகின்றன. அது “மலிவு விலையில் அனைவருக்கும் அரிசி” என்ற திமுகவின் தேர்தல் முழக்கமாக உருப்பெற்று அதுவரையிலும் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உணவுக் கோரிக்கைக்கு அரசியல் வடிவம் கொடுத்து திமுகவை அரியணையில் ஏற்றுகிறது.

கொந்தளிப்பான அரசியல் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சிறு, குறு குத்தகை விவசாயம் செய்தவர்களுக்கு சாதகமான சட்டங்களை திமுக அரசை இயற்றச் செய்து நிலவுடைமைகளின் ஆதிக்கத்தை உடைக்கிறது. அப்போதிருந்த வறுமை சூழ்ந்த சூழல், கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டிய கட்டாயம், நிலச்சீர்திருத்தம், அரசின்கீழ் கொண்டுவரப்பட்ட நிதி ஆகியவை விவசாயப் பொருள் உற்பத்தியைப் பெருக்கி, தானியக் கொள்முதல் மற்றும் சேமிப்பு நிலையங்கள், பொதுப் பரம்பலுக்கான (Public Distribution) போக்குவரத்து, நியாயவிலைக் கடைகள், குடும்ப அட்டைகள் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் உணவுச் சுயசார்பை எட்டுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. பொழுதுவிடிந்தால் ஆண்டைகளின் வீட்டுவாசலில் அன்னக்கூடைகளை வைத்துக்கொண்டு சோற்றுக்கு நிற்கும் அவலத்தைப் போக்கி, சுயமாக சொந்தக் காலில் நிற்கவைத்து, ஆயிரமாண்டுக் கால அடிமை வரலாற்றில் அவர்கள் சுயமரியாதையுள்ள மனிதர்களாகத் தலைநிமிர்வதை உறுதி செய்கிறது.

மாறிய தமிழகம், மாறாத இந்தியா…

 ஊர்தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்களை நிறுவி பாம்பே திட்டம் சுட்டிக்காட்டிய பெரும்பகுதி தாய்மார்களின் குழந்தைகளின் இறப்பை தமிழ்நாடு தடுத்து நிறுத்துகிறது. ஊர்தோறும் கையடி நீர்க்குழாய்கள், நியாயவிலைக் கடை, துவக்கப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் என்பது அனைத்து தமிழக கிராமங்களிலும் காணக்கூடிய பொதுத்தோற்றமாக மாற்றமடைகிறது. முந்தைய கோயிலை மையப்படுத்திய பார்ப்பனிய பொருளாதார முறையின் தொடர்ச்சியான ஊர்சாதிப் பஞ்சாயத்துக்கள், மணியக்காரர்கள் ஆகிய கட்டமைப்புகள் உடைத்து நொறுக்கப்படுகிறது. முன்பு ஏற்பட்ட கல்விப் பரவலாக்கத்தோடு இந்த உணவும் மருத்துவமும் ஒடுக்கப்பட்ட மக்களை ஆண்டைகளின் அடிமைத்தளையில் இருந்து விடுவித்து தொழிற்துறை வளர்ச்சிக்குத் தேவையான தொழிலாளர் பட்டாளத்தை உருவாக்குவதற்கான உரமாக மாறுகிறது. ஐம்பதுகளில் பத்து விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்த இந்தியாவின் சேமிப்பு விகிதம் மெல்ல உயர்ந்து இப்போது (80-90கள்) அது இருபது விழுக்காட்டைத் தாண்டுகிறது. சுயமான தொழிற்துறை வளர்ச்சிக்குத் தேவையான மூலதனம், இந்திய சராசரியைவிட (52.21% – 1991) அதிகமான கல்வியறிவு (62.66%) கொண்ட திறன்மிக்க தொழிலாளர்கள் உருவாக்கிய தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின்(18.8%) பங்கு இந்தியாவைவிடக் (31.3%) குறைந்து தொழிற்துறையின் பங்கு பெருமளவு (36.7%, இந்தியா 27.6%) கூடியிருந்த சமயம் உலகமயம் எதிர்ப்படுகிறது.

 எழுபதுகளில் நிதியும், மூலதனமும் அரசின்கீழ் வந்து நிலவுடைமைகளின் ஆதிக்கம் உடைக்கப்பட்டு சமூகச் சந்தைப் பொருளாதார முறை நடைமுறைக்கு வந்தது தமிழகத்தின் அதுவரையிலான அரசியல் மாற்றங்களும் அப்போது ஏற்பட்டு இருந்த (திமுக) ஆட்சி மாற்றமும் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விவசாய உற்பத்தியைப் பெருக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உணவு, கல்வி, மருத்துவத்தை உறுதிசெய்து படித்த திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்கி தொழிற்துறை வளர்ச்சியை நோக்கியதாக மாற்றுகிறது. பார்ப்பனிய எதிர்ப்பற்ற மற்ற மாநிலங்களில் இதேபோன்ற மாற்றங்கள் ஏற்படவில்லை. அதோடு அப்போது நிலவுடைமைகளின் ஆதிக்கம் தளர்ந்ததே தவிர சீனாவைப் போன்று இங்கே அது முடிவுக்கு வரவில்லை. சீனப் புரட்சியின் விளைவாக நிலவுடைமைகளின் ஆதிக்கம் முற்றிலுமாக முடிவுக்கு வந்த சீனாவில் நிலங்கள் முறையாகப் பகிர்ந்தளிக்கப்பட்டு, விவசாய உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டு செல்வப்பரவலாக்கமும், உணவு, கல்வி, மருத்துவம் ஆகிய அடிப்படை வசதிகள் பரவலாக்கமும் நிகழ்ந்து தொழிற்துறைக்கு தேவையான மிகப்பெரும் அளவில் தொழிலாளர் பட்டாளம்  உருவாகிறது.

சீனாவின் காரியவாத வளர்ச்சிப் பாதை  

 1980இல் இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்கள் பாதிக்கும் குறைவாக 43.57 விழுக்காடாகவும் சராசரி ஆயுட்காலம் 53.47 ஆண்டுகளாகவும் தடுமாறிக் கொண்டிருந்தபோது சீனாவில் அது 67 விழுக்காடாகவும், 66.4 ஆண்டுகளாகவும் வளர்ந்திருந்தது. ஸ்டாலின் மறைவுக்குப் பிறகான சோவியத் ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சியின் திருத்தல்வாத நடவடிக்கைகளை விமர்சித்த சீனாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்படுகிறது. சோசலிச போர்வையில் மற்ற நாடுகளை ஆதிக்கம் செய்யக் கிளம்பும் சோவியத் ரஷ்யாவை சமூக ஏகாதிபத்தியமாக வரையறுத்து அமெரிக்க, சோவியத் ஆதிக்கத்தை மறுத்து சுதந்திரமான சுயசார்பான பாதையில் செல்ல முற்படுகிறது சீனா.

அது சீனாவின் தொழில்நுட்ப, தொழிற்துறை வளர்ச்சிக்கான ரஷ்ய உதவியை நிறுத்துகிறது. இதன் உச்சமாக 1969இல் ஏற்பட்ட சோவியத்-சீனப்போர் சீனாவை அமெரிக்காவுடனான நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதை நோக்கி நகர்த்துகிறது. தென்கிழக்காசியா, மத்தியகிழக்காசியா, ஐரோப்பா எனப் பல்முனை போர்களில் ஈடுபட்டிருந்த அமெரிக்கா சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்துவதன் மூலம் வியட்நாம் போருக்குப் பிறகான தென்கிழக்காசிய பகுதியை நிலைப்படுத்தி சோவியத்துக்கு எதிராக தனது மொத்த ஆற்றலையும் குவிக்கிறது. தொழில்நுட்ப, மூலதன வளர்ச்சியடைந்து போட்டிக்கு வளர்ந்துவிட்ட ஜப்பானை தட்டிவைத்து உயர்ந்துகொண்டிருந்த ஜப்பானிய தொழிலாளர்களுக்கு மாற்றாக மலிவான சீன தொழிலாளர்களை நோக்கி நகர்கிறது.

 மாவோவின் மறைவுக்குப் பிறகு அமெரிக்க நிதி மூலதனத்தை சீனாவில் அனுமதித்து அமெரிக்க நிறுவனங்களுக்கான சந்தையையும் குறைகூலி தொழிலாளர்களையும் கொடுத்து குறுக்குவழியில் சீன முதலாளிகளின் சுயசார்புக்கான தொழிற்துறை தொழில்நுட்ப எலியைப் பிடிக்கிறது டெங் சியாவ்பிங் கறுப்புப் பூனை. இந்தியாவைப் போலல்லாமல் சோவியத் ரஷ்யா உடைந்து அமெரிக்கா வலுவான ஒற்றைத் துருவமாக  மாறுவதற்கு முன்பாக ரஷ்ய-அமெரிக்க மோதல் தொடர்ந்து கொண்டிருந்தபோதே சீனா அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் மூலம் சமபேர வலிமையுடன் அமெரிக்காவுக்கு சீனாவின் சந்தையும், குறைகூலி தொழிலாளர்களும் சீனாவுக்கு தொழிற்துறை தொழில்நுட்பமும் என இருநாட்டு ஆளும் வர்க்கங்களும் சமமாக பலனடைகின்றன. இருநாட்டு தொழிலாளர்களும் இதில் பலி கொடுக்கப்படுகிறார்கள். மிக முக்கியமாக, சீன உள்நாட்டு, வெளிநாட்டு பரிவர்த்தனைக்கான நாணயத்தை இரண்டாகப் பிரித்து (Onshore, Offshore yuan) இதன் மதிப்பை “சந்தையே” தீர்மானிக்க அனுமதிக்காமல் சீனா வணிகம் மேற்கொள்ளும் அனைத்து நாடுகளின் நாணயங்களையும் கணக்கில்கொண்டு அதனடிப்படையில் யுயனின் மதிப்பை தீர்மானிப்பது என்பதாகக் கட்டமைத்துக் கொள்கிறது. இதன்மூலம் சீனத் தொழிலாளர்கள் உழைத்து உருவாக்கும் செல்வமனைத்தும் மொத்தமாக நிதி மூலதனத்தால் உறிஞ்சிக் கொழுக்க அனுமதிக்காமல் அதன் பாதிப்பை பகுதியளவு வெட்டி வைக்கிறது. சுருக்கமாக அப்போது அவர்களிடம் இல்லாத உற்பத்திக் கருவிகளான மூலதனம், தொழில்நுட்பம், மேலாண்மை ஆகியவற்றை அடைவதை தனது நோக்கமாகக் கொண்டு இந்த சமரசத்தை அதை அடையும் உத்தியாகச் செயல்படுத்தி வெற்றி பெறுகிறது.

இடியாத மூவர்ண தொழிற்துறை கோட்டை இடிந்தது

சீனாவின் பாதைக்கு நேரெதிராக எழுபதுகளில் எழுந்த வறுமை பிரச்சினைக்கு முகம்கொடுத்து இடதுகளின் கலகத்தையும் நிலவுடைமைகளின் எதிர்ப்பையும் அடக்கி அந்நிய, இந்தியத் தொழிற்துறைக்காகவே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த இந்தியாவைக் கட்டிக் காக்கவே ஒன்றிய பார்ப்பனியம் முற்பட்டது. இது முழுமையான நிலச்சீர்திருத்தத்தை செயல்படுத்தி, விவசாய உற்பத்தியை பன்மடங்கு பெருக்கி, பெரும்பான்மையிடம் செல்வப்பரவலாக்கம் ஏற்பட்டு கல்வியறிவுள்ள திறன்மிக்க தொழிலாளர்களைத் தோற்றுவிப்பதற்கு பதிலாக நிலவுடைமைகளின் நூற்றாண்டுக் கால ஆதிக்கம் சற்று தளர்ச்சியடைய மட்டுமே உதவியது. அதோடு தொழிற்துறையில் இந்த சிறு தளர்ச்சிகூட ஏற்படாத வண்ணம் லைசென்ஸ் ராஜ்ஜியத்தின் மூலம் கட்டுப்படுத்தி வைத்திருந்தது. தொழிற்துறை உற்பத்தியில் போட்டியில்லாதபோது இந்தியாவில் புதிய செயலூக்கம் கொண்ட தொழிலாளிகளுக்கான தேவை எங்கே எழப்போகிறது; அப்படியான இந்தியாவில் எந்தவிதமான புதுமைகள் நிகழ்ந்துவிடப் போகிறது. இந்த சிறு முதலாளிகளின் கும்பல் மொத்த தொழிற்துறை உற்பத்தியையும் ஆக்கிரமித்துக் கொண்டு இந்திராவின் காங்கிரஸின் வழியாக தனது சர்வாதிகாரப் பிடியில் இந்தியாவை வைத்துக்கொண்டு கட்டியாள்வது என்பதாகத்தான் இருக்கும். இப்படியான கும்பல் ஆட்சி, அப்படியான கும்பலாட்சி நடத்திய பிற்கால சோவியத்தை அது உடையும்வரை உடம்புப் பிடியாக பிடித்துக்கொண்டு ஒட்டிக்கொண்டிருந்ததில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது.

 70-80களில் குறைகடத்தி தொழில்நுட்பங்களில் (Semiconductor Technology) மாபெரும் பாய்ச்சலைக் கண்டது அமெரிக்கா. உற்பத்தி தொழில்நுட்பத்தில் சோவியத் பின்தங்கியது. அமெரிக்காவின் புதிய தகவல்தொழில்நுட்ப பொருட்கள் உலகச் சந்தையை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. முன்பு போக்குவரத்தில் ஏற்பட்ட புரட்சிகர மாற்றம் எப்படி உலக உற்பத்தியை மாற்றியமைத்ததோ அதுபோல இந்தத் தகவல்தொழில்நுட்பப் புரட்சி அதற்கு ஏற்ப உலக உற்பத்தியை மாற்றியமைக்க ஆரம்பித்தது. பெட்ரோடாலர் நிதி மூலதன மூலதன பலம் மற்றும் புதிய உற்பத்தி தொழில்நுட்ப பலத்துடன் உலக எரிபொருள் உற்பத்தியையும் சந்தையையும் தனது கட்டுக்குள் கொண்டுவந்த அமெரிக்கா உற்பத்தியில் பின்தங்கிய சோவியத்தைப் பனிப்போரில் வீழ்த்தி வெற்றி பெறுகிறது. எண்பதுகள் முதற்கொண்டே கடுமையான அழுத்தம் கொடுத்தும் பஞ்சாப் பிரிவினைவாதிகளுக்கு உளவுத்துறையின் மூலமாக ஊக்கமளித்தும் அமெரிக்கா படிப்படியாக இந்தியாவின் தொழிற்துறையைத் திறக்க வைக்கிறது. அதனால் லைசென்ஸ் ராஜ்ஜியத்தின் இறுக்கம் குறைய ஆரம்பிக்கிறது. இறுதியாக சோவியத்தின் உடைப்புடன் முதல் மூவர்ணத்தின் தொழிற்துறை ஏகபோகம் முழுமையான உடைப்பை சந்திக்கிறது.

அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கிய உலகமயம்

 பெட்ரோ டாலரைத் தவிர எரிபொருள் மற்றும் வர்த்தகத்துக்கு மாற்று இல்லாத நிலையில் அமெரிக்காவுக்கு அடிபணிந்து அவர்கள் சொல்வதைக் கேட்டு அணிபடிந்து நடப்பதைத் தவிர வேறுவழியில்லை என்ற சூழலை இந்தியத் தொழிற்துறை ஆளும் வர்க்கம் எதிர்கொள்கிறது. அமெரிக்க நிதி மூலதனத்தையும் இந்தியத் தொழிற்துறை சந்தையைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கடைதிறந்து வைக்க வேண்டும் என்கிறார்கள். ஆகட்டும் ஐயா என்று அப்போது நிதியமைச்சரான மன்மோகன்சிங்கை வைத்துக்கொண்டு அனைத்தையும் செய்து முடிக்கிறார்கள். பதிலாக இவர்களுக்கு மென்பொருள் சேவைத்துறை ஏற்றுமதி வாய்ப்பு கிடைக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பை சந்தையே தீர்மானிக்க ஆரம்பிக்கிறது. அதுவரையிலான நடுத்தர வர்க்க மக்களிடம் சேமிப்பை ஊக்குவித்து திரளும் வங்கி மூலதனத்தைக் கொண்டும் தொழிற்துறையினரின் மூலதனத்தைக் கொண்டும் இந்தியச் சந்தைக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, வாங்கும் ஆற்றலுள்ள மக்களிடம் பொருட்களை சந்தைபடுத்தி, விற்று, லாபமீட்டி, மீண்டும் அதை உற்பத்திக்குப் பயன்படுத்தும் மெதுவான, ஆனால் நீடித்து நிலைத்து நிற்கும் பொருளாதார சுழற்சி முடிவுக்கு வருகிறது.

 நிதிமூலதனத்தையும் அவர்களின் தொழில்நுட்பங்களையும் கொண்டு உள்ளூர் சந்தைக்கும், உலகச் சந்தைக்கும் உற்பத்தி செய்வது தொடங்குகிறது. குறைந்த செலவில் ஏற்றுமதி செய்து, உலக உற்பத்தியாளர்களோடு போட்டியிட்டு சந்தைப்படுத்தி, டாலரை ஈட்டி, டாலர் நிதிமூலதனக் கடனை அடைக்கும் டாலர் நிதிமூலதனக் கடன் சுழற்சி உருவாகிறது. ஒப்பீட்டளவில் நிலையான நாணய மதிப்பு, மின்னல் வேகத்தில் ஏறியிறங்காத விலைவாசி உயர்வு, பணிப்பாதுகாப்பும் தொழிலாளர்கள் உரிமைகளுடனும் கூடிய வேலை, தொழிலாளர்கள் ஒவ்வொரு ரூபாய்க்கும் உரிய பொருட்களை வாங்கும் சூழல் ஆகிய அனைத்தும் முற்றிலுமாக மாற ஆரம்பிக்கிறது. நாளுக்கு நாள் மாறுபடும் ரூபாய் மதிப்பு, வாரத்துக்கு வாரம் மாறுபடும் விலைவாசி உயர்வு, முறையான வேலை என்றால் என்னவென்றே அறியாத அளவுக்கு நீக்கமற நிறைந்துவிட்ட அன்றாடம் காய்ச்சி அத்துக்கூலி வேலைகள், முதலாளிகள் நினைத்தால் வைத்துக் கொள்ளவும் வேண்டாம் என்றால் விரட்டி விடவுமான Hire and Fire சூழல் நடைமுறைக்கு வருகிறது. டாலர் மூலதனம் வந்தபிறகு நடுத்தர வர்க்கத்தை சேமிக்க ஊக்குவிப்பதற்கு பதிலாக செலவு செய்யத் தூண்டும் நுகர்வு கலாச்சாரம் அறிமுகமாகிறது.

ஒவ்வொரு காலாண்டு ஜிடிபி வளர்ச்சியில் இறக்கம் ஏற்பட்டால் உலகமே உடைந்து நொறுங்குவதைப் போலவும், ஏற்றம் கண்டால் நாம் சொர்க்க வாசலுக்குள் நுழைவதைப் போலவும் பிம்பத்தைக் கட்டி எழுப்ப ஆரம்பிக்கிறார்கள். இந்தச் சீர்திருத்தங்களால்தான் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் இதுவரையிலும் எட்டாத உயரத்தை எட்டிவிட்டதாக கதையளக்கிறார்கள். உண்மையில் இந்தச் சீர்திருத்தங்கள் எல்லாம் இல்லாத 1970-90 வரையிலான காலத்திலும் இந்தியா சராசரியாக ஆண்டுக்கு 4.3 விழுக்காடு வளர்ந்து கொண்டுதான் இருந்தது. 1971இல் ஜிடிபியில் 12.6 விழுக்காடாக இருந்த இந்தியர்களின் வங்கிச் சேமிப்பு 1991இல் 33.4 விழுக்காடாக உயர்ந்திருந்தது. உண்மையான முழுமையான நிலச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தி நிலவுடைமைகளின் ஆதிக்கத்தோடு தொழிற்துறை ஏகபோகத்தையும் ஒழித்து நாடு முழுவதும் உள்ள தொழில்முனைவோர் அனைவருக்கும் சமமாக போட்டிப் போட்டிக் கொண்டு உற்பத்தியைப் பெருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் இந்த வளர்ச்சி இருமடங்காக இருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு புரட்சி செய்யக் கிளம்பிய தோழர்கள் இப்படியான குறைந்தபட்ச பொருளாதார மாற்றை முன்வைத்து யதார்த்த சாதிய சமூகத்தை ஒப்புக்கொண்டு பெரியாரும் அம்பேத்கரும் விதைத்த சாதிய சமத்துவத்துக்கான சமூநீதி இட ஒதுக்கீட்டு அரசியலை கையில் எடுத்து பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களை ஒன்றிணைத்திருந்தால்கூட நாம் இதுவரையிலும் சாதிக்காத உயரத்தை எட்டி இருந்திருக்கலாம். அப்படியான ஒன்று நிகழாமல் போனது நமது வரலாற்று சோகம்தான்.

 அப்படித் தவறவிடப்பட்ட வாய்ப்பைப் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உலகமயச்சூழல் ஏற்படுத்தித் தருகிறது. மண்டல் கமிஷன் பரிந்துரைத்த இட ஒதுக்கீட்டு கோரிக்கையை வி.பி.சிங் செயல்படுத்த முன்வருகிறார். அதுவரையிலும் வீதிக்கு வராத முதல் மூவர்ணம் வீதிக்கு வந்து வீரியமிக்க போராட்டத்தை நடத்துகிறது. அவர்களை எப்படி பாஜக தன் பின்னால் அணி திரட்டுகிறது? அதற்கு முன்பே திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்கி இருந்த தமிழ்நாட்டுக்கு அது எப்படி சாதகமானதாக மாறியது? பலகீனமான ஒன்றிய பார்ப்பனிய சூழலில் தனது சுயாட்சி கோரிக்கையை முன்னெடுக்க தவறிய தமிழ்நாடு எப்படி இந்த ஒன்றிய-தமிழக பொருளாதாரக் கொள்கை முரணில் சிக்கியது?

அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்

பகுதி 1 / பகுதி 2 / பகுதி 3 / பகுதி 4/ பகுதி 5

கட்டுரையாளர் குறிப்பு:

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

அபாய நிலையில் இந்திய பொருளாதாரம்… இனியும் தாமதம் கூடாது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *