வைஃபை ஆன் செய்ததும் உதயநிதி துணை முதல்வர் ஆவது பற்றிய செய்திகளும் கேள்விகளும் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அமைச்சர் உதயநிதி செப்டம்பர் 18 ஆம் தேதி காலை துணை முதல்வராக அறிவிக்கப்பட போகிறார் என்று செப்டம்பர் 17 ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் திமுகவின் டாப் லெவல் நிர்வாகிகள் மத்தியில் பேச்சு பரவியது.
கடந்த சில மாதங்களாகவே இப்படித்தான் ஒரு தேதி குறித்து, நேரம் குறித்து பரபரப்பு கிளம்புகிறது. ஆனால் அது அப்படியே காற்றோடு காற்றாய் போய்விடுகிறது. அதனால் இதை எப்படி நம்புவது என்ற கேள்விகளும் இரவே எழுந்தன.
ஆனால், அதையும் தாண்டி நேற்றிரவு பரவிய செய்திக்கு சில வலிமையான முகாந்திரங்கள் இருந்தன. செப்டம்பர் 17 முப்பெரும் விழாவில் முதல் முறையாக ஸ்டாலின் விருது பெற்ற பழனிமாணிக்கம், ‘துணை முதல்வராக உதயநிதியை நியமிக்க இன்னும் ஏன் தாமதம்? அன்று உங்களை (ஸ்டாலின்) துணை முதல்வராக்க பேராசிரியர் அன்பழகன் ஒப்புக் கொண்டார். இன்று அனைவரும் ஒப்புக் கொள்ளும் நிலையில் இன்னும் ஏன் தயக்கம்?’ என்று பேசினார்.
முப்பெரும் விழா முடிந்ததும் முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு துரைமுருகன், நேரு, பொன்முடி, ஆ.ராசா, வேலு உள்ளிட்ட சிலர் சென்றார்கள். முதல்வர் வீட்டில் உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவது பற்றியும் அமைச்சரவை மாற்றுவது பற்றியும் ஸ்டாலின் ஆலோசித்திருக்கிறார்.
செந்தில்பாலாஜி ஜாமீனில் வெளியே வந்த பிறகுதான் அமைச்சரவையை மாற்றியமைப்பது என்று நினைத்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். செந்தில்பாலாஜியின் ஜாமீன் தள்ளிப் போவதால் அமைச்சரவை மாற்றமும் தள்ளிப் போவதா என்ற பேச்சு கட்சிக்குள் எழுந்த நிலையில், சிறையில் இருந்து செந்தில்பாலாஜி முதல்வருக்கு, ‘என்னைக் காரணமாக வைத்து அமைச்சரவை மாற்றத்தை தள்ளிப் போட வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அமெரிக்காவில் இருந்து திரும்பிய முதல்வர், பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோருடன் உரையாடும்போது, ‘சில அமைச்சர்களுக்கு துறை ரீதியான சுமை இருப்பதை அறிகிறேன். அவர்களிடம் இருந்த சில துறைகளை மாற்றிக் கொடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று முதல்வர் இல்லத்தில் நடந்த ஆலோசனையில், ‘தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் பிரதமர் மோடியை சந்திப்பதாக சொல்லியிருந்தார். டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு வந்தபிறகு உதயநிதி துணை முதல்வர் பதவி நியமனம், அமைச்சரவை மாற்றம் ஆகியவற்றை வைத்துக் கொள்ளலாமா என்றும் பேசப்பட்டிருக்கிறது.
ஆ.ராசா உள்ளிட்ட சீனியர்கள் அனைவருமே, ‘கட்சியினர் பலரும் வெளிப்படையாகவே பேசத் தொடங்கிவிட்டார்கள். 2009 இல் எப்படி உங்களை துணை முதல்வர் ஆக்கியபோது கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டதோ… அதேபோல 15 வருடம் கழித்து இப்போது உதயநிதியை துணை முதல்வர் ஆக்கும்போது கட்சிக்கு மீண்டும் புது ரத்தம் பாய்ச்சப்படும். அது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பெரும் பயனைக் கொடுக்கும். எனவே நம் கட்சி நிர்வாகிகளையே குழப்பத்தோடு காத்திருக்க வைக்க வேண்டாம். விரைவில் அறிவித்துவிடலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதன் பின் உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படும்போது அவரது அமைச்சரவை ரேங்க் பற்றிய விவாதமும் வந்திருக்கிறது. 2009 இல் ஸ்டாலின் துணை முதல்வர் ஆக்கப்பட்டபோது அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் அவர் அமர வைக்கப்பட்டார். அதாவது முதல்வர் கலைஞர், கல்வி அமைச்சர் அன்பழகன் ஆகியோரையடுத்து மூன்றாவதாக துணை முதல்வர் ஸ்டாலின் இருந்தார்.
அதேபோல இப்போது உதயநிதி துணை முதல்வர் ஆகும் பட்சத்தில் முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன் அதையடுத்து மூன்றாவது இடத்தில் உதயநிதியை கொண்டுவரலாம் என்பது வரை விவாதிக்கப்பட்டது.
இதன்படிதான் இன்று காலை அறிவிப்பது என முதலில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் ரீதியான, நிர்வாக ரீதியான ஏற்பாடுகள் கட்சிக்குள் நடந்துகொண்டிருக்க… அதேநேரம் உதயநிதியின் நலம் விரும்பிகள், குடும்பத்தினர் வேறு ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார்கள்.
அதாவது, ‘உதயநிதிக்கு சில விஷயங்களில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் மீது அக்கறை கொண்டவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களுக்கு அடுத்த தினம் என்பது பிரதமை என அழைக்கப்படும். பாட்டி முகம் என்று சில பகுதிகளில் சொல்லுவார்கள். இந்த நாட்களில் நல்ல விஷயம் எதையும் தொடங்குவதில்லை என்பது நம்பிக்கையுடையவர்களின் மரபு. எனவே இத்தனை காலம் தாமதமாகிவிட்டது. இன்னும் ஓரிரு நாள் தாமதமானால் என்ன?’ என்ற அந்தத் தரப்பிடம் இருந்தும் அன்பான அழுத்தம் வந்திருக்கிறது.
ஒருபக்கம் அரசியல் ரீதியான ஆலோசனை, இன்னொரு பக்கம் நம்பிக்கை கொண்டவர்களின் அபிலாஷை என இரு பக்கங்களில் இருந்தும் சில கருத்துகள் வந்த நிலையில் வரும் வெள்ளிக் கிழமை அதாவது செப்டம்பர் 20 ஆம் தேதி உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்று திமுகவின் தலைமைக் கழகத்திலே அடித்துச் சொல்கிறார்கள்.
இன்று காலை அறிவாலயத்துக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருக்கிறார். சந்திக்க வந்த அத்தனை பேரையும் உற்சாகமாக சந்தித்திருக்கிறார்.
வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி திமுகவின் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் தங்களது ஊர்களில் ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துவிட்டு சென்னையில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
எனவே செப்டம்பர் 20 ஆம் தேதி வெள்ளிக் கிழமை உதயநிதி அடுத்த கட்ட உயர்வை அடைகிறார் என்பதே செப்டம்பர் 18 ஆம் தேதி இரவு அப்டேட்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூராடம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த ‘கோட்’… 13 நாட்களில் இத்தனை கோடியா?