சுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான இன்று (ஆகஸ்ட் 3) சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப் படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார்.
இந்நிலையில், தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில், ”ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 219-ஆவது நினைவுநாள் இன்று.
தீரன் சின்னமலை என்றாலே அவரது வீரமும், வெற்றிகளும் தான் நினைவுக்கு வரும்.
1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.
போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று தூக்கிலிட்டனர். ஒரு தீரன் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட நாள் இன்று.
தீரன் சின்னமலையில் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்!”என்று குறிப்பிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கரூர்: செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
சென்னிமலை… சிவன்மலை… எரிமலை! : தீரன் சின்னமலைக்கு முதல்வர் மரியாதை!