தமிழக இலவச திட்டங்களுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், குஜராத்தில் தேர்தலையொட்டி இன்று (நவம்பர் 26) வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல்வேறு இலவச திட்டங்களை அக்கட்சி அறிவித்துள்ளது.
182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி இடையே இம்முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மூன்று கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், தேர்தல் அறிக்கைகளையும் அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், குஜராத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
காந்தி நகரில் நடைபெற்ற விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, குஜராத் முதல்வர் பூபேந்தர படேல், குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீல் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 10 முக்கிய வாக்குறுதிகள் இவைகள் தான்
1.நாட்டுக்கு எதிராக செயல்படும் தேசவிரோத சக்திகள், தீவிரவாதிகளை கண்டறிந்து ஒடுக்குவதற்கென தனி பிரிவு தொடங்கப்படும்.
2.கோயில்களை புதுப்பிக்கவும், அவற்றின் சிறப்புகளை பிரபலப்படுத்தவும் 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
3.குஜராத்தில் பொதுசிவில் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும்.
வேலைவாய்ப்பு
3.அடுத்த 5 ஆண்டுகளில் குஜராத் இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
4.பெண்களுக்காக மட்டுமே அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கப்படும்.
இலவசம்
5.குஜராத்தில் மூத்த பெண் குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண வசதி வழங்கப்படும்.
6.பெண் குழந்தைகளுக்கு மழலையர் பள்ளி(எல்.கே.ஜி) முதல் முதுகலை பட்ட படிப்புவரை இலவச கல்வி வழங்கப்படும்.
விவசாயம்
7.ரூ.10 ஆயிரம் கோடியில் விவசாய உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
8.நீர்பாசான வசதிகளை அதிகரிக்க 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
மீனவளம்
9.மீன்பிடித் தொழிலுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
10.இரண்டு கடல் உணவு பூங்காக்கள் அமைக்கப்படும் என்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா