எஸ்.வி.ராஜதுரை
குஜராத்தின் மோர்பி நகரின் மச்சு ஆற்றின் குறுக்கே 140 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுப் பழுதடைந்திருந்ததும், அண்மையில் புதுப்பிக்கப்பட்டதுமான தொங்கு பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் ஏறத்தாழ 150 பேர் மாண்டதும் ஏராளமானவர்கள் காணாமல் போனதுமான சோகச் செய்தி நாட்டையே உலுக்கி எடுத்து வருகிறது.
பாலத்தின் கம்பிகளைப் பிடித்துக் கொண்டும், ஆற்றில் விழுந்த அதன் இடிபாடுகளின் மீது நின்று கொண்டும், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை உள்ளூர் மக்களும், குஜராத் காவல் துறையினரும், எல்லோருக்கும் மேலாக தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினரும் காப்பாற்றியுள்ளனர்.
தங்கள் சொந்த மாநிலத்தில் அப்பேரழிவு நடந்த இடத்தைப் பார்ப்பதற்கு பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உடனடியாக விரைந்து சென்றிருக்க வேண்டும்.
ஆனால், அந்த மாநிலத்தின் வேறோர் இடத்தில் நலத்திட்டங்களைத் துவக்கி வைத்துப் பேசிய மோடி, வழக்கமான தன் நடிப்புக் கலையை வெளிப்படுத்தி சோகரசத்தைப் பிழிந்து கண்ணீர் விட்டதை ஊடகங்கள் பெரும் செய்தியாக வெளியிட்டு வருகின்றன.
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு மாநில அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை ‘ இலவசங்கள்’ என்று கொச்சைப்படுத்தியும், அவை வாக்குச் சேகரிப்பதற்காக ஆட்சிக்கு வரும் முன் அந்தந்த அரசியல் கட்சிகள் தரும் பொய் அல்லது மிகை வாக்குறுதிகளின் காரணமாக வழங்கப்பட்டு வருபவை என்றும், அவற்றைத் தடை செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் அணுகியிருக்கும் பாஜக,
தான் ஆட்சிபுரியும் ஒன்றிய அரசாங்கமும் வேறு பல மாநில அரசாங்கங்களும் குஜராத்தி பனியாக்களான அதானிக்கும் அம்பானிக்கும் மட்டும் பல லட்சம் கோடிக் கடன் தள்ளுபடி, மானியங்கள், ஏக்கர் கணக்கில் நிலத்தை வழங்குதல் , துறைமுகங்களை ஒப்படைத்தல் போன்றவற்றை வழங்குவது ‘ இலவசங்கள்’ பட்டியலில் வராது போலும்.
அதேவேளை அந்த அரசாங்கங்கள் மக்களுக்கு வழங்குவது இலவச மரணங்கள்தான். தங்கள் கட்சியைச் சேர்ந்த வன்முறை கும்பல்களான விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள், இன்னும் பல்வேறு குரங்குப் படைகளை ஏவிவிட்டு அப்பாவி முஸ்லிம்கள், பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் முதலியோரைக் கொல்வதும்,
சங் பரிவாரத்தை எதிர்த்து நிற்கும் பத்திரிகையாளர்கள் மீது பொய்வழக்குப் போட்டுக் கைதுசெய்வதும், உலகப் புகழ்பெற்ற ‘தி ஒயர்’ ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மீதும் அவரோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறவர்கள் மீதும் பல குற்ற வழக்குகள் போடப்பட்டதுடன் நிற்காமல், அவர்களை ஏதோ தீவிரவாதிகள் போல மக்களுக்குக் காட்டுவதற்காக டெல்லியில் அவர்களது வீடுகளில் போலீஸ் ரெய்ட் நடந்து கொண்டிருக்கிறது.
விரைவில் வரவிருக்கும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களைக் கவர்வதற்காகவே மேற்சொன்ன தொங்கு பாலம் அவசரம் அவசரமாக புனரமைப்பு செய்யப்பட்டு திறக்கப்பட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
அந்தப் பாலம் இடிந்து விழுந்ததற்குப் பொறுப்பேற்காத பாஜக மாநில அரசாங்கமும் ஒன்றிய அரசாங்கமும் சேர்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்றுதான் அந்தப் பாலத்தைப் புனரமைப்பு செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்ற நிறுவனத்தைச் சேர்ந்த சில கீழ் நிலை அலுவலர்கள் சிலரையும் பாலத்தைப் பராமரிக்கும் பணியில் இருந்த பாதுகாவலரையும் கைது செய்து உண்மையை மூடி மறைக்கும் கபட நாடகத்தை அரங்கேற்றியுள்ளன.
உண்மை என்னவென்றால் பொதுவாகக் கட்டுமானப் பணிகளிலோ, குறிப்பாகப் பாலங்கள் கட்டுவதிலோ எந்த அனுபவம் இல்லாததும் கடிகாரம் தயாரிக்கும் தொழிலை மட்டுமே செய்து வந்ததுமான ஒரு நிறுவனத்திடமே ரூ.2 கோடி மதிப்புள்ள மறுநிர்மாணப் பணிகள் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகின்றது.
அதற்கு டெண்டர்கள் ஏதும் விடப்படவில்லை என்ற செய்தியும் வெளிவந்துகொண்டிருக்கிறது. குஜராத் மாநில அதிகாரிகள் அந்த நிர்மாணப் பணியை செய்ய அந்த நிறுவனத்திற்குத் தங்கு தடையற்ற சுதந்திரத்தைத் தந்திருந்தனர்.
தங்களுடைய ஒப்புதல் இன்றியும், அது திருப்திகரமான முறையில் மறுநிர்மாணம் செய்யப்பட்டது என்ற சான்றிதழைப் பெறாமலும், அந்த நிறுவனம் அந்தப் பாலத்தை பொதுமக்களுக்குத் திறந்துவிட்டதாக குஜராத் அரசாங்கம் பச்சைப் பொய்யை அவிழ்த்து விட்டுள்ளது.
அது சொல்வது உண்மையாகத்தான் இருக்கும் என்று வைத்துக் கொண்டாலும், அது திறந்துவிடப்பட்டதற்குப் பிறகு நான்கு நாட்கள் அந்த அரசாங்கம் ஏன் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை?
உண்மை என்னவென்றால், அந்தப் பாலம் திறக்கப்படும் முன், அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமான பத்திரிகையாளர்கள் கூட்டத்தைக் கூட்டி பாலம் திறக்கப்படும் செய்தியை அறிவித்த பிறகே அதைப் பொதுமக்களுக்கு திறந்துவிட்டது.
ஆனால், கட்டுமான வேலைகளுக்கு சம்பந்தமில்லாத ஒரு நிறுவனத்திற்கு அந்தப் பணி ஒப்படைக்கப்பட்டதற்கு நிச்சயமாக குஜராத் அரசாங்கத்தை நடத்திவரும் பாஜகதான் முழுக்காரணம் என்ற உண்மையை முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பதுபோல மூடிமறைக்கின்றன.
அக்கட்சியும் அதன் அரசாங்கமும் இந்த அக்கிரமத்திற்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொண்டுவர உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவதில் நியாயம் உண்டு. ஆனால், நீதியும் நியாயமும் என்ன விலை என்ற கேள்வி கேட்கும் சங் பரிவாரம் இதற்கு மசியாது.
அப்படியே மசிந்தாலும், தான் வைத்திருக்கும் நீதிபதிகளின் அணியிலுள்ள ஒருவரை விசாரணை ஆணையத்தின் தலைவராக நியமிக்கும்.
கோவையில் நடக்கவிருந்த பயங்கரவாதச் செயல்களை முளையிலேயே கிள்ளியெறிந்த தமிழகக் காவல் துறையினரைத் தொடர்ந்து அவதூறு செய்துவரும் அண்ணாமலையும் ஆளுநர் ரவியும் இதைப் பற்றி வாய் திறப்பார்களா?.
எப்படியிருந்தாலும், மக்களுக்கு ’இலவசங்கள்’ என்று பாஜக வைத்திருப்பது மரணங்களே என்பதை குஜராத் தொங்கு பால நிகழ்வு ஐயந்திரிபுற மீண்டுமொருமுறை மெய்ப்பித்துவிட்டது.
.கட்டுரையாளர் குறிப்பு
எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.
ரஷ்ய அதிபர் பதவியில் இருந்து புதினை நீக்க ஆலோசனை!
10 மணி நேரத்திற்கு பிறகு சீரானது இன்ஸ்டாகிராம்!