அரசு வழங்கும் இலவச காலணி மாணவிக்கா? அம்மாவுக்கா?

அரசியல்

அரசு வழங்கும் இலவசங்கள் பற்றி இப்போது தேசிய அளவில் விவாதங்கள் எழ ஆரம்பித்துவிட்டன. 

உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில்…  அரசியல் கட்சிகள் இலவசங்கள் தொடர்பான தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுக்கும்போது அதற்கான நிதி ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையமும் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு வழங்கி வரும் பள்ளிக் காலணிகளுக்கான அளவு,  மாறி மாறி இருப்பதாக மாணவர்கள் தரப்பில் இருந்து  முணுமுணுப்புகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். கிஷோர் குமார் நம்மிடம், 

“இலவசம் என்றாலே கொடுத்ததை வாங்கிகொள்ள தான் வேண்டுமா, அதை எதிர்த்து கேள்வி கேட்ககூடாதா  என்ற மனநிலையில் தமிழக மக்கள் இருக்கிறார்கள். அமைச்சர்கள் வேறு இதை ஓசி என்று சொல்லிக் காட்டுகிறார்கள். 

ஆனால் அந்த இலவச பொருளே நமது வரிப் பணத்திலிருந்து தான் அரசு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட கொடுக்கிறது என்பதை நாம் சிந்திக்க மறந்துவிடுகிறோம்.

இப்படியான சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது. அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலணிகளை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது.

இது ஒரு நல்ல திட்டம். ஆனால் இந்த திட்டம் சரியாக ஆய்வு செய்யப்படாததால்  சில நாட்களுக்கு முன்பாக மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு, 12 ஆம்  வகுப்பு பயிலும் மாணவர்கள் அணிவது போன்றதொரு காலணி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவம் அங்கொன்றும், இங்கொன்றும் இல்லை திருச்சி மாவட்டத்தில் பரவலாக உள்ளது என எங்களுக்குத் தகவல்கள் வந்திருக்கின்றன.

திருச்சி பாலக்கரையில் படிக்கும் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அக்குழந்தையின் தாயார் கால் சைசுக்கு இலவச காலணி வழங்கப்பட்டுள்ளது.

அந்த குடும்பத்தினரே என்னிடம் அந்த காலணிகளை காட்டி வருத்தப்பட்டனர். இப்போது அந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட காலணியை  அம்மாதான் பயன்படுத்தி வருகிறார். 

மாணவர்களுக்கு காலணி என்பது சிறப்பான திட்டம். ஆனால் இதை செயல்படுத்தும் உயர் அதிகாரிகள் கவனமின்றி செயல்பட்டிருக்கிறார்கள்.  யாருக்காக அரசு இலவசத் திட்டங்களை செயல்படுத்துகிறதோ அவர்களுக்கு அது பயன்பட வேண்டும். 

எனவே  பள்ளிக் கல்வி அமைச்சரான அன்பில் மகேஷ் இதில் கவனம் செலுத்தி மாணவர்களுக்கு அன்சைஸ் காலணிகள் வழங்கப்படாமல் இருக்க ஆவண செய்ய வேண்டும்” என்கிறார்.

ஏற்கனவேயும் இதேபோன புகார்கள் எழுந்திருக்கின்றன.  அதிமுக ஆட்சியில்  2011  ஆம் ஆண்டு மாணவர்களிடம் எடுக்கப்பட்ட கால் அளவின்படி,  2014 ஆம் ஆண்டில் இலவச காலணிகளை வழங்கினர்.

”நாள் தோறும் வளர்ந்துகொண்டிருக்கும் மாணவச் செல்வங்களுக்கு  மூன்று வருடத்துக்கு முந்தைய கால் அளவு எப்படி சரியாக இருக்கும்?”  என்று அப்போதே பெற்றோர்கள், ஆசிரியர்கள் எல்லாம் குமுறினார்கள்.

பத்து வருடங்கள் ஆனபோதும் காலணிகளின் அளவுக் குளறுபடிகள் குறையவில்லை.

வேந்தன்

சிறப்புக் கட்டுரை : இலவசம் எதுவென தீர்மானிப்பது அதிகாரம் யார் வசம் என்பதே!

இலவசம்: உச்சநீதிமன்றத்தில் திமுக வென்ற, கலர் டிவி கதை தெரியுமா?

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *